under review

திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி

From Tamil Wiki
காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி

திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி (1927: மறுபதிப்பு-1990) திருநெல்வேலியில் கோவில் கொண்ட காந்திமதியம்மை மீது பாடப்பட்ட நூல். தாது வருஷப் பஞ்சத்தைப் பாடுபொருளாகக் கொண்டது. இதனை இயற்றியவர் அழகிய சொக்கநாதப் பிள்ளை. பஞ்சம், அதன் கொடுமைகள், காந்திமதி அம்மையின் அருளால் பஞ்சம் நீங்கியது போன்ற செய்திகளைக் கொண்ட நூல்.

பதிப்பு, வெளியீடு

திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, திருநெல்வேலி காந்திமதியம்மை மீது பாடப்பட்ட நூல். 1927-ல் முதன் முதலில் அச்சான இந்நூல், 1990-ல், தொ.மு.சி. ரகுநாதனால் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இதனை இயற்றியவர் அழகிய சொக்கநாதப் பிள்ளை.

உள்ளடக்கம்

திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி நூலில், அந்தாதியாக நூறு கலித்துறை விருத்தப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முதல் தொண்ணூறு பாடல்கள், தாது வருஷப் பஞ்சத்தில் மக்கள் படும் பல்வேறு அவதிகளையும், அதுகுறித்து திருநெல்வேலி நகரில் கோவில் கொண்டுள்ள காந்திமதியம்மையிடம் மக்கள் முறையிவதையும் பற்றிக் கூறுகின்றன. இறுதிப் பத்துப் பாடல்கள், அந்த முறையீட்டைக் கேட்டு அருள் புரிந்த காந்தியம்மையின் சிறப்பையும், மக்கள் குறை தீர்ந்து நிறைவாக வாழ்வதையும் கூறுகின்றன.

பஞ்சம் தீர்க்க வேண்டி வேண்டும்போது தன்னைப் போன்ற மத்திய தர வர்க்க மக்களிள் பட்ட சிறுமையை அன்னையிடம் கூறுகிறார். பஞ்சத்தின் மீது அரசு அலட்சியமாகச் செயல்பட்டதையும் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். சிவன், மால், கணபதி ஆகியோர் பஞ்சத்தின் போது மனமிரங்கி அருளவில்லை என்று கூறி அவர்கள் மீது நிந்தாஸ்துதியாகப் பல பாடல்களை இயற்றியுள்ளார். ஈருதியில் பஞ்சம் தீர்ந்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததையும் குறிப்பிடுகிறார்.

நூலிலிலிருந்து சில பகுதிகள்

பஞ்சம் தீர்க்க காந்திமதியன்னையிடம் வேண்டுதல்

கூலிக்கு வேலை செய்தே பிழைப்பவர் கொட்டைகள் நூற்றால்
இக்குவலயத்தில் பிழைப்பு உண்டென்று உள்ளார்கள் - உன்நெல்
வேலிக்குள் இவ்விதம் பஞ்சம் கண்டால் எவ்விதம் பிழைப்பார்?
பாலிக்க வேண்டும் அம்மா ! இந்த வேளைகண் பார்த்தருளே

பஞ்சத்தால் மத்தியதர வர்க்க மக்கள் பட்ட துன்பம்

இரந்து குடிப்பவர்க்கோ பஞ்சத்தால் குறை என்ன? முன்போல்
நிரந்தரம் பிச்சை எடுத்துண்பார்! செல்வர் என்னில் குறையோ?
தரம்தப்பி, எம் தரக்காரர்களே மெலிந்தார் ! இனி உன்
வரம் தந்து அளித்திட அம்மா ! உனக்கு இது எம் மாத்திரமே

பஞ்சதத்தால் பட்ட சிறுமை

சிறுமைப் படுவதும் பட்டதும் போதும்! இச் சென்மத்துக்கும்
மறுமைக்கும் காணும்! இப் பஞ்சத்தின் மாகொடிய
வறுமைப் பிணிகள் வந்தால், அதைப் போலில்லை மானிகட்கே”

அன்னையின் அருளால் பஞ்சம் நீங்கி மக்கள் மகிழ்தல்

வாழ்வில் குறையில்லை கண்ணேறும் இல்லை வறுமை இல்லை
தாழ்வில்லை நோயில்லை அஞ்சுதல் இல்லை பஞ்சங்கள் இல்லை
பாழ்வினையால் துன்பங்கள் இல்லை நெல்லைப் பதி வடிவைச்
சூழ்வரும் தொண்டர்கட்கு என்றறிந்தோம் இதில் சோர்வில்லையே
அரம் என்று உளே நின்று அறுக்கும் கவலையெல் லாம் தொலைத்தாள்
திரம் என்று மிக்க பொருள் அளித்தாள் பஞ்சம் தீர்த்து விட்டாள்
வரம் என்றும் நீட அருளினள் காந்திமதி அம்மையைப்
பரம் என்று நம்பின பேருக்கு ஒரு நாளும் பழு தில்லையே

மதிப்பீடு

தமிழ்நாட்டில் நிகழ்ந்த பஞ்சங்கள் பற்றியதாகச் சில நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன. அவற்றில் பஞ்சத்தின் போது மக்கள் பட்ட அவலங்களை, துயரங்களைக் கூறும் நூல்களுள் ஒன்றாக திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி நூல் அமைந்துள்ளது. இந்த நூலைப் பதிப்பித்திருக்கும், தொ.மு.சி. ரகுநாதன், நூல் பற்றி, “தமது சொந்தச் சுகபோகத்தையும், சாண் வயிற்றையுமே சதமென நம்பி, புரவலர்களை அண்டிப் பிழைத்து, உலகைப் பற்றிய உணர்வோ, பிரக்ஞையோ, பார்வையோ அற்றிருந்த புலவர்களைக்கூட, தாது வருஷப் பஞ்சம் எவ்வாறு கண்களைப் பலவந்தமாகத் திறந்து பார்க்க வைத்தது என்பதையும், அவர்களது சுரணையற்ற நெஞ்சிலே எப்படிச் சமுதாய நிலைமையைப் பற்றிய பிரக்ஞையைச் சூடேற்றி உணர்த்தியது என்பதையும் நமக்குப் புலப்படுத்தும் சாட்சியமாக, காந்திமதி அந்தாதி விளங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சம் பற்றித் தமிழில் தோன்றிய வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஓரு ஆவணப் படைப்பாக திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page