under review

செங்குந்த மித்திரன்

From Tamil Wiki
மித்திரன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மித்திரன் (பெயர் பட்டியல்)
செங்குந்த மித்திரன் - 1929
செங்குந்த மித்திரன் - 2018

செங்குந்த மித்திரன் (1927), தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் வெளியீடாக வரும் மாத இதழ்.

வெளியீடு

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் 1927 முதல் சென்னையிலிருந்து வெளிவரும் இதழ் செங்குந்த மித்திரன். காஞ்சி நாகலிங்க முனிவர் இதன் தொடக்க கால ஆசிரியர். அவரைத் தொடர்ந்து ம. சண்முகசுந்தர முதலியார் ஆசிரியராகவும், பண்டிதர் பி.கே. மாணிக்கவாசக முதலியார் துணை ஆசிரியராகவும் பணிபுரிந்தனர். நீண்ட காலம் வெளியாகி இடை நின்ற இவ்விதழ், பின் மீண்டும் 2000 முதல் வெளிவந்தது. இதன் ஆசிரியர், கே.பி.கே. செல்வராஜ்.

இதழ் அமைப்பு

தொடக்க காலத்தில் முகப்புப் பக்கத்தில், செங்குந்த மித்திரன் என்ற இதழின் தலைப்பில் 'ஓம்' என்ற சின்னம் இடம்பெற்றது. தொடர்ந்து ஆசிரியர் பெயர், ஆண்டு, மாத வெளியீட்டு விவரங்கள், கடவுள் வாழ்த்து, பத்திரிகை ஆசிரியரின் முன்னுரை ஆகியன இடம்பெற்றன. இதழின் உள்நாட்டு சந்தா முப்பது ரூபாய் ஆகவும், வெளிநாட்டு சந்தா 40 ரூபாய் ஆகவும் இருந்தது. 42 பக்கங்களில் வெளியானது.

செங்குந்த மித்திரனின் பிற்கால இதழ்களின் முகப்புப் பக்கத்தில் செங்குந்த மக்களில் உள்ள சான்றோர்கள், சாதனையாளர்களின் படங்கள் இடம்பெற்றன. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பும் வெளியானது. சிறுத்தை, வேல், சேவல் இணைந்த படம் இதழின் சின்னமாக இடம்பெற்றது.

"செங்குந்த மித்திரன் சீரார் இதழ் வாழி
எங்குந்தன் பேர்பரப்பும் ஈடில்லாப் - பொங்குந்தன்
கூத்தர் குலம் வாழி! கோலத் தமிழ் வாழி!
ஏத்துநலம் வாழி இசைந்து"

- என்னும் கிருபானந்த வாரியாரின் வாழ்த்து இடம்பெற்றது. இதழின் தனிப்பிரதி விலை 15/- ரூபாய். ஆண்டுச் சந்தா ரூபாய் 1000/- செங்குந்த மித்திரனின் பிற்கால இதழ் 60 பக்கங்களில் வெளிவந்தது.

உள்ளடக்கம்

செங்குந்த மக்களில் உள்ள சான்றோர்கள், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு செங்குந்த மித்திரன் இதழில் படங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டது. பண்டைக்கால செங்குந்த மக்களின் அறிவு, ஆற்றல், கொடை, புகழ், பழக்கவழக்கங்கள், ஒழுக்கம் முதலிய செய்திகள் இடம்பெற்றன. செங்குந்தர் பிரபந்தத் தொகுதியுள் வரும் அரிய நூல்களை விருத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்வது, கல்வி, தொழில், வாணிகம், விவசாயம், தேசியம், கல்வெட்டு, செப்பேடு முதலியவற்றில் செங்குந்தர் தொடர்பாக உள்ள செய்திகளை ஆராய்வது, அவற்றை வெளியிடுவது போன்றவற்றில் செங்குந்த மித்திரன் இதழ் ஈடுபாடு காட்டியது. செங்குந்தமித்திரன் இதழில் 'இரட்டையர் அம்மானை' என்னும் சுவடிப்பதிப்பு வெளிவந்தது.

செங்குந்த முதலியார்களின் பணிகள், அவர்களைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றன. சமயப்பகுதி, சிறுகதைகள், கட்டுரைகள், இளைஞர்கள் பகுதி, சுகாதாரப் பகுதி, பொது விஷயங்கள், ஆன்றோர் அமுதமொழிகள், வியாபாரப்பகுதி, உலகச் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றிற்கும் இவ்விதழ் இடமளித்தது. தொடர் நாவல்களும் வெளியானது. செங்குந்தர் கல்வி நிதிச் சீட்டு, செங்குந்தர் சங்கச் செயல்பாடுகள், நற்பணிகள் பற்றிய விவரங்கள் போன்றவை இடம்பெற்றன. நூல் மதிப்புரை, பஞ்சாங்கம் ஆகியன வெளியாகின.

பிற்கால இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகள், கோயில் தல வரலாறுகள், திருக்குறள் கதைகள், செங்குந்தர் இனச் சாதனையாளர்கள் பற்றிய வரலாறு, செங்குந்தர் சங்கத்தின் கிளைச் செய்திகள், விளம்பரங்கள், செங்குந்தர் மகாஜனச் சங்கத்தின் பணிகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றன. மாணவர்களுக்கான பகுதிகள், சமையல் பகுதி, மாணவர்களின் ஓவியங்கள், வாசகர் கடிதங்கள் உள்பட பல்வேறு பல்சுவை அம்சங்கள் வெளியாகின.

மதிப்பீடு

பல்வேறு சாதி மற்றும் இனக்குழுக்களின் சார்பில் திராவிடன், ஆதிதிராவிடன், பறையன், மாத்வ மித்திரன் எனப் பல இதழ்கள் அக்காலத்தில் வெளிவந்தன. அவற்றின் தொடர்ச்சியாக செங்குந்தர் இன மக்களின் சார்பில் வெளிவரும் இதழாக செங்குந்த மித்திரன் இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2024, 17:19:14 IST