under review

தமிழண்ணல்

From Tamil Wiki
நன்றி: மு. இளங்கோவன்

தமிழண்ணல் (இராம. பெரியகருப்பன்) (ஆகஸ்ட் 12, 1928 - டிசம்பர் 29, 2015) தமிழறிஞர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர், தமிழக அரசின் சங்கப்பலகை குறள்பீடம் என்ற அமைப்பின் துணைத்தலைவராக இருந்தார். மத்திய அரசின் செம்மொழி உயராய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதைப் பெற்றார்.

பிறப்பு,கல்வி

இராம. பெரியகருப்பன் ஆகஸ்ட் 12, 1928-ல் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் இராமசாமி செட்டியார், கல்யாணி ஆச்சி இணையருக்குப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் பெரியகருப்பன். பள்ளத்தூர், ஏ.ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் பள்லிகல்வியையும், மேலைச்சிவபுரி, கணேசர் செந்தமிழ் கல்லூரியில் புதுமுக வகுப்பும் முடித்தார். 1948 -ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார். கல்லூரிக்குச் செல்லாமல் தனியாகப் படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1961-ல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டே 'சங்க இலக்கிய மரபுகள்' என்னும் பொருளில் ஆய்வுமேற்கொண்டு சி. இலக்குவனார், அ. சிதம்பரநாதன் செட்டியார் ஆகியோரின் நெறியாள்கையில் 1969-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இராம. பெரியகருப்பன் 1954-ல் தெய்வானையை மணம் செய்து கொண்டார். மகன்கள் சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன். மகள்கள் கண்ணம்மை, அன்புச்செல்வி, முத்துமீனா.

கல்விப்பணிகள்

தமிழண்ணல் காரைக்குடி மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். முடியரசனார் இவருடன் பணிபுரிந்தவர்களில் ஒருவர். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பத்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1971-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பொறுப்பேற்று, இணைப்பேராசிரியர், அஞ்சல்வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல்துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் எனப் பணி உயர்வு பெற்றார். தமிழண்ணலின் நெறியாள்கையில் மு. தமிழ்க்குடிமகன் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர்.

பல்கலைக்கழக நல்கைக்குழுவால் (University Grants Commission 1981-82 -ம் கல்வியாண்டிற்கான தேசியப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்கும் சென்று தமிழ் மொழியின் தொன்மை, சிறப்பு, இலக்கியக் கொள்கைகளைப் பற்றி சொற்பொழிவாற்றினார். இலங்கை, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்விப் பயணமாகச் சென்று கருத்தரங்குகளில் பங்குகொண்டார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோழிக்கோடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார். ஒப்பிலக்கியத் துறை முதன் முதலாக காமராசர் பல்கலைகயில் அறிமுகம் செய்யப்பட்டபோது அதற்கான கருவி நூலை எழுதினார்.

சிங்கப்பூர் அரசின் அழைப்பின்பேரில் தமிழ்ப்பாடநூல்களை உருவாக்குவதில் பங்காற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழண்ணல் தமிழ் இலக்கணம் குறித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், நூல்கள், சங்க இலக்கியம், ஒப்பிலக்கியம், நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய ஆய்வுநூல்களும் ,அடிப்படை நூல்களும் எழுதினார். மரபு கவிதைகளும் இயற்றினார். 'மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்' குறிப்பிடத்தக்க படைப்பு. செட்டிநாட்டுத் தாலாட்டுகளைத் தொகுத்தும் அந்நூல் வளம் பெற அவர் வழிகாட்டினார்.

1971 -ல் குடியரசு நாளில் புதுதில்லி அனைத்து இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு இவர் செல்வம் என்ற தலைப்பில் பாடிய கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப் பட்டது.' மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்' என்ற நூலை எழுதினார்.

'வளர்தமிழ்: உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்ற நூல் தினமணி இதழில் வளர்தமிழ்ப் பகுதியில் அவர் எழுதிய தொடரின் நூல்வடிவம்.

