under review

நவீனத் தமிழிலக்கியம்

From Tamil Wiki

நவீனத் தமிழிலக்கியம் :நவீன காலகட்டத்தில் தமிழில் உருவான இலக்கியம். பொதுவாக அச்சுத்தொழில்நுட்பம், உரைநடை ஆகியவை உருவானபிறகு எழுதப்படும் இலக்கியம் நவீன இலக்கியம் எனப்படுகிறது. Modern Literature என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாக புழக்கத்திற்கு வந்த சொல் இது. பொதுவாக இது காலகட்டத்தை குறிப்பதானாலும் குறிப்பிடத்தக்க தனி இயல்புகளையும் இலக்கணங்களையும் கொண்டுள்ளது

நவீன இலக்கியம் வரையறை

நவீன இலக்கியம் நவீன காலகட்டத்தின் சில அடிப்படை இயல்புகளில் இருந்து உருவான இலக்கிய எழுத்துமுறை. நவீன காலகட்டம் என்பது நவீனத் தொழில்நுட்பத்தின் விளைவாக உருவானது. நவீனத் தொழில்நுட்பம் மானுட இனத்திற்கு கீழ்க்கண்ட நலன்களை அளித்தது

  • பெருந்தொழில் உற்பத்தி முறை
  • நவீனப் போக்குவரத்து
  • நவீனச் செய்தித்தொடர்பு
  • அச்சுத்தொழில்நுட்பம்

இந்த தொழில்நுட்பங்களால் உலகளாவிய அளவில் மானுட சமூக அமைப்பில் மாற்றங்கள் உருவாயின. இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெருந்தொழில்கள் உருவானபோது கைத்தொழில்களைச் சார்ந்து அமைக்கப்பட்டிருந்த சமூக அமைப்பு உடைந்தது. ஆலைத் தொழிலாளர்கள், பொதுத்தொழிலாளர்கள் என்னும் புதிய வகை திறனாளர் தோன்றினர். குடிமரபாக தொழில்களைச் செய்யும் முறை இல்லாமலாகியது. கிராமங்களைச் சார்ந்த வாழ்க்கைமுறையும் மாறத்தொடங்கியது.

பெருந்தொழில்களின் விளைவாக நவீன போக்குவரத்தும் நவீனச் செய்தித் தொடர்பும் உருவாயின. மக்கள் விரைவாக பயணம்செய்யவும், செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் தொடங்கியபோது சிறுசிறு சமூகவட்டங்களாக வாழ்ந்த வாழ்க்கைமுறை மறைந்தது. அச்சமூக வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பொதுச்சமூகம் உருவாகியது. அது செய்தித்தொடர்பால் ஒருங்கு திரட்டப்பட்டது.

அந்த பொதுச்சமூகத்தில் பொதுக்கல்விமுறை உருவாகி வந்தது. முன்பு ஒவ்வொருவருக்கும் அவரவர் குடித்தொழில் சார்ந்த கல்வியே அளிக்கப்பட்டது. நவீனச் சமூகத்தில் அனைவருக்கும் சமமான, ஒரே கல்வி அளிக்கப்பட்டது. பொதுக்கல்வியின் விளைவாக பொதுவான இயல்பு கொண்ட குடிமக்கள் உருவானார்கள். பொதுக்கல்வி கற்ற பொதுச்சமூகம் உருவானபோது அவர்களை நோக்கி எழுதப்படும் இலக்கியம் உருவானது. அதுவே நவீன இலக்கியம் எனப்படுகிறது.

பழைய இலக்கியமும் நவீன இலக்கியமும்

பழைய இலக்கியத்திற்கும் நவீன இலக்கியத்திற்கும் அடிப்படையான வேறுபாடுகள் மூன்று.

