under review

நெடுநல்வாடை

From Tamil Wiki

நெடுநல்வாடை சங்க இலக்கிய நூல் தொகுதியான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. நெடுநல்வாடையை இயற்றியவர் நக்கீரர்.

ஆசிரியர்

நெடுநல்வாடை நூலை எழுதியவர் நக்கீரர். பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். நக்கீரர் பத்துப்பாட்டு தொகுப்பிலுள்ள திருமுருகாற்றுப்படை நூலையும் இயற்றியுள்ளார்.mசங்கப்பாடல்கள் சிலவற்றில், சங்ககாலப் புலவர் நக்கீரரின் பெயர் 'நக்கீரன்', நக்கீரனார்', 'மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்' என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் நக்கீரர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் 37 பாடல்கள் உள்ளன.

பெயர்க்காரணம்

நெடுநல்வாடையில் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற கூதிர்ப்பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இந்நூல் நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

இப்பெயர் ‘நெடிய நல்ல வாடை’ என்பதால் பண்புத் தொகையாயிற்று. தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு நெடிதாகத் தோன்றும் வாடையைக் கூறுவதால் இப்பாடல் பாலைத் திணைக்குரிய உரிப்பொருளை உணர்த்திற்று (பிரிதலும் பிரிதல் நிமித்தமும்). வேற்று நிலத்திற்குப் போய்ப் போரினை வென்ற மன்னனுக்கு இது நல்லதாகிய வாடை ஆயிற்று. இது பாலைக்குப் புறனாகிய வாகைத் திணை ஆகும். வாகை தானே பாலையது புறனே (தொல்காப்பியம், புறத்திணையியல் 15).

அகம்-புறம் குறித்த விவாதம்

நெடுநல்வாடை அகத்திணையா, புறத்திணையா என்ற கேள்வியை எழுப்பியவர் நச்சினார்க்கினியர் இவர் நெடுநல்வாடை தோன்றிய காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்ட காலத்தில் தோன்றியவர். நெடுநல்வாடையில் புறச்செய்திகள் பேசப்பட்டாலும், இறுதி நிலையில் சாராம்சமாக அகமே பேசப்படுகிறது. ஆயினும் தொல்காப்பியரின் விதிப்படி, அது அகத்துறை நூல் அன்று என நச்சினார்க்கினியர் கருதுகிறார்.

அன்பின் ஐந்திணையில் 'தலைவனோ தலைவியோ சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்’ - தொல்காப்பியர். நெடுநல்வாடையில் தலைவனின் இயற்பெயர் சுட்டப் பெறவில்லைதான்; ஆனால், 'வேம்பு தலையாத்த நோன்காழ் எஃக'ம் எனப் பாண்டிய மன்னர்களின் அடையாளப் பூவாகிய வேப்பம்பூவைக் கூறியமையால் இது அகத்துறை நூல் அல்ல என நச்சினார்க்கினியர் கருதினார். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே என்று அவர் உறுதிபடக் கூறினார்.

ஆனால், அதற்குரிய சான்று நெடுநல்வாடையில் இல்லை. பாட்டுடைத் தலைவனின் இயற்பெயர் சுட்டப்பெறாத போது தொல்காப்பியர் வழிநின்று கூட அதனைப் புறம் என்று கூற விதிகள் இல்லை. இருப்பினும் நச்சினார்க்கினியார் விதி முறைத் திறனாய்வை மனதிற் கொண்டு அவ்வாறு அதனை அகம் என்று கூறுவதை மறுத்துப் 'புறம்’ என்று கூறுகிறார்.

நூல் அமைப்பு

நெடுநல்வாடை நூல் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாக சிலர் கருதுவர். பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்து அகப் பொருளையே பேசினாலும் நெடுநல்வாடை புறத்திணை நூல்களின் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.

வாடைக்காற்று, ஆயர்கள், ஆநிரைகள், பறவைகள், விலங்குகள், மக்கள் முதலியவர்களுக்கு வாட்டம் தந்து நடுக்கமுறச் செய்கிறது. இடையில் தலைவனைப் பிரிந்து துயருறும் தலைவியின் செய்தி கூறப்படுகின்றது. தலைவிக்கு வாடை நீண்டதாக இருக்கிறது.அரண்மனை, அந்தப்புரம், கட்டில் முதலியன பாங்குற வர்ணிக்கப்படுகின்றன. புனையா ஓவியம்போல் கிடக்கிறாள் அரசமாதேவி. அவள் உறையும் அந்தப்புரம் கலை மேம்பாட்டுடன் சிறந்து விளங்குகின்றது. போருக்குச் சென்ற தலைவன் பாசறையில் உறக்கம் கொள்ளாது நள்ளிரவில் தீவட்டி உடன்வரச் சென்று போரில் புண்பட்ட வீரர்களுக்கு இனிய ஆறுதல் மொழிகளைக் கூறிவருகிறான். தலைவனுக்கும் வாடை நன்மை தருவதாகவும், நீண்டதாகவும் அமைந்தது.