ஆர் நாகசாமி எழுதிய ~"The mirror of Tamil and Sanskrit” நூலைக் கண்டித்துத் தமிழண்ணல் "இரா. நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும், பார்வைக் கோளாறுகளும்” என்று ஒரு நூலை எழுதினார்.

அமைப்புப் பணிகள்

  • தமிழக அரசின் சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர்
  • 1985 முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் உறுப்பினர்
  • தமிழக அரசின் சங்க இலக்கியக்குறள் பீடத்தின் துணைத் தலைவர்
  • தமிழகப்புலவர் குழுவின் உறுப்பினர்
  • உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கக் குழுவில் உறுப்பினர்
  • தமிழ்ச்சான்றோர் பேரவை தமிழ்வழிக் கல்வியை முன்னிலைப்படுத்தித் நடத்திய சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டத்திற்கு தலைமை (சிலம்பொலி செல்லப்பன் தலைமையிலிருந்து விலகியபின்)

விருதுகள்/பரிசுகள்

தொல்காப்பியர் விருது, நன்றி: https://thamizhannal.org/
  • நல்லாசிரியர் விருது
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் செம்மல் விருது(1985)
  • தமிழக அரசின் திரு. வி. க. விருது (1989)
  • தமிழக அரசின் கலைமாமணி விருது (2010)
  • மத்திய அரசின் செம்மொழி உயராய்வு மையத்தின் தொல்காப்பியர் விருது (2011)
  • எஸ்ஆர்எம் பல்கலைக்கழக தமிழ்ப் பேராயத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது (2013)
  • பாரிவேந்தர் பைந்தமிழ் விருது

இலக்கிய இடம்

தமிழண்ணல் சங்க இலக்கியங்கள் தொடர்பான பல ஆய்வு நூல்களை எழுதினார். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றுக்கும் கருத்துரை விளக்கங்களை செம்பதிப்பாக வெளியிட்டார். "தொல்காப்பியரின் இலக்கியக்கொள்கை என்ற தலைப்பில் மெய்ப்பாடு, இறைச்சி, உள்ளுறை, நோக்கு என்ற நான்கு தலைப்புகளில் இவர் வெளியிட்ட தொகுதிகள் ஆய்வுநோக்கில் மிகச் சிறந்தவை ,பிறரைவிட இவரது நூல்கள் கோட்பாட்டுநோக்கு உடையவை" என்று பேரா.செ.வை. சண்முகம் குறிப்பிடுகிறார்.

மறைவு

தமிழண்ணல் டிசம்பர் 29, 2015 அன்று காலமானார்.

