under review

ஜோ டி குருஸ்

From Tamil Wiki
ஜோ டி குரூஸ்

ஜோ டி குருஸ் (பிறப்பு: மே 17, 1963) தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர், களச்செயற்பாட்டாளர். தமிழ் நெய்தல்குடிகளின் வாழ்வியலை இலக்கியத்தில் பதிவுசெய்யும் எழுத்தாளர்.

ஜோ டி குரூஸ்

பிறப்பு, கல்வி

ஜோ டி குருஸ் திருநெல்வேலி மாவட்டம் கடற்கரை கிராமமான உவரியில் மே 17, 1963-ல் ரெமிஜியுஸ், நிக்கோலாஸ் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஒரு அக்காள், ஒரு தங்கை, இரண்டு தம்பிகள். தூத்துக்குடி மாவட்டம், உவரி புனித மரிய அன்னை நடுநிலைப்பள்ளியில் ஆரம்ப பள்ளிக்கல்வி பயின்றார். திருநெல்வேலி புனித சவேரியார் பள்ளியில் உயர்நிலைக்கல்வி பயின்றார். இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக்கல்வி பயின்றார். திருச்சியில் உள்ள செய்ண்ட் ஜோசப் கல்லூரியில் எம்.ஃபில் பட்டம் பெற்றார். சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். திருச்சி வளனார் கல்லூரியில் ஆய்வறிஞர்(PhD) பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சரக்குக் கப்பல் நிறுவனங்களில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றினார். சென்னை இராயபுரத்தில் வணிகக் கப்பல்களுக்கான ஆலோசனை நிறுவனம் நடத்திவருகிறார். டிசம்பர் 10, 2001-ல் சசிகலாவை மணந்தார். மகன் அந்தோனி டி க்ரூஸ், மகள் ஹேமா டி க்ரூஸ்.

இலக்கிய வாழ்க்கை

ஜோ டி குரூஸ்

ஜோ டி குருஸின் முதல் படைப்பு 'புலம்பல்கள்' கவிதைத்தொகுப்பு 2004-ல் வெளிவந்தது. ஆழி சூழ் உலகு, கொற்கை, அஸ்தினாபுரம் ஆகிய மூன்று நாவல்களும் மீன்பிடி தொழில் புரியும் பரதவர் வாழ்க்கையைக் களமாகக் கொண்டவை. மீனவர்களின் வாழ்வியல், சிக்கல்கள் பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இலக்கிய இடம்

“கடலும் கடல் சார் வாழ்வுமே என்னுடைய படைப்பு மொழி. பரந்த நீர்ப்பரப்பின் ஒரு துளியாகவே என்னுடைய படைப்பு உள்ளது. ஒரு சராசரி மனிதனின் பார்வையில் தான் என்னுடைய வாழ்வனுபவங்களைப் பதிவு செய்தேன். அதற்கு நாவல் ஒரு நல்ல வடிவமாகத் துணை நின்றது" என ஜோ டி குருஸ் தன் எழுத்துக்களைப் பற்றி கூறுகிறார்.

”இந்நாவலின் முக்கியத்துவம் இரண்டாயிரம் வருடத் தமிழிலக்கிய மரபில் இது ஒரு முதற்குரல் என்பதனால்தான். குரலிழந்து வாழ்ந்த ஒரு சமூகம் தன் அளப்பரிய ஆழத்துடனும் அலைகளுடனும் வந்து நம் பண்பாட்டின் மீது ஓங்கியடிக்கும் அனுபவத்தை அளிக்கும் பெரும் படைப்பு இது. சிலநாவல்களே ’இது தான் வாழ்க்கை’ என்று நம் மனம் திடமாக நம்பி உள்நுழையச் செய்கின்றன. அப்பண்பு கதைத்திறன் சார்ந்தது அல்ல. கதைசொல்லிக்கு அவன் வாழ்வுடன் உள்ள உறவென்ன, எந்த அளவுக்கு அது உண்மையும் தீவிரமும் கொண்டது என்பதைப் பொறுத்தது. ஆழிசூழ் உலகு தமிழில் எழுதப்பட்ட மிகச்சில பெரும்நாவல்களில் ஒன்றாவது ஆசிரியரின் உண்மையும் தீவிரமும் ஒன்றாகும் கணங்களில் இது உருவாகியுள்ளது என்பதனாலேயே.” என ஆழி சூழ் உலகு நாவல் பற்றி ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

திரைப்படம்

2013-ல் இயக்குநர் பரத் பாலா இயக்கிய 'மரியான்' திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.

விருதுகள்

  • 2013-ல் கொற்கை நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
  • 'ஆழி சூழ் உலகு' நாவல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  • கனடா இலக்கியத் தோட்ட விருது (2006)
  • 2011-ல் 'கொற்கை' நாவலுக்காக சுஜாதா உயிர்மை விருது வழங்கப்பட்டது.
  • லூர்தம்மாள் சைமன் இலக்கிய விருது (2013)
  • இலயோலா இலக்கிய விருது (2014)
  • இலக்கிய வீதி அன்னம் விருது (2014)
  • உஸ்தாத் பிஸ்மில்லாகான் விருது (2015)
  • திருவள்ளுவர் இலக்கிய விருது (2015)

ஆவணப்படம்

  • விடியாத பொழுதுகள் (2008)
  • TOWARDS DAWN (2009)
  • எனது சனமே (2010)
  • இனையம் துறைமுகம் (2018)

நூல்கள் பட்டியல்

கவிதை
  • புலம்பல்கள் (2004)
நாவல்
  • ஆழி சூழ் உலகு (2004)
  • கொற்கை (2009)
  • அஸ்தினாபுரம் (2016)
  • யாத்திரை (2021)
கட்டுரை
  • கவனம் ஈர்க்கும் கடலோரம் (2019)
தன்வரலாறு
  • வேர்பிடித்த விளைநிலங்கள் (2017)

காணொளிகள்

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Aug-2023, 17:52:11 IST