நெடுநல்வாடை ஆசிரியப்பாவால் ஆன 188 அடிகளைக் கொண்டது. நூலில் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற கூதிர்ப்பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இந்நூல் நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். இந்நூல் 188 அடிகளுடன் கீழ்காணுமாறு அமைந்துள்ளது;

வெள்ளம் ( அடி 1-2 )

கோவலர் நிலை ( அடி 3-8 )

விலங்கு பறவை முதலியவற்றின் நிலை ( அடி 9-12 )

கூதிர்ப்பருவ நிகழ்வுகள் ( அடி 13-20 )

நீர்வளம், நிலவளம் ( அடி 21-28 )

முழுவலி மாக்கள் செயல் ( அடி 29-85 )

மகளிர் வழிபாடு ( அடி 36-44 )

கூதிர்க்காலம் நிலைபெற்றமையால்

நேர்ந்த விளைவுகள் (அடி 45-48)

மங்கையர் கோலம் ( அடி 49-56 )

பயன்படாதவை ( அடி 57-63)

குளிர்காய்தல் ( அடி 64-66 )

ஆடல் மங்கையர் ( அடி 67-70 )

கூதிர்க்காலம் ஆனது ( அடி 71-73 )

அரண்மனை ( அடி 72-79 )

கோபுர வாயில் அமைத்தல் ( அடி 80-86 )

முன்றில் ( அடி 87-100 )

அருங்கடிவரைப்பு ( அடி 101-107)

கருப்பக்கிரகம் ( அடி 108-114 )

பாண்டில் என்ற கட்டில் ( அடி 115-123)

கட்டில் அலங்காரம் ( அடி 124-131)

மென்மையான அணை ( அடி 132-135 )

தேவியார் துணை துறந்திருக்கின்றமை ( அடி 136-147)

தோழியர் செய்கை ( அடி 148-151)

செவிலியர் உரை ( அடி 152-156 )

அரிவையின் ஒழுக்கம் ( அடி 156-166)

கொற்றவையை வேண்டல் ( அடி 167-168 )

போரில் விழுப்புண் பட்ட வீரர் ( அடி 168-172)

வாடைக்காற்று ( அடி 173-175)

விழுப்புண் காட்டுதல் ( அடி 176-180 )

வேந்தன்‌ கண்டான் விழுப்புண் ( அடி 181-188)

பாடல் நடை

தலைவியின் நிலை

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடு வீழ் தாழத் துணை துறந்து
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,
நெடு நீர் வார் குழை களைந்தென குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின், 140
பொலந்தொடி தின்ற மயிர் வார் முன் கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் 145
அம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப (136-147)

தலைவியின் முத்து மாலையைத் தாங்கிய பெரிய முலைகளையுடைய மார்பின் மேல் இப்பொழுது ஒரு தாலி (சங்கிலி) மட்டுமே தொங்கியது. கணவனிடமிருந்து பிரிந்ததால் அவளுடைய அழகிய நெற்றி ஒளியை இழந்தது. நெற்றியில் உலர்ந்த மென்மையான கூந்தல் படர்ந்திருந்தது. மிகுதியான ஒளியையுடைய நீண்ட காதணிகளை நீக்கித் தாளுறை என்ற காதணிகளை அணிந்திருந்தாள், சிறிது தொங்கும் காதுகளில். பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய மயிரையுடைய முன் கையில் வலம்புரிச் சங்கினால் செய்த வளையல்களுடன் காப்பு நூலைக் கட்டியிருந்தாள். வாளை மீனின் பகுத்த வாயைப் போலத் தோன்றும் வளைந்த சிவப்பு நிறமுடைய மோதிரத்தைச் செவ்விரலில் அணிந்திருந்தாள். மென்மையான ஆடையை முன்பு இடுப்பில் அணிந்த அவள் இப்பொழுது அழகிய மாசு உடைய ஒளியுடைய நூல் ஆடையுடன் புனையாத ஓவியத்தைப் போன்று இருந்தாள்.

அரசனின் நிலை

………………………..மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தடக்கை நில மிசைப் புரள, 170
களிறு களம் படுத்த பெருஞ்செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய, புறம் போந்து,
வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல
பாண்டில் விளக்கில் பரூஉச்சுடர் அழல, 175
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறை முறை காட்டப் பின்னர் (168-177)

ஒளியுடைய முக அணிகலன்களுடன் பொலிந்த, போர்த்தொழிலைக் கற்ற யானைகளின் நீண்ட திரண்ட பெரிய தும்பிக்கைகள் நிலத்தின் மேல் விழும்படி ஆண் யானைகளைக் கொன்று, பெரிய மறச்செயலை செய்த மறவர்களின் ஒளியுடைய வாளினால் ஏற்பட்ட புண்களைக் காணும் பொருட்டு, தன் பாசறை இருக்கையிலிருந்து வெளியே வந்தான் மன்னன். குளிர்ந்த வாடைக் காற்று வீசும்பொழுதெல்லாம் அசைந்து தெற்கில் உயர்ந்து சாய்ந்து பருத்த சுடருடன் எரியும் நல்ல பல அகல் விளக்குகள் எரிந்தன. வேப்ப இலைகளை மேலே கட்டிய வலிமையான காம்பையுடைய வேலொடு மன்னனுக்கு முன் நடக்கும் படைத் தலைவன், புண்பட்ட மறவர்களை முறை முறையாக மன்னனிடம் காட்டினான்.

உசாத்துணை


✅Finalised Page