under review

திருநகரங்கண்ட படலம்

From Tamil Wiki

பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்களுள் ஒன்று திருவிளையாடல் புராணம். இது மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திரு ஆலவாய்க் காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் என 64 படலங்கள் இந்நூலில் அமைந்துள்ளன. மதுரைக் காண்டத்தின் மூன்றாவது படலம், திருநகரங்கண்ட படலம்.

சிவனின் ஆடல்/தொன்மம்

சிவனின் திருவிளையாடலால் கடம்பவனத்திற்கு மதுரை என்ற பெயர் ஏற்பட்டது குறித்து விளக்கும் படலமே, திருநகரங்கண்ட படலம்.

படலத்தின் விளக்கம்

திருநகரங்கண்ட படலம், மதுரை நகரம் உருவானது பற்றியும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தோற்றம் குறித்தும், பாண்டியர்களின் தலைநகர் மாற்றம் பற்றியும் கூறுகிறது.

கதைச் சுருக்கம்

கடம்பவனம்

பாண்டியநாடு பழங்காலத்தில் கடம்பவனங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அதனால் அதற்குக் ‘கடம்ப வனம்’ என்ற பெயரும் இருந்தது. கடம்ப வனத்திற்கு கிழக்கே மணவூர் என்ற நகர் ஒன்று இருந்தது. அதனைத் தலைநகராகக் கொண்டு குலசேகர பாண்டியன் ஆட்சி செய்து வந்தான். அவ்வூரில், சிவபெருமானிடம் பெரும் பக்தி கொண்ட தனஞ்செயன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான்.

தனஞ்செயன் கண்ட அதிசயம்

ஒரு சமயம் தனஞ்செயன் வணிகத்திற்காக மணவூருக்கு மேற்கே உள்ள ஊர்களுக்கு சென்றான். வணிகத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பும்போது இடையில் உள்ள கடம்ப வனம் வழியாகப் பயணம் செய்தான். அப்போது மாலை முடிந்து இரவு நேரம் வந்ததால், சூரியன் மறைந்து, கானகத்தை இருள் சூழ்ந்தது. சிவனே துணை என்றவாறு தனஞ்செயன் நடந்துகொண்டிருந்தான்.

அவன் செல்லும் வழியில், திடீரென ஓரிடத்தில் மிகப் பிரகாசமான ஒளி ஒன்று தென்பட்டது. ஆச்சரியத்துடன் தனஞ்செயன் அதை நோக்கிச் சென்றான். அங்கு, எட்டு யானைகளால் தாங்கப்பட்ட விமானத்தின் கீழ் வீற்றிருந்த சொக்கநாதரைக் கண்டான். இந்தக் கோயில் இங்கே எப்படி வந்தது? யார் கட்டியது? என்று தனஞ்செயன் குழம்பினான். அருகில் இருந்த குளத்தில் பொற்றாமரைகள் பூத்துக் கிடந்ததைப் பார்த்து வியந்து வணங்கினான்.

தேவர்களின் வழிபாடு

திடீரென வாத்தியங்கள் முழங்கும் ஒலி கேட்டது. தலையில் கிரீடங்களுடன், பூஜை பொருட்களை தங்கத் தாம்பாளத்தில் சுமந்தபடி தேவர்கள் வந்து கொண்டிருந்தனர். சொக்கலிங்கப் பெருமானுக்கு அவர்கள் பூஜை செய்தனர். தனஞ்செயன், அவர்களுடன் இணைந்து தானும் அங்கு சிவவழிபாட்டினை மேற்கொண்டான். குளத்துக்குள் இறங்கி, தேவர்களுக்கு பூப்பறித்துக் கொடுத்து உதவினான். தேவர்கள் அவனை வாழ்த்தி பூஜை முடிந்ததும் அவ்விடம் விட்டு அகன்றனர்.

அந்த ஆலயத்திலேயே இரவு தங்கியிருந்த தனஞ்செயன், பொழுது விடிந்ததும், தான்கண்ட அதிசயக் காட்சியை மன்னனிடம் தெரிவிக்க அரண்மனைக்குச் சென்றான்.

பாண்டிய மன்னனுடன் சந்திப்பு

தனஞ்செயன், குலசேகரப் பாண்டியனைச் சந்தித்து, அவனிடம் முதல் நாள் இரவில் நடந்தவற்றை விரிவாக எடுத்துரைத்தான். மன்னனும் அந்தப் பூஜையைக் காண வேண்டும் என தனஞ்செயன் வேண்டுகோள் விடுத்தான். மன்னனும் அதனைக் கேட்டு மனம் மகிழ்ந்தான். அடுத்த சோமவாரம் எப்போது வருமென காத்து கொண்டிருந்தான்.

சிவபெருமானின் ஆணை

அன்றைய இரவில் மன்னனின் கனவில் சொக்கநாதப் பெருமான் சித்தர் வடிவில் தோன்றினார். கடம்பவனத்தை அழித்து அழகிய நகரத்தினை உருவாக்குமாறு ஆணையிட்டார். கோயிலை அடையாளமாகக் கொண்டு, அது நடுவில் இருக்க, நகரம் சிறப்புற அமைய வேண்டும் என்றும், வீதிகள், வீடுகள், மாளிகைகள் அமைய வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அதனைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் குலசேகர பாண்டியன், அமைச்சர் பெருமக்களோடும், பெரியவர்கனோடும் கலந்து ஆலோசித்தான். பின் பெரும் திரளான படைகளுடன் கடம்ப வனத்திற்குப் புறப்பட்டான்.

