under review

டி.என். சேஷாசலம்

From Tamil Wiki
டி.என்.சேஷாசலம் இலக்கியச்சுவை
கலாநிலயம்

டி.என்.சேஷாசலம் (1898-1938) இதழாளர். இலக்கியம், நாடகம், திறனாய்வு எனத் தனது பங்களிப்புகளைத் தந்தவர். நாடக நடிகராக, இயக்குநராக, இரவுப் பள்ளிகளின் ஆசிரியராக இருந்ததுடன் 'கலாநிலயம்’ என்னும் இலக்கிய இதழின் நிறுவனராகவும், எழுத்தாளராகவும் செயல்பட்டார். வழக்குரைஞர், கல்வியாளர், சொற்பொழிவாளர் என பல்துறைச் செயல்பாட்டாளராக இருந்தார்.

பிறப்பு, கல்வி

1898-ல், பிறந்த சேஷாசலம், உயர்நிலைக் கல்வியை முடித்தவுடன், இளங்கலை பயின்று பி.ஏ. பட்டம் பெற்றார். சென்னையில் வழக்குரைஞராகப் பணிபுரிந்தார்.

தனி வாழ்க்கை

டி.என். சேஷாசலம், ருக்மிணியை மணம் செய்து கொண்டார். இவர் மகன் டி.எஸ்.ஸ்ரீதர் பரணீதரன் என்னும் பெயரில் எழுதினார். புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆ.கே.நாராயணன் டி.என்.சேஷாசலத்தின் மருமகன்

சேஷாசலம் வழக்கறிஞர் தொழிலில் ஆர்வம் காட்டாமல் இதழியல், நாடகம் ஆகியவற்றிலேயே பெரும்பாலும் ஈடுபட்டார்

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் நன்கு அறிந்திருந்த சேஷாசலம், ஆங்கில நாடகங்களை, கவிதைகளை தமிழுக்கு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டார்.

கலாநிலயம் நாடகக் குழு

டி.என்.சேஷாசலம், தன் நண்பர்களுடன் இணைந்து 'கலாநிலயம்’ என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். 'கலாநிலயம்’ என்பது புரசைவாக்கத்தில், வெள்ளாளர் தெருவில் அவர் வசித்த வீட்டின் பெயர். அதனையே தனது நாடக்குழுவிற்குச் சூட்டினார். நாடகப் பயிற்சி, ஒத்திகை என அனைத்தும் அவரது மிகப் பெரிய அந்த இல்லத்திலேயே நடந்தன.தனது நாடகக் குழுவின் மூலம் ஷேக்ஸ்பியரது நாடகங்கள் பலவற்றைத் தமிழில் அரங்கேற்றினார்.

ஆர்.பி.ஷெரீடன் ஆங்கிலத்தில் எழுதிய நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை 'பிஸாரோ’ என்ற தலைப்பில் நாடகமாக எழுதினார். அதை எழுதி, இயக்கியதுடன், முக்கியத் தலைமைக் கதாபாத்திரத்திலும் நடித்தார். 'எல்விரா' என்ற பாத்திரத்தில் அனந்தநாராயண அய்யர் என்பவரும், 'அலான்சோ’ பாத்திரத்தில் வேலு நாயர் என்பவரும் நடித்தனர். கலாநிலைய வளர்ச்சி நிதிக்காக இந்நாடகம் சென்னை, காஞ்சி, காரைக்குடி, கும்பகோணம், சிதம்பரம் முதலிய ஊர்களில் நடத்தப்பெற்றது. தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று இந்நாடகத்தை மேடையெற்றினார் சேஷாசலம்.

சொற்பொழிவாளர்

டி.என்.சேஷாசலம் கம்ப ராமாயணம் குறித்து விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டு அது குறித்துச் சொற்பொழிவாற்றி வந்தார்.

இரவுப் பள்ளிகள்

இரவுப் பள்ளி

தனது நண்பரும், பிரபல வழக்குரைஞருமான மாசிலாமணிப் பிள்ளையுடன் இணைந்து ஆர்வமுள்ளோர் அனைவரும் தமிழ் பயில்வதற்காக இரவு நேரப் பள்ளி ஒன்றை எற்படுத்தினார் சேஷாசலம். ஜனவரி 1913-ல் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. 'Madras Young Men's Association Night School’ என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

பள்ளியின் தலைமைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்த சேஷாசலம், தானே முதன்மை ஆசிரியராக இருந்து பாடம் நடத்தினார். இரேனியஸ் பிள்ளை போன்றவர்கள் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றினர். மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி முதல் உயர் கல்வி வரை இங்கு சொல்லித் தரப்பட்டது. 5 முதல் 25 வயது வரை உள்ள மாணவர்கள் இப்பள்ளியில் பயில அனுமதிக்கப்பட்டனர். சென்னை எஸ்பிளனேட் ஒய்.எம்.சி.ஏ.வில் மட்டுமல்லாது, பெரம்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் வார நாட்களில் இச்சிறப்புப்பள்ளி செயல்பட்டது.

