under review

பி.யூ. சின்னப்பா

From Tamil Wiki
பி.யூ. சின்னப்பா

பி.யூ. சின்னப்பா (மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951) தமிழ் நாடக, திரைப்பட நடிகர், பாடகர், தயாரிப்பாளர்.

பி.யூ. சின்னப்பா

பிறப்பு, கல்வி

பி.யூ. சின்னப்பா மே 5, 1916-ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளை, மீனாட்சி இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் சின்னசாமி. உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். பி.யூ. சின்னப்பா புதுக்கோட்டையில் நொண்டி வாத்தியார் பள்ளிக்கூடத்தில், நான்கைந்து ஆண்டுகள் படித்தார். பள்ளிக்கூடத்தை விட்டு விலகி சிலம்பம், மல்லு, குஸ்தி ஆகியவற்றையும் பழகினார். குடும்பப் பொருளாதாரச் சிக்கல் காரணமாக பி.யூ. சின்னப்பா நூல் கடையில் பணியில் சேர்ந்தார். அவ்வேலை பிடிக்காத்தால் நாடக நிறுவனமொன்றில் சேர்ந்தார்.

சகுந்தலா

தனி வாழ்க்கை

பி.யூ. சின்னப்பா ஜூலை 5, 1944-ல் பிருத்விராஜ் படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலாவைத் திருமணம் செய்துகொண்டார். மகன் பி.யு.சி. ராஜாபகதூர். கோயில் புறா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். திரையுலகின் மூலம் பெரும்பணம் சம்பாதித்த பி.யூ. சின்னப்பா புதுக்கோட்டையில் அதிக வீடுகளை வாங்கினார். புதுக்கோட்டை சமஸ்தானம் இவர் வீடு வாங்கத் தடை விதித்தது.

நாடக வாழ்க்கை

பி.யூ. சின்னப்பா

சின்னப்பாவின் தந்தை நாடக நடிகர். அவருடன் இணைந்து ஐந்து வயதிலேயே பாடக் கற்றுக் கொண்டார். சதாரம் நாடகத்தில் பி.யூ. சின்னப்பா குட்டித் திருடனாகத் தோன்றி பல பரிசுகளைப் பெற்றார். தம் 8-ஆவது வயதில் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் பழனியப்பிள்ளை நடத்தி வந்த 'தத்துவ மீன லோசனிவித்வ பால சபா' வில்சேர்ந்தார். இக்கம்பனியில் டி.கே.எஸ். சகோதரர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வந்ததால் பி.யூ. சின்னப்பாவிற்கு எளிய வேடங்களே கிடைத்தன. பி.யூ. சின்னப்பா தத்துவ மீன லோசனிவித்வ பால சபாவிலிருந்து விலகி மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, அப்போது புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரங்கில், தங்கள் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தனர். பிரகதாம்பாள் தியேட்டரின் முதலாளி நாராயணன் செட்டியார் சின்னப்பாவின் பாடல்களைக் கேட்டார். அவருடைய சிபாரிசில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் உரிமையாளர் சச்சிதானந்தம் பிள்ளை பி.யூ. சின்னப்பாவை 15 ரூபாய் சம்பளத்தில் 3 வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்து சேர்த்துக் கொண்டார். பி.யூ. சின்னப்பாவின் ”சதி அனுசுயா” பாடலைக் கேட்டு வியந்த சச்சிதானந்தம் பிள்ளை அன்றே சம்பளத்தை 75 ரூபாய் உயர்த்தி கதாநாயகனாக வேடமளித்தார். பி.யூ. சின்னப்பாவை மிக விரைவிலேயே ராஜபார்ட் போன்ற வேடங்களில் நடிக்க வைத்தார். புராண நாடகங்களில் மட்டுமல்லாமல் சந்திர காந்தா ராஜேந்திரன் போன்ற சமூக நாடகங்களிலும் சின்னப்பா தனிப் புகழ் பெற்றார். குரல் உடைவுக்குப் பின் பி.யூ. சின்னப்பா தனது 19-ஆவது வயதில் நாடகக் கம்பனியிலிருந்து விலகினார். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியை விட்டபின் சின்னப்பா ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார்.

திருவையாறு சுந்தரேச நாயனக்கார், காரைநகர் வேதாசல பாகவதர் ஆகியோரிடம் சின்னப்பா சங்கீதம் கற்றுக்கொண்டார். வர்ணம், பல்லவி, ஸ்வரம் கற்றார். நன்னய்ய பாகவதர், புதுக்கோட்டை சிதம்பர பாகவதர், போன்றோரிடம் இசைப்பயிற்சி பெற்று இசைக்கச்சேரிகள் செய்தார். தால்மியான் கொட்டடி என்கிற சாமியாசாரி கொட்டடியில் சேர்ந்தார். புதுக்கோட்டையில் இராமநாத ஆச்சாரியாரிடம் சிலம்பம், பாணாத்தடி வீசுதல், கத்திச் சண்டை, சுருள் பட்டா வீசிதல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார். எஸ்.ஆர். ஜானகியின் நாடகக் கம்பெனியில் சேர்ந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். சத்தியா பிள்ளை என்ற வாத்தியாரிடம் அவர் குஸ்தி கற்றுக்கொண்டார். ஸ்பெஷல் நாடகங்களுக்கு போய் வந்த நேரத்தில் சின்னப்பா, கந்தசாமி முதலியாரை மானேஜராகக் கொண்ட ஸ்டார் தியேட்டர்கள் என்ற கம்பெனியில் சேர்ந்து, அந்த குழுவுடன் ரங்கூனுக்குப் போய் நாடகங்களில் நடித்து விட்டு வந்தார்.

