நூழிலாட்டு
நூழிலாட்டு தும்பைத் திணையின் துறைகளில் ஒன்று. வேலை ஆட்டுதல் என்பது இதன் பொருள். வீரன் தன் மார்பில் பாய்ந்த வேலைப் பறித்து எதிரிகளை ஓட்டுதலைக் கூறுவது நூழிலாட்டு.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் போர்க்களத்துக் கூடிய படைகள் ஓடத் தன் மார்பில் பதிந்த வேலைப் பறித்து எறிந்தது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
களம் கழுமிய படை இரிய
உளம் கிழித்த வேல் பறித்து ஓச்சின்று(கொளு 7.16)
வெண்பா
மொய்அகத்து மன்னர் முரண்இனி என்னாம்கொல்
நையகத்துக் கொண்டான் கழல் விடலை - வெய்ய
விடுசுடர் சிந்தி விரை அகலம் போழ்ந்த
படுசுடர் எ.கம் படுந்து (142)
பொருள்: வீரக்கழலினை உடைய இவ்வீரன், வெய்தான மிகுகனலைச் சிதறி, மணம் நாறும் தன் மார்பைப் பிளந்த ஒளிதோன்றும் வேலினைப் பறித்துத், தன் கையில் பற்றிக் கொண்டான்;. இனிப், போரிடத்துப் பகைவேந்தரின் நிலை என்னாகுமோ? - பகைவர் அழிவரென்பது கருத்து வேலைப் பறித்த அவனும் சாவான் என்று இரங்குதலும் ஆகும்.
எடுத்துக்காட்டு
புறநானூறு 309
- பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கோசிகனார்.
- திணை: தும்பை ; துறை: நூழிலாட்டு
இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்அரா உறையும் புற்றம் போலவும்
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை 5
உளன்என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.
பொருள்: இரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்கி, ஒடியுமாறு பகைவரைக் கொன்று அவர்களைப் போரில் வெல்லுதல் எல்லா வீரர்களுக்கும் எளிதாகும். நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும், கண்டாரைக் கொல்லும் காளை திரியும் பொதுவிடம் போலவும், வெல்லுதற்கு அரிய வலிமையுடைய பகைவர், இவன் பாசறையில் உள்ளான் எனக் கேட்டு நெஞ்சம் நடுங்கும்படியான சிறந்த புகழ், வெற்றி மிக்க நெடிய வேலினையுடைய நம் தலைவனிடம் மட்டுமே உள்ளது.
புறநானூறு 310
- பாடியவர்: பொன்முடியார்
- திணை:தும்பை; துறை: நூழிலாட்டு
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும் மனனே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.
பொருள்: இளையோனாக இருந்தபொழுது பாலை ஊட்டினால் இவன் உண்ணமாட்டன். அதனால், சினம் கொள்ளாமல் சினம் கொண்டதுபோல் நடித்து ஓங்கிய சிறுகோலுக்கு அஞ்சிப் பால் உண்டவன் பொருட்டு வருந்தும் மனமே! இவன் முன்னாள் போரில் இறந்த வீரனின் மகன் என்பதற்கேற்ப, புள்ளிகள் பொருந்திய நெற்றியையுடைய யானைகளைக் கொன்றும் அவ்வளவில் நில்லாதவனாக, மார்பில் புண்படுத்தி ஊன்றி நிற்கும் அம்பைச் சுட்டிக் காட்டியபொழுது, 'அதை நான் அறியேன்' என்று கூறினான். அவன் இப்பொழுது குதிரையின் பிடரிமயிர் போன்ற குடுமியுடன், குறுந்தாடியுடன் கேடயத்தின்மேல் விழுந்து கிடக்கிறான்
உசாத்துணை
தும்பைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Jul-2025, 10:11:25 IST