  • பழைய இலக்கியம் அவ்விலக்கியத்தை கற்க முன்வரும் மாணவர்களையும், அக்கல்வியில் தேர்ந்த அறிஞர்களையும் நோக்கி பேசுகிறது. அதற்கான வாசகர்கள் தனித்திறனும் தனிப்பயிற்சியும் கொண்டவர்கள். நவீன இலக்கியம் பொதுவாசகர்களை நோக்கி நேரடியாகவே பேசுகிறது.
  • பழைய இலக்கியம் ஆசிரியர் -மாணவர் உறவின் வழியாக, மரபான கல்வியமைப்புகள் வழியாக கற்பிக்கப்பட்டது. பழைய இலக்கியம் ஆசிரியர்களிடம் சுவடி வடிவிலோ நினைவு வடிவிலோ இருந்தது. அவர்களை அணுகியே அதைக் கற்கமுடியும். நவீன இலக்கியம் நேரடியாகவே வாசகர்களிடம் அச்சுநூல் வடிவில் வந்து சேர்ந்தது. பழைய இலக்கியத்தை மாணவன் தேடிச்செல்லவேண்டும், நவீன இலக்கியம் வாசகனை தேடி வந்தது.
  • பழைய இலக்கியம் மன்னராட்சியும், நிலவுடைமைச் சமூகமும் இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. ஆகவே அறநெறிகள், மதநம்பிக்கைகள், தொல்வரலாறுகள் மற்றும் அழகியல் ஆகியவற்றை முன்வைத்தது. நவீன இலக்கியம் ஜனநாயகம் உருவாகத் தொடங்கிய காலத்தைச் சேர்ந்தது. மக்களின் கூட்டான கருத்துநிலைபாடு அரசியல் அதிகாரமாக மாறும் என நவீன இலக்கியம் உணர்ந்திருந்தது. ஆகவே அது மக்களின் கருத்துக்களை மாற்றவும், அவர்களை திரட்டவும் முயன்றது. நவீன இலக்கியத்தில் சமூகசீர்திருத்தம், அரசியல் மாற்றம், தத்துவ விளக்கம் ஆகிய மூன்று நோக்கங்கள் உள்ளுறைந்திருந்தன.

தமிழ் நவீன இலக்கிய உருவாக்கம்

ஆய்வாளர்கள் தமிழ் நவீன இலக்கியத்தின் தோற்றம் 1850- க்கு பின்னர் தொடங்கியது என பொதுவாக ஏற்கின்றனர். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவான நவீனப்போக்குவரத்து, செய்தித்தொடர்பு முறை, அச்சு ஊடகம் ஆகியவை முதன்மைக் காரணம். ஆங்கிலேயர் உருவாக்கிய பொதுக்கல்வி வழியாக கல்விகற்று நேரடியாக வாசிக்கும் ஒரு மக்கள் திரள் உருவாகி வந்தது. ஆங்கிலக் கல்வி வழியாக ஐரோப்பிய இலக்கியங்களை வாசிப்பவர்கள் உருவாயினர். அத்துடன் ஜனநாயகத்திற்கான குரல்களும் எழத்தொடங்கின.

நவீன இலக்கியக் காலகட்டம் மூன்று இயக்கங்களால் ஆனது. மீட்பியக்கம், இதழியல், புனைவெழுத்து.

மீட்பியக்கம்

அச்சுத்தொழில்நுட்பமும் உரைநடையும் உருவானபோது பழைய நூல்களை ஏட்டுச்சுவடிகளில் இருந்து பாடவேறுபாடுகள் நோக்கி பிழைதிருத்தி உரைநடையில் பொருள்விளக்கம் எழுதி அச்சில்கொண்டுவரும் இயக்கம் தொடங்கியது. மீட்பியக்கம் இரண்டு பகுதிகளால் ஆனது.

மதமீட்பு இயக்கம்

மதமீட்பியக்கத்தவர் பழைய மதநூல்களை அச்சில் பதிப்பித்தனர்.மதநெறிகள், மதக்கொள்கைகள் பற்றிய விளக்கங்களை எழுதினர். தமிழ்ச்சூழலில் சைவ மத மீட்பியக்கமும் வைணவ மத மீட்பியக்கமும் 1850-களுக்குப்பின் வலுவான அறிவுச்செயல்பாடுகளாக தோன்றின

பண்பாட்டு மீட்பு இயக்கம்

பண்பாட்டு மீட்பியக்கத்தவர்கள் பழைய இலக்கியங்களை புதிய உரைகளுடன் அச்சில் கொண்டுவந்தனர். பழைய இலக்கியங்களை பொருள்கொள்வது குறித்து விவாதித்து நூல்களை எழுதினர். பழைய பண்பாட்டில் இருந்து கொள்ளவேண்டியவை விலக்கவேண்டியவை எவை என வரையறுக்க முயன்றனர். தமிழில் பழந்தமிழ் இலக்கியங்கள் அச்சேறின. அவற்றுக்கு உரைகள் வெளிவந்தன.

