under review

நார்த்தாமலை சிவன் குடைவரை கோவில்

From Tamil Wiki

To read the article in English: Narthamalai Shiva Rock Cut Temple. ‎


நார்த்தாமலை சிவன் குடைவரை கோவில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள முத்தரையர் கால கோவில். இக்கோவில் 9-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் சாத்தன் பழியிலி என்ற முத்தரைய சிற்றரசரால் அமைக்கப்பட்டது.

நார்த்தாமலை சிவன் - மூலவர்

கோவில் அறிமுகம்

நார்த்தாமலை சிவன் குடைவரை கோவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது. இக்கோவில் 9-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் சாத்தன் பழியிலி என்ற முத்தரைய சிற்றரசரால் அமைக்கப்பட்டது. கல்வெட்டில் இக்கோவிலின் பெயர் 'பழியிலி ஈஸ்வரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோவிலின் மூலவராக, சிவலிங்கம் வழிபடப்படுகிறது. கோவிலின் ஆகம முறைகள், தலபுராணங்கள், இலக்கிய சான்றுகள் பற்றிய விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

இடம்

நார்த்தாமலை சிவன் குடைவரை கோவில் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 19.5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள நார்த்தாமலை என்ற ஊரில் அமைந்துள்ளது.

ஊரின் வடமேற்கே மேலமலை எனும் பாறைக்குன்று வடக்கிலிருந்து தெற்காக நீண்டுள்ளது. இந்த குன்றின் கிழக்குப் பகுதியில்சிவன் குடைவரை கோவில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு, பெயர்

நார்த்தாமலை சிவன் குடைவரை கோவில் பற்றிய முதன்மையான வரலாற்று செய்திகள் கே.ஆர். வெங்கடராம ஐயர் மற்றும் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்குள்ளும் நார்த்தாமலை ஊரிலும் காணப்படும் கல்வெட்டு சான்றுகளைக் கொண்டு கோவில் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

ஊரின் தற்போதைய பெயரான நார்த்தாமலை என்பது 'நகரத்தார் மலை' என்னும் பெயரில் இருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 'நகரம்' என்பது இக்கிராமத்தில் வாழ்ந்த வணிகர்களின் கூட்டமைப்பு. இந்த அமைப்பு, கோவில் சொத்துக்களை நிர்வாகித்தல், நிலங்களுக்கு வரிவிலக்கு செய்தல், நிலம் கைமாறும் விவரங்களை சாசனமாக பதிவு செய்தல் போன்ற பொதுப்பணிகளை கவனிக்கும் உள்ளாட்சி அமைப்பாகவும் இருந்துள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் 'நகரத்தார்' என அழைக்கப்பட்டனர்.

கோவிலின் கருவறை 9-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் சாத்தன் பழியிலி என்ற முத்தரையரால் அமைக்கப்பட்டது. கோவிலின் முகமண்டபம் சாத்தன் பழியிலின் மகனால் பின்பு கட்டப்பட்டது.

ஆய்வாளர்களின் கருத்துகள்

கே.ஆர். வெங்கடராம ஐயர், இக்கோவிலை கட்டிய சாத்தன் பழியிலி, பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (பொ.யு. 826 - 849) மற்றும்பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லபன் (பொ.யு. 815 - 862) ஆகியோரின் காலத்தை சேர்ந்தவர் என கருதுகிறார்.

எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், அதை சற்று மறுத்து இக்கோவிலை கட்டிய சாத்தன் பழியிலி, பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (பொ.யு. 826 - 849) ஆட்சியின் இறுதி பகுதி மற்றும்நிர்பதுங்க வர்மன் (பொ.யு. 862 - 888) ஆட்சியின் தொடக்க பகுதிக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதுகிறார்.

தொன்மம்

இலங்கையில் ராம - ராவண போரின் பொழுது படைவீரர்களின் காயங்களை குணப்படுத்த இமாலய உச்சியில் உள்ள சஞ்சீவி மலையை அனுமன் இலங்கைக்கு எடுத்துச் சென்றார். அந்த மலையை இலங்கையில் இருந்து திரும்ப கொண்டுவரும் பொழுது மலையில் இருந்து தவறி விழுந்த சிறு குன்றுகள் தான் நார்த்தாமலை கிராமத்தை சுற்றியுள்ள மலைகள் என்று நம்பப்படுகிறது. இம்மலைகள் மூலிகை செடிகள் நிறைந்ததாகவும் அதனால் வைத்தியர்கள் அடிக்கடி வரும் இடமாகவும் கருதப்படுகிறது.