பள்ளிகளில் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில இலக்கியத்தையும், ஆங்கில நாடகங்களையும் சொல்லிக் கொடுத்தார் சேஷாசலம். தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் போதித்ததுடன் மேலை நாட்டாரின் நாடகங்களையும் மாணவர்களுக்குக் கற்பித்தார். பாலூர் கண்ணப்ப முதலியார், மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, மங்கலங்கிழார் போன்றோர் சேஷாலத்தின் தமிழ் வகுப்புகளில் பயின்றவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களாவர்.

காந்திமதி என்னும் காந்தாரநாட்டுக் கட்டழகி - டி.என்.சேஷாசலம் தொடர்

இதழியல்

டி.என்.சேஷாசலம் கலாநிலயம் என்னும் இதழை 1928 முதல் 1935 வரை நடத்தினார்.

பிஸாரோ - நாடகம்

திரைப்பட முயற்சிகள்

டி.என்.சேஷாசலம் தெலுங்குப் பட முயற்சியில் இறங்கினார். ஆனால், அது பண இழப்பில் முடிந்தது. சத்தியஜித்ரேவின் குருவான தேவகிபோஸ் என்பவரை அழைத்துவந்து, திரைப்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தான் எழுதிய 'ஏமாங்கத்திளவரசன்’ என்ற நாவலை 'இராஜதந்திரம்’ என்ற பெயரில் திரைப்படமாக்க எண்ணினார். திரைக்கதையை அமைத்து, படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அது வெற்றிபெறவில்லை.

மறைவு

1938-ல் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் சேஷாசலம் காலமானார்.

நினைவுகள்

’கலா நிலயம்’ இதழ்கள் சிலவற்றை தமிழ் இணைய நூலகம் ஆவணப்படுத்தியுள்ளது. முனைவர் அ.நா. பெருமாள், டி.என். சேஷாசலத்தின் இலக்கியச் செயல்பாடுகளை, ’இலக்கியச் சிந்தனையாளர் டி.என். சேஷாசலம்’ என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளார்.

சேஷாசலத்தின் மறைவிற்குப் பின் அவரது நினைவாக 1987-ல், அவரது மகன் பரணீதரனால் ஓர் அறக்கட்டளை நிறுவப்பட்டது. அவரது நினைவாக ஆண்டுதோறும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பட்டன. 1990 முதல் 2014 வரை நடந்த நிகழ்வுகள் குறித்த தகவல்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணையதளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன [1].

வரலாற்றிடம்

இலக்கிய உலகம், நாடக உலகம் இரண்டிலுமே முக்கியப் பங்காற்றியவர் டி.என்.சேஷாசலம். டி.என்.சேஷாசலம் குறித்து ஓவியர் கோபுலு, "பரணீதரனின் தந்தை டி.என். சேஷாசலம். சிறந்த தமிழறிஞர். தனது பணத்தையெல்லாம் தமிழுக்காகவே செலவழித்தவர். நிறைய கதை, கட்டுரைகள் எழுதுவார். நாடகங்கள் போடுவார். ஆங்கில நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவார்.[2] " என்று தென்றல் இதழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

"சேஷாசலம் தனி மனிதயியல். மானிடவியல், சமூக வாழ்வியல், மனவியல் ஆன்மவியல் என்ற பார்வையில் இலக்கியங்களை அணுகிச் சிந்திக்கிறார்" என்று மதிப்பிடுகிறார், அவரது படைப்புகளைப் பற்றிய ஆய்வு நூலை எழுதியிருக்கும் முனைவர் அ.நா. பெருமாள்.

டி.என்.சேஷாசலத்தின் 'இரவுப் பள்ளிகள்’ அக்காலத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பு. பிற்காலத்தில் மாலை நேரக் கல்லூரிகள் பல உருவாக இது போன்ற முயற்சிகள் முன் மாதிரியாக இருந்தன.

நூல்கள்

நாவல்கள்
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்
  • ஏமாங்கதத்திளவரசன்
  • காந்திமதி அல்லது காந்தார நாட்டுக் கண்ணழகி
நாடகங்கள்
  • இராஜ தந்திரம்
  • பிஸாரோ
கட்டுரை நூல்கள்
  • கலாநிலயம் தலையங்கங்கள்
  • கம்பராமாயணம் உரையும் விளக்கமும்
  • கம்பர்
  • கல்சர் (பண்பும் பயனும் அது)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page