under review

சௌந்தரா கைலாசம்

From Tamil Wiki
சௌந்தரா கைலாசம் விருது
சௌந்தரா கைலாசம், நீதிபதி கைலாசத்துடன்
சௌந்தரா கைலாசம் இந்திரா காந்தியுடன்

சௌந்தரா கைலாசம் (பெப்ரவரி 28, 1927 - அக்டோபர் 15 2010) தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர். சிலேடைகளைப் புகுத்தி, கவிதைகளை எழுதியவர். கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதைகளை வழங்கினார்.

பிறப்பு, கல்வி

திருச்சி மாவட்டம், செட்டிபாளையம் எனும் சிற்றூரில் பிப்ரவரி 28, 1927 அன்று சி. எஸ். சுந்தர கவுண்டர்-காளியம்மாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். அவரது குடும்பம் தேசியப் பின்னணி கொண்டது. தாய்வழிப் பாட்டனார் ரத்தினசபாபதி கவுண்டர் ராஜாஜியின் நண்பர். ராஜாஜி திருச்செங்கோட்டில் உருவாக்கிய காந்தி ஆசிரமத்திற்கு நிலத்தைக் கொடையாகக் கொடுத்தவர். தாயார் காளியம்மாளும் ராஜாஜியின் மகள் லட்சுமியும் தோழியர். சௌந்தரா ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பயின்றார். தந்தையிடம் தேவாரம், சிலப்பதிகாரம், பெரிய புராணம் போன்ற தமிழ் இலக்கிய நூல்களைக் கற்றார். தமிழைச் சொந்த முயற்சியில் படித்து மரபுச் செய்யுள்கள் பாடும் ஆற்றல் பெற்றார்.

தனி வாழ்க்கை

தனது 14-ஆவது வயதில் சௌந்திரா திரு. பி.எஸ். கைலாசத்தை மணந்து கொண்டார் . பி.எஸ்.கைலாசம் புகழ் பெற்ற வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜின் வழிகாட்டுதலின் கீழ் வழக்கறிஞராக வேலை பார்த்தார். பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். சௌந்தரா கைலாசம் இணையருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும். மகள் விமலா ராமலிங்கம் மகப்பேறு மருத்துவர்; நளினி சிதம்பரம் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி; பத்மினி சிவசுப்ரமணியம் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்; மகன் சடயவேல் கைலாசம் முடநீக்கியல் மருத்துவர்.

அமைப்புப்பணிகள்

இந்து அறநிலையத் துறை, திரைப்படத் தணிக்கைக் குழு மற்றும் அகில இந்திய வானொலி ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

அதிசய மகாகவி பாரதி

பி.எஸ். கைலாசம் சௌந்தராவின் இலக்கிய நடவடிக்கைகளை ஊக்குவித்தார். சௌந்தரா பச்சையப்பன் கல்லூரியில் பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டார். ஒரு கவிதைப் போட்டியில் நீதிபதியாக செயல்பட்டு தன் முதலுரையை ஆற்றினார். அவ்வுரைக்குக் கிடைத்த வரவேற்பினால், மேலும் பல கல்லூரிகளில் உரையாற்ற அழைக்கப்பட்டார். ஆன்மிகச் சொற்பொழிவுகள் ஆற்றவும், கவியரங்குகளில் பங்கு கொள்ளவும் தொடங்கினார்.

சௌந்தரா கைலாசம் வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, அகவல், பல்வேறு சந்தங்கள் எனப்பல செய்யுள் வடிவங்களையும் இயற்றினார். இறை வணக்கப்பாடல்களும், தேசபக்திப் பாடல்களும் பாரதி முதலிய கவிஞர்களைப் போற்றும் பாடல்களையும், எழுதினார். 'அளவற்ற அருளாளர்' நபிகள் நாயகத்தைப் பற்றி அவர் எழுதிய நூல்.

அகில இந்திய வானொலியில் பல்வேறு கவியரங்குகளில் பங்கேற்றுள்ள சௌந்தரா கைலாசம் பல ஆன்மீகத் தொடர் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்துடன் தொடர்பில் இருந்தார்.

மனிதரைப் பாடமாட்டேன் என்ற கண்ணதாசனின் பாட்டிற்கு, மனிதரைப் பாடுவேன் என்று சௌந்தரா கைலாசம் பாடிய எதிர்க்கவிதை பிரபலமானது.

விருதுகள், பரிசுகள்

  • பாவேந்தர் பாரதிதாசன் விருது ( தமிழ் வளர்ச்சித் துறை 1991)
  • தமிழக அரசின் பாரதி விருது (தமிழ் வளர்ச்சித் துறை 2007)

மறைவு

சௌந்தரா கைலாசம் அக்டோபர் 15, 2010 அன்று காலமானார்.

இலக்கிய இடம்

பெரும்பாலும் கடவுளர் துதியாகவும் மனிதரைப் போற்றுவதாகவும் இவர் பாடல்கள் அமைந்துள்ளன. இறைத்துதியில் எதுகை மோனையுடன் வர்ணனையும் தலபுராணங்களும் மரபார்ந்த வழிபாடும் வேண்டுதல்களும் மிகுந்துள்ளன. தமிழில் புதுக்கவிதை இயக்கம் உருவாகி மரபுக்கவிதை வழக்கொழிந்துகொண்டிருந்த காலகட்டத்தில் மரபுக்கவிதையை பொது ஊடகங்கள் வழியாக நிலைநிறுத்திய ஆளுமைகளில் ஒருவராக சௌந்தரா கைலாசம் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • சௌந்தரா கைலாசத்தின் கவிதைகள்
  • கவிதை பூம்பொழில்
  • எழுத்துக்கு வந்த ஏற்றம்
  • உள்ளத்தில் நிறைந்த உத்தமர்கள்
  • அளவற்ற அருளாளர்
  • இறைவன் சோலை
  • இதயப் பூவின் இதழ்கள்
  • நெஞ்சில் விளைந்த நித்திலங்கள்
  • சிந்தை வரைந்த சித்திரங்கள்

உசாத்துணை


✅Finalised Page