under review

சுகாபிவிருத்தினி (இதழ்)

From Tamil Wiki

சுகாபிவிருத்தினி (1914), புதுச்சேரியிலிருந்து வெளிவந்த மாத இதழ். ப. வேங்கடாசல நாயக்கர் இவ்விதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். பிரெஞ்சும் தமிழும் கலந்த நடையில் சுகாபிவிருத்தினி இதழ் வெளிவந்தது.

பிரசுரம், வெளியீடு

சுகாபிவிருத்தினி இதழ் 1914 முதல் புதுச்சேரியிலிருந்து வெளிவந்தது. புதுச்சேரி ஓர்லெயான்பேட்டையைச் சேர்ந்த ப. வேங்கடாசல நாயக்கர் இவ்விதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். ஆனந்தரதங்கப்பிள்ளை வீதியில் இருந்த சுகாபிவிருத்தினி அச்சுக்கூடத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டது. தனிப்பிரதி இதழ் விலை, சந்தா போன்ற விவரங்களை அறிய இயலவில்லை.

உள்ளடக்கம்

சுகாபிவிருத்தினி இதழில் தேச நலன், பெண்கள் நலன் சார்ந்த கட்டுரைகள் வெளியாகின. "நன்மை கடைபிடி, நாடொப்பன செய்" என்பதையும், பிரெஞ்சு முழக்கங்களான "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்பவற்றையும் கொள்கைகளாகக் கொண்டு இவ்விதழ் செயல்பட்டது.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை”

-என்ற திருக்குறள் இதழின் முகப்பில் இடம்பெற்றது. இவ்விதழ், அரசுக்கு மக்களின் குறைகள் எடுத்துச்சொல்லியது. அரசு தொடர்பான பல செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டது. புதுவையில் படித்த பெண்கள் சிலர் ஒன்று கூடி, நலவழிச்சங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக அரசின் ஒப்புதலைப் பெற முயற்சித்ததை இந்த இதழ் அறியத் தருகிறது. அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டங்கள் பிரெஞ்சில் மட்டுமே அரசால் வெளியிடப்பட்டு வந்