under review

சுக்கிர நீதி

From Tamil Wiki
சுக்கிர நீதி

வாழ்வியல் அறங்களைக் கூறும் வடமொழி நூல் சுக்கிர நீதி. இதனை இயற்றியவர் யாரென்று அறியப்படவில்லை. அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் தன்னைக் காணவந்த அசுரர்களுக்குக் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் உள்படப் பலர் தமிழில் இந்நூலுக்கு உரை விளக்கம் செய்துள்ளனர்.

நூலின் அமைப்பு

சுக்கிர நீதி நூல் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 2570 பாடல்கள் உள்ளன. முதல் அத்தியாயத்தில் 35 தலைப்புக்களில் நீதிகள் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாம் அத்தியாயத்தில் 20 தலைப்புக்களும், மூன்றாம் அத்தியாயத்தில் 12 தலைப்புக்களும் உள்ளன. நான்காம் அத்தியாயம், ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, 88 தலைப்புக்களில் பல்வேறு செய்திகளைக் கூறுகிறது. ஐந்தாவது அத்தியாயத்தில் பொதுநீதி என்ற தலைப்பில்செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உள்ளடக்கம்

சுக்கிர நீதி நூலின் கருத்துக்கள் பெரும்பான்மை அரசியல் பற்றியும், சிறுபான்மை மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்கள் பற்றியும் அமைந்துள்ளன. பல்வேறு கதைகளும், உவமைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

முதல் அத்தியாயம்

முதல் அத்தியாயத்தில் அரசனின் இயல்பு , நீதி நூல்களைக் கற்பதால் உண்டாகும் பயன், நாட்டில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் முறைகள், நிலங்களை அளக்கும் அளவு முறைகள், அரசன் செய்ய வேண்டிய கடமைகள் பணிகள் பற்றிய செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

அமைச்சர், இளவரசர், மற்றும் தனது உறுப்புகளாக செயல்படக் கூடியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் பற்றியும், அவர்களுக்கான தகுதிகள் பற்றியும் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது அத்தியாயம்

இரண்டாம் அத்தியாயத்தில் அரசனுக்குரிய நட்பின் ஆக்கம், தீய நட்பினால் உண்டாகும் கேடு, இளவரசர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகள், அமைச்சர், புரோகிதர், பிரதிநிதி, நீதிபதி, படைத்தலைவர்கள், கருவூலத் தலைவர் ஆகியோரின் தகுதிகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது பத்திரங்களின் வகைகள், கணித பத்திரம் எழுதும் முறைகள், அளவைகள், காலத்தின் அளவைகள், வேதம் பற்றிய விளக்கங்கள் அமைந்துள்ளன.

மூன்றாம் அத்தியாயம்

இந்த அத்தியாயத்தில் மக்களுக்குத் தேவையான பொது ஒழுக்கங்கள் பற்றிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. நூல்களின் ஆராய்ச்சி, மகட்கொடை முறைகள், கல்விச் செல்வங்களை அடைவதறகுத் தேவையான வழிமுறைகள, கொடை அளிப்பதால் ஏற்படும் நன்மைகள், அறிவு வளர்ச்சியைப் பெறுவதற்கான வழிமுறைகள் போன்றவை பற்றிய விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

நான்காம் அத்தியாயம்

அரசனுக்கும், மற்ற சமுதாய மக்களுக்கும் தேவைப்படும் நண்பர்களின் இலக்கணங்களையும், சாம, பேத, தான, தண்டம் முதலிய உபாயங்களை மேற்கொள்ளும் முறைகளையும், குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் பற்றய செய்திகள் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன.

ஐந்தாம் அத்தியாயம்

அரசன் பகைவர்களிடமிருண நாட்டைப் பாதுகாப்பது, போர்ப் படைகளை வலுவுடன் வைத்திருப்பது, மகிழ்ச்சியான வாழ்க்கை முறைகளை மக்களுக்கு அளிப்பது போன்ற செய்திகளை ஐந்தாம் அத்தியாயம் கூறுகிறது.

காலம்

சுக்கிரநீதியின் காலம் பொதுயுகம் பத்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நூலின் சிறப்பு

அரசனின் நிர்வாக முறைகள், நீதிபரிபாலனம், போர்முறைகள், தெய்வத் திருவுருவங்களின் அமைப்பு, அரசன், அமைச்சர் போன்ற அதிகாரிகளின் திறமைகளைச் சோதிக்கும் முறைகள், பணியாட்களின் திறமைகளை சோதித்தறியும் தன்மையும், பணியாட்களின் குணநலன்கள் பற்றிய செய்திகள், அவர்களுக்கான ஊதிய முறைகள், நீதிக் கருத்துக்கள், வாழ்வியல் அறங்கள் பற்றியும் சுக்கிர நீதி கதைகளுடனும், உவமைகளுடனும் விளக்குகிறது.

உசாத்துணை


✅Finalised Page