இதழியல்

தமிழ்நாட்டில் முதலில் ஆங்கிலச் செய்தி இதழ்கள் தோன்றின. விரைவிலேயே தமிழ்ச் செய்தியிதழ்களும் உருவாயின. அவற்றில் செய்திகள் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டன. அதன்பொருட்டு கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன. செய்திகளை சுருக்கமாகவும் கவரும்படியும் அமைப்பதில் தொடர்ச்சியாக முயற்சிகள் செய்யப்பட்டன. 1831- முதல் தமிழில் கிறிஸ்தவ அச்சு இதழ்கள் வெளிவந்தன என்றாலும் 1841-ல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த உதயதாரகை முதல் பொதுச் செய்தி இதழ் எனப்படுகிறது. அது வெளிவந்து முப்பதாண்டுகளுக்குள் தமிழில் செய்தியிதழ்கள் பெருகி செய்திக்குரிய தமிழ்நடையும் வலுவாக உருவாகிவிட்டிருந்தது.

புனைவெழுத்து

தமிழில் பொதுவாசகர்களுக்கான புனைவெழுத்துக்கள் அச்சு ஊடகம் தொடங்கியதுமே வெளிவந்தன. மீட்பியக்கம், இதழியல் என்னும் இரண்டு களங்களில் இருந்தும் புனைவெழுத்துக்கள் உருவாயின. தமிழ் உரைநடையின் இரண்டு ஊற்றுமுகங்கள் என மீட்பியக்கத்தையும் இதழியலையும் சொல்லமுடியும். மதம் பண்பாடு ஆகியவற்றை மீட்க முயன்றவர்கள் எழுதிய விளக்கவுரைகள் மற்றும் விவாதங்கள் வழியாக தீவிரனாம அறிவார்ந்த உரைநடை உருவாகி வந்தது. இதழியலில் செயல்பட்டவர்கள் வழியாக மக்கள்மொழிக்கு நெருக்கமான, உரையாடல்தன்மை கொண்ட இயல்பான உரைநடை உருவாகி வந்தது. அவையிரண்டும் இணைந்து நவீனப் புனைவெழுத்துக்கான உரைநடையாக மாறின.

தொடக்க காலப் புனைவெழுத்துக்கள் மரபிலக்கியத்தின் சாயலில் உரைநடையில் எழுதப்பட்டவை. நாட்டார்கதைகளையும் மரபிலக்கியக் கதைகலையும் புனைவுக்கு ஆதாரமாகக் கொண்டவை. உதாரணம் அஷ்டாவதானம் வீராச்சாமிச் செட்டியார் எழுதிய வினோதரசமஞ்சரி. (1856) இதழியல் வளருந்தோறும் உரைநடைப் புனைவுகளுக்கான தேவை அதிகரித்தது. விரைவிலேயே உரைநடைப் புனைவுநூல்கள் ஏராளமாக வெளிவந்தன. ஐரோப்பிய புனைவிலக்கியங்களை முன்னோடியாகக் கொண்டு அவற்றை தழுவி எழுதப்பட்ட புனைகதைகள் வெளிவந்தன. அவை தமிழில் நவீன இலக்கியத்திற்கான மொழியையும் வடிவங்களையும் உருவாக்கின.

நவீனத் தமிழிலக்கியம் வகைமைகள்

தமிழில் உரைநடை இலக்கியம் உருவாகி வந்தபின்னர் அதன் உள்ளடக்கம், அழகியல் மற்றும் வாசிப்பு அடிப்படையில் விமர்சகர்கள் அதை மூன்று வகைமைகளாகப் பிரித்தனர். 1850 முதல் 1900 வரையிலான ஐம்பதாண்டுக் கால உரைநடை எழுத்துக்களை இலக்கிய உருவாக்கக் காலம் என அடையாளப்படுத்தினர். 1900- த்துக்கு பிந்தைய புனைவிலக்கியங்களில் பொதுவாசிப்பு எழுத்து, நவீன இலக்கியம் என இரண்டு பிரிவுகளை அமைத்துக்கொண்டனர்.