மன்னன் ஆலயம் அமைத்தல்

கடம்ப வனத்தின் நடுவில் எட்டு யானைகள் விமானத்தை தாங்க, அதன் கீழ் சொக்கநாதர் அருள்பாலித்துக் கொண்டிருந்ததை மன்னன் கண்டான். பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கநாதரை வழிபட்டான். சொக்கநாதர் கூறியபடி காட்டை அழித்து, ஆலயத்தை மையமாக வைத்து நகரை உருவாக்கினான். ஆலயக் குடமுழுக்கையும் சிறப்புற நடத்தினான்.

சிவனின் அருளிச் செயல்

சிவபெருமான், ஜடாமுடியில் அணிந்திருந்த சந்திரனின் கலைகளில் ஒன்றை நகரில் சிந்தி, நகரை ஒளி வீசும்படிச் செய்தார். சிவபிரானின் திருமுடியிலிருந்து சிந்திய அமுதம் அந்நகரினை தூய்மை செய்து இனிமையாக்கியது. இவ்வாறு இறைவனின் கருணையால் அமுதம் சிந்தி மதுரமாகிய (இனிமை) தன்மையைப் பெற்றதால் குலசேகர பாண்டியன் உருவாக்கிய திருநகரம் மதுரை எனப் பெயர் பெற்றது.

பாண்டியன் மதுரை மாநகரின் காவலுக்கு நகரின் கிழக்கு திசையில் ஐயனாரையம், தென்திசையில் சப்த கன்னியர்களையும், மேற்கில் திருமாலையும், வடக்கில் பத்ரகாளியையும் நிறுவினான். பின் வேத நெறிப்படி நாட்டைச் சிறப்புற ஆட்சி செய்தான்.

குலசேகரப் பாண்டியனுக்கு மலயத்துவசன் என்னும் மகன் பிறந்தான். மலயத்துவசனுக்கு உரிய வயது வந்ததும் அவனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, குலசேகர பாண்டியன், சிவவழிபாட்டில் நாட்டம் செலுத்தி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்தான்.

பாடல்கள் நடை

தனஞ்செயன் கண்ட சிவ பூஜை

சோம வாரமன் றாதலாற் சுரர்களங் கெய்தி
வாம மேகலை மலைமக டலைமகன் மலர்ந்த
காமர் சேவடி பணிந்தவன் கங்குல்போற் கருதி
யாம நான்கினு மருச்சனை யின்புறப் புரிவார்

தனஞ்செயன் தான் கண்ட காட்சியை மன்னனிடம் தெரிவித்தல்

மாவ லம்புதார் மணிமுகை் கடவுளர் வந்தத்
தேவ தேவனை யிரவெலா மருச்சனை செய்து
போவ தாயினார் யானுமப் பொன்னெடுங் கோயின்
மேவு மீசனை விடை கொடு மீண்டன னென்றான்

மன்னனுக்கு சிவன் அளித்த ஆணை

ஈட்டுவார் வினை ஒத்த போது இருள் மலம் கருக
வாட்டுவார் அவர் சென்னி மேல் மலரடிக் கமலம்
சூட்டுவார் மறை கடந்த தம் தொல் உரு விளங்கக்
காட்டுவார் ஒரு சித்தராய்த் தோன்றினார் கனவில்

வடிகொள் வேலினாய் கடம்பமா வனத்தினைத் திருந்தக்
கடிகொள் காடகழ்ந் தணிநகர் காண்கென வுணர்த்தி
அடிக ளேகினார் கவுரிய ராண்டகை கங்குல்
விடியும் வேலைகண் விழித்தனன் பரிதியும் விழித்தான்

மன்னன் ஆலயம் அமைத்தல்

வலவயி னிமய வல்லிபொற் கோயின்
  மாளிகை யடுக்கிய மதில்வான்
நிலவிய கொடிய நெடியசூ ளிகைவா
  னிலாவிரி தவளமா ளிகைமீன்
குலவிய குடுமிக் குன்றிவர் செம்பொற்
  கோபுரங் கொண்டல்கண் படுக்குஞ்
சுலவெயி லகழிக் கிடங்குகம் மியநூற்
  றொல்வரம் பெல்லைகண் டமைத்தான்

சிவனின் அருள்

பொன்மய மான சடைமதிக் கலையின்
  புத்தமு துகுத்தன ரதுபோய்ச்
சின்மய மான தம்மடி யடைந்தார்ச்
  சிவமய மாக்கிய செயல்போற்
றன்மய மாக்கி யந்நகர் முழுதுஞ்
  சாந்திசெய் ததுவது மதுர
நன்மய மான தன்மையான் மதுரா
  நகரென வுரைத்தனர் நாமம்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Nov-2023, 01:27:34 IST