பி.யூ. சின்னப்பா
சக நடிகர்கள்
  • டி.கே.எஸ். சகோதரர்கள்
  • எம்.ஆர்.சுவாமிநாதன்
  • எம்.ஆர். ஜானகி
  • எம்.ஜி. ராமச்சந்திரன்
  • எம்.ஜி. சக்கரபாணி
  • பி.ஜி. வெங்கடேசன்
  • எம்.கே. ராதா
  • பொன்னுசாமி
  • அழகேசன்
  • காளி என்.ரத்தினம்
  • பி.எஸ்.சிவபாக்கியம்
  • சந்தானலட்சுமி

திரை வாழ்க்கை

பி.யூ. சின்னப்பா

நாடக சபாவிலிருந்து விலகி குஸ்தி சண்டைப்பயிற்சி வகுப்புகள் நடத்தினார். பி.யூ. சின்னப்பாவைப் பற்றி கேள்விப்பட்டிருந்த ஜூபிடர் பிக்சர்கள் தங்களின் “சவுக்கடி சந்திரகாந்தா” படத்தில் வாய்ப்பு கொடுத்தனர். 1936-ல் சவுக்கடி சந்திரகாந்தா திரைப்படம் மூலம் பி.யூ. சின்னப்பா திரை உலகிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தில் சுண்டூர் இளவரசனாக சின்னசாமி என்ற பெயரிலேயே அவர் நடித்தார். தொடர்ந்து 1938-ல் பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி போன்ற படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் பி.யூ. சின்னப்பாவை 1940-ல் தனது உத்தம புத்திரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார். தமிழில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்தவர் பி.யூ. சின்னப்பா. ஆர்யமாலா என்ற படத்தில் பத்து வேடங்களில் நடித்தார்.

பி.யூ. சின்னப்பா

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் மனோன்மணி(1942) திரைப்படம் வசூலில் வெற்றியடைந்தது. டி.ஆர். ராஜகுமாரியுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தார். ஜகதலப்பிரதாபனில் பிரதாபனாகத் தோன்றி ஐந்து இசைக்கருவிகளை வாசித்தார். மங்கையர்க்கரசியில் மூன்று வேடங்களில் நடித்தார். இப்படத்தில் அவர் பாடிய ”காதல் கனிரசமே..” பாடல் பிரபலமானது.

பி.யூ. சின்னப்பா இருபத்தியாறு திரைப்படங்களில் நடித்தார். பி.யூ. சின்னப்பா நடித்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை படைத்த தமிழ் படங்கள் ஆர்யமாலா, கண்ணகி, மனோன்மணி, ஜெகதலப்ரதாபன், கிருஷ்ணபக்தி, ரத்னகுமார், விகடயோகி ஆகியவை. 1951-ல் பி.யூ. சின்னப்பா நடித்த சுதர்ஸன் அவரின் இறுதி திரைப்படம். பி.யூ. சின்னப்பா நடித்து வெளிவராத படம் கட்டபொம்மு (1948).

மறைவு

பி.யூ. சின்னப்பா தனது முப்பத்தியைந்தாவது வயதில் செப்டம்பர் 23, 1951-ல் புதுக்கோட்டையில் காலமானார். இறப்பதற்கு முன் இவர் நடித்து வெளிவந்த படம் வனசுந்தரி. கடைசியாக இவர் நடித்துக்கொண்டிருந்த படம் சுதர்சன் இவர் இறந்தபின்னர் வெளிவந்தது. தன் இறுதிக்காலங்களில் இவர் வறுமையில் இருந்தார்.

நடித்த நாடகங்கள்

  • சதாரம்
  • பாதுகா பட்டாபிஷேகம் (பரதன்)
  • சந்திரகாந்தா
  • ராஜம்மாள்
பி.யூ. சின்னப்பா திரைப்படங்கள்

நடித்த திரைப்படங்கள்

  • சவுக்கடி சந்திரகாந்தா (1936)
  • ராஜமோகன் (1937)
  • அனாதைப் பெண் (1938)
  • பஞ்சாப் கேசரி (1938)
  • யயாதி (1938)
  • மாத்ரு பூமி (1939)
  • உத்தம புத்திரன் (1940)
  • ஆர்யமாலா (1941)
  • தயாளன் (1941)
  • தர்மவீரன் (1941)
  • கண்ணகி (1942)
  • மனோன்மணி (1942)
  • பிருத்விராஜன் (1942)
  • குபேர குசேலா (1943)
  • ஹரிச்சந்திரா (1944)
  • ஜகதலப் பிரதாபன் (1944)
  • மகாமாயா (1944)
  • அர்த்தனாரி (1946)
  • துளசி ஜலந்தர் (1947)
  • பங்கஜவல்லி (1947)
  • கிருஷ்ண பக்தி (1949)
  • மங்கையர்க்கரசி (1949)
  • ரத்னகுமார் (1949)
  • சுதர்சன் (1951)
  • வனசுந்தரி (1951)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page