உருவாக்கக் கால எழுத்துகள்

அஷ்டாவதானம் வீராச்சாமிச் செட்டியாரின் வினோதரசமஞ்சரி முதல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் வரையிலான காலகட்டத்தில் பலவகையான உரைநடை இலக்கிய முயற்சிகள் நடைபெற்றன. மரபான கதைசொல்லல் முறையை உரைநடைக்கு மாற்றி நாட்டார் கதைகளையும் செவ்விலக்கியக் கதைகளையும் எழுதினர். பின்னர் அதே வகையில் கற்பனைக் கதைகள் எழுதினர். ஆங்கிலத்தின் வழியாக வாசிக்க நேர்ந்த புனைகதைகளை தழுவி எழுதினர். பிரதாபமுதலியார் சரித்திரம் ஒருபக்கம் ரெயினால்ட்ஸ் எழுதிய ஆங்கில நாவல்களின் சாயலையும் மறுபக்கம் வினோதரசமஞ்சரியின் சாயலையும் கொண்டிருக்கிறது. இக்காலகட்டத்துப் படைப்புகளை உருவாக்கக் காலப் படைப்புகள் என்கிறார்கள்

பொதுவாசிப்பு எழுத்துக்கள்

அச்சு ஊடகம் வலுப்பெற்று ஒரு வணிகமாக மாறியபோது எழுத்து ஒரு தொழிலாக மாறியது. புனைகதைகளை வாசகர்களிடம் விற்று லாபம் அடைய முடியும் என்னும் நிலை வந்தது. தொடக்க கால இதழ்கள் வணிகக்கதைகளை ஏராளமாக வெளியிட்டன. அவை வாசகர்களை கவரும் நோக்கம் கொண்டிருந்தன. மர்மம், திகில், திருப்பங்கள், பரபரப்பான நிகழ்வுகள், மெல்லுணர்வுகள் ஆகியவற்றுடன் சமகாலத்து அரசியல் மற்றும் சமூகவியல் கருத்துக்களையும் அவை வாசக இன்பத்தை உருவாக்க பயன்படுத்திக் கொண்டன.1900த்துக்கு பின் தமிழில் பொதுவாசிப்பு எழுத்து மிகப்பெரிய வணிக இயக்கமாக மாறியது

நவீன இலக்கியம்

தமிழ் இலக்கிய விமர்சகர்களின் பார்வையில் வாசகனை கவர்ந்து ஆர்வத்துடன் வாசிக்கவைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட எழுத்துக்கள் பொதுவாசிப்பு எழுத்துக்கள் என்று வரையறை செய்யப்பட்டன. அவ்வாறன்றி வாசகனுடன் அறிவார்ந்து உரையாடும் தன்மை கொண்டவையும் வாசகனுக்கு வாழ்க்கை பற்றிய சித்திரத்தை அளிப்பவையும் வாசகனின் அழகுணவால் உணரப்படுபவையுமான எழுத்துக்களே நவீன இலக்கியம் எனப்பட்டன. இந்தப் பாகுபாடு அகவயமானது என்பதனால் அறுதியாகச் செய்யக்கூடுவது அல்ல. ஆனால் இப்படி வேறுபடுத்திப் பார்ப்பது தமிழிலக்கியத்தை புரிந்துகொள்ள மிக இன்றியமையாததாகும்.

இந்த கோணத்தில் அணுகும் விமர்சகர்கள் நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகள் என மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ராஜம் ஐயர், அ.மாதவையா மற்றும் சி.சுப்ரமணிய பாரதி ஆகியோரைச் சுட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து தொடங்கி பல காலகட்டங்களாக நீளும் நவீன இலக்கியமரபு தமிழில் உள்ளது.

தமிழிலக்கியச் சூழலில் நீண்ட பொதுவிவாதம் வழியாக உருவாகி வந்த இந்தப் புரிதலை உருவாக்கிய முன்னோடிகள் என ஏ.வி.சுப்ரமணிய ஐயர், ரா.ஸ்ரீ.தேசிகன், டி.எஸ்.சொக்கலிங்கம், புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், சாலிவாகனன், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி, பிரமிள், வெங்கட் சாமிநாதன் போன்ற இலக்கிய சிந்தனையாளர்களைக் குறிப்பிடலாம்.


✅Finalised Page