பெருங்கலூர் தலபுராணத்தின்படி இவ்வூர், நாரத முனிவர் பெயரிலிருந்து 'நாரதர் மலை' என அழைக்கப்பட்டு பின்பு நார்த்தாமலை என மாறியுள்ளது.

கோவில் தெய்வங்கள்

மூலவர்

கோவிலின் மூலவரான சிவலிங்கம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வட்ட வடிவ ஆவுடையின் மேல் கருங்கல்லால் ஆன லிங்கம் காணப்படுகிறது.

கோவில் கட்டிடக்கலை அமைப்பு

நார்த்தாமலை சிவன் - அடித்தளம்

நார்த்தாமலை சிவன் குடைவரை கோவிலின் கருவறை, பாறையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி உள்ள கருவறைக்கு முன்புறம் கருங்கல்லால் கட்டப்பட்ட முகமண்டபம் உள்ளது.

கருவறையின் வாயிலுக்கு முன்பு ரிஷபம் காணப்படுகின்றது.

இக்குடைவரையின் இடப்புறம் அதே பாறையில் விஷ்ணு குடைவரை எனும் மற்றொரு குடைவரை கோவில் உள்ளது. இவ்விரு குடைவரைகளுக்கும் நேர் எதிரே விஜயாலய சோழீஸ்வரம் என்ற கருங்கல் கோவில் அமைந்துள்ளது.

கருவறை

நார்த்தாமலை சிவன் - இடப்புற துவார பாலர்

பாறையை குடைந்து செய்யப்பட்ட கருவறை, உள்புறத்தில் 2.3 மீட்டர் நீளமும் 2.4 மீட்டர் அகலமும் கொண்ட செவ்வக வடிவமாக உள்ளது. உயரம் 2 மீட்டராக உள்ளது.

முகமண்டபம்

கருங்கல்லால் கட்டப்பட்ட முகமண்டபத்தில் தற்போது அடித்தளம் மட்டுமே உள்ளது. கல்வெட்டில் உள்ள குறிப்புகள் மற்றும் சிதைவடைந்த மற்ற பகுதிகளை வைத்து பார்க்கும் பொழுது முற்காலத்தில் இது முழு மண்டபமாக கூரைப்பகுதியுடன் இருந்திருக்க வேண்டும்.

மண்டபத்தின் அடித்தளம் (அதிஷ்டானம்) உபபீடம், உபானம், ஜகதி, விருத்த குமுதம் மற்றும் கண்டம் போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. கண்டத்தில் பூதவரிகள் உள்ளன. கண்டத்தின் ஓரப் பகுதிகளில் யாளியின் மீது வீரர்கள் அமர்ந்தவாறு சிற்பங்கள் காணப்படுகின்றன. பிரதிபந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.

முகமண்டபத்தில் கருவறைக்கு முன்பு ரிஷபம் அமைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு குறிப்புகளின் படி, முற்காலத்தில் முகமண்டபத்திற்கு முன் உள்ள ரிஷப மண்டபத்தில் (தற்போது ரிஷப மண்டபம் இல்லை) இந்த ரிஷபம் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கருவறை வாயிலின் இருபுறமும் இரு துவார பாலர் சிற்பங்கள் உள்ளன. இடப்புற துவார பாலர் சிற்பம், திரிபங்கமாக ஸ்வஸ்திக ஸ்தானகத்தில் ஜடாமகுடம் மற்றும் பத்ர குண்டலத்துடனும் காணப்படுகின்றது. வலது கை கதையின் மீது பல்லவ ஹஸ்தமாகவும் இடதுகை சூசி ஹஸ்தமாகவும் உள்ளது. வலப்புற துவார பாலர் சிற்பம், ஊர்த்துவ ஜானுவாக ஜடாமகுடம் மற்றும் பத்ரகுண்டலத்துடனும் காணப்படுகின்றது. வலது கை கதையின் மீது பல்லவ ஹஸ்தமாகவும் இடதுகை விஸ்மய ஹஸ்தத்திலும் உள்ளது.

சிற்பங்கள் பட்டியல்

நார்த்தாமலை சிவன் குடைவரை கோவிலில் மூலவர் சிவலிங்கம், துவார பாலர்கள் மற்றும் ரிஷபம் போன்ற சிற்பங்கள் உள்ளன.