படைப்புகள்

  • வாழ்வரசி
  • நச்சுவளையம் (புதினங்கள்)
  • தாலாட்டு
  • காதல் வாழ்வு,
  • பிறைதொழும் பெண்கள்
  • ஒப்பிலக்கிய அறிமுகம்
  • மாணிக்கக் குறள்
  • ஆய்வியல் அறிமுகம் (திரு.இலக்குமணனுடன் இணைந்து)
  • எழுச்சிதரும் எண்ணச் சிறகுகள்
  • ஊடகங்களால் ஊரைப் பற்றும் நெருப்பு
  • சிவ வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
  • வேதமும் ஆகமமும்
  • தமிழில் வழிபாடு - குழப்பமும் விளக்கமும்
  • இறைவன் இறைவி பெயர் மாற்றம்
  • வடமொழியின் செல்வாக்கும் இருக்குவேதத் தோற்றமும்
  • இருக்கு வேத சாரம்,
  • யசூர் சாம வேத சாரம்
  • அதர்வ வேத சாரம்
  • சேக்கிழார் திருவுள்ளம் – சண்டீசர் வரலாறு
  • சேக்கிழார் திருவுள்ளம் – மனுநீதிச் சோழன் வரலாறு
  • தமிழ்க் கல்வி
  • பண்பாட்டு விழிப்புணர்ணவுப் பேரியக்கம்(2011)
  • உரை விளக்கு (விழிகள், 2011)
இலக்கணநூல்கள்
  • தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரை
  • சொல்லதிகார உரை
  • பொருளதிகாரம் உரை பகுதி-1 (செப்.2003), 4.பகுதி-2 (செப்.2003), 5.பகுதி-3 (செப்.2003)
  • நன்னூல்
  • அகப்பொருள் இலக்கணம்
  • புறப்பொருள் வெண்பாமாலை
  • யாப்பருங்கலக்காரிகை
  • தண்டியலங்காரம்
சங்க இலக்கியங்கள்
  • குறுந்தொகை
  • அகநானூறு 3-ம் பகுதி (கவிஞர் நா.மீனவனுடன் இணைந்து)
  • திருக்குறள்: திருக்குறள் நுண்ணுரை
ஆய்வு நூல்கள்
  • பரிசில் வாழ்க்கை (1956)
  • குறிஞ்சிப்பாட்டு இலக்கியத் திறனாய்வு ( 1961)
  • சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கியக் கொள்கைகள்) – 1975
  • சங்க இலக்கிய ஒப்பீடு (இலக்கிய வகைகள் 1978
  • ஔவையார் (சாகித்திய அகாதெமி, 2008
  • ஒப்பிலக்கியப் பார்வையில் சங்க இலக்கிய ஒளிச்சுடர்கள் (2007)
  • சங்க இலக்கியத் தொன்மைச் சான்றுகள் (2008)
  • செவ்விலக்கியச் சிந்தனைகள் (2008)
  • செம்மொழிப் படைப்பியல் (2008)
  • சங்க மரபு (முனைவர்பட்ட ஆய்வேடு, சிந்தாமணிப் பதிப்பகம்).2009
  • தொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும் பார்வைக் கோளாறுகளும் (எஸ்.ஆர்.எம்., 2013)
  • The Tainted Spectacles and Faulty vision of Dr.Nagasamy (The Real Status of Tamil and Sanskrit) - S.R.M., 2013, Tr. Dr. K.V.Balasubramaniyan), கபிலர் பாடல்களில் காட்சி உருவகம்
  • தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்: உள்ளுறை,இறைச்சி (1986), மெய்ப்பாடு (1986),நோக்கு
  • தொல்காப்பியர் (சாகித்திய அகாதெமி, 1998)
  • தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் (உள்ளுறை, இறைச்சி, நோக்கு, மெய்ப்பாடு நான்கும் இணைந்தது( 2004) தொல்காப்பிய இலக்கிய இயல் (2008)
  • தொல்காப்பியர் விளக்கும் திருமணப்பொருத்தம் (2012)
  • தேடவைக்கும் திருவள்ளுவர் (2008)
  • வள்ளவர் நெறியில் வாழ்வது எப்போது? (2008)
  • புதிய நோக்கில் இலக்கிய வரலாறு (1995)
  • உலகத் தமிழ் இலக்கிய வரலாறு – தொன்மை முதல் கி.பி.500 வரை (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004)
  • தமிழை அறிவோம்! தமிழராய் வாழ்வோம்! ( 2007)
  • தமிழ் ஒரு கட்டமைப்புள்ள மொழி (2008)
  • இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள் ( 2008)
  • தமிழ்வழிக் கல்விச் சிந்தனைகள் (மெய்., 2008)
  • தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்
  • பேசுவது போல் எழுதலாமா-பேச்சுத் தமிழை இகழாலாமா
  • பிழை திருத்தம் மனப்பழக்கம்
  • தமிழ் உயிருள்ள மொழி
  • தமிழ் கற்பிக்கும் நெறிமுறைகள்தமிழ்த்தவம்
  • உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்
  • இனிய தமிழ்மொழியின் இயல்புகள்
  • தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?
  • சொல் புதிது சுவை புதிது.
பதிப்பித்த நூல்கள்
  • தமிழியல் ஆய்வு (இ.முத்தையாவுடன் இணைந்து) – மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1983
  • சங்க இலக்கியங்கள் (முனைவர் சுப.அண்ணாமலையுடன் இணைந்து) – கோவிலூர் மடாலயப் பதிப்பு (11 தொகுதிகள், 2002– 2004, அகம். 3 தொகுதிகள்).

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2023, 19:05:16 IST