கல்வெட்டுகள்

பல்லவர் கால கல்வெட்டு
  • பல்லவ மன்னன் நிர்பதுங்க வர்மனின் (பொ.யு. 862 - 888) ஏழாம் ஆட்சியாண்டை (பொ.யு. 869) சேர்ந்த கல்வெட்டு முகமண்டபத்தின் வடபுறம் உள்ள குமுதப் பகுதியில் காணப்படுகிறது. 19 வரிகள் கொண்ட இந்த தமிழ் கல்வெட்டு, ஸ்வஸ்தி ஸ்ரீ என்னும் மங்கலச் சொல்லுடன் துவங்குகின்றது. இக்கல்வெட்டின்படி கோவிலை கட்டியவர் 'விடேல் விடுகு முத்தரையன்' மகன் 'சாத்தன் பழியிலி'.சாத்தன் பழியிலியின் மகன் இக்கோவிலுக்கு முகமண்டபமும், ரிஷபமும், ரிஷபக் கொட்டிலும், பலிபீடமும் அமைத்தார். சாத்தன் பழியிலியின் மகளும் 'மினவன் தமிழ் ஆதி அரையன்' என்றழைக்கப்படும் 'மல்லன் அனந்தன்' மனைவியுமான 'பழியிலி சிறிய நங்கை', கோவிலுக்கு மூன்று வேலி நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அர்ச்சனபோகமாக கொடுக்கப்பட்ட இந்நிலம் விற்கவோ, மாற்றப்படவோ முடியாத நிரந்தர சொத்தாக இருக்கும். இந்நிலத்தை அன்னவாயில் கூற்றத்தின்'பெருவிளத்தூர்' சபையின் சாத்தனும் (சபையின் தலைவர்) அவரின் வாரிசுகளும் பேணி பராமரிக்க வேண்டும். நிலத்தின் மூலம் வரும் வருமானத்தைசாத்தன் மற்றும் அவரது வாரிசுகள் அனுபவிக்கலாம். இந்நிலத்திற்காக கொடுக்கப்படும் பாசன வரி போன்ற வரிகள் பழியிலி ஈஸ்வரம் கோவிலுக்கு செலவழிக்கப்பட வேண்டும். இவற்றை மீறுபவர்கள் தண்டனையாக 25 கழஞ்சு பொன், கோவிலுக்குஅபராதமாக கட்ட வேண்டும் எனவும் கோவிலின் வருமானங்களை'பட்டுடையான் உழுதா திரன்' பாதுகாக்க வேண்டும் எனவும் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
  • கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: நிருபதுங்க விக்கிரமருக்கு, விடேல் விடுகு முத்தரையன், சாத்தன் பழியிலி குடைவித்த ஶ்ரீகோயில், முகமண்டபமும் இஷபமும் இஷபக் கொட்டிலும் பலிப்பீடமும் செய்வித்தான், மினவன் தமிழ் ஆதி அரையனான மல்லன் அனந்தனுக்கு புக்க பழியிலி சிறிய நங்கை, அன்னவாயிற் கூற்றத்து பெருவிளத்தூர் சவைஞ் சாத்தன், மூவேலி, எவ்வகைப்பட்ட இறை இதனால் வந்ததெல்லாம் கோவினுக்க, 25 கழஞ்சு பொன் தண்டங்கடவராகவும், பழியிலி ஈஸ்வரத்து, பட்டுடைய உழுதா திரன்[1].

தொடர்புடைய ஆளுமைகள்

  • நார்த்தாமலை சிவன் குடைவரை கோவில் கல்வெட்டுகளின் வாயிலாக கோவிலைக் கட்டி திருப்பணிகள் செய்த ஆளுமைகளாக சாத்தன் பழியிலி, சாத்தன் பழியிலியின் மகன், பழியிலி சிறிய நங்கை ஆகியோர் அறியப்படுகின்றனர்.
  • நார்த்தாமலை சிவன் குடைவரை கோவில் பற்றி நவீன காலகட்டத்தில் வரலாற்றாய்வுகளை தொகுத்தவர்கள் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், கே.ஆர். வெங்கடராம ஐயர், கே.வி. சௌந்தர ராஜன் மற்றும் கே.ஜி. கிருஷ்ணன்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு தொகுதியில் (Inscriptions (Texts) of the Pudukottai State Published by Authority) கல்வெட்டு எண்: 19, பக்க எண்: 11


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Nov-2024, 17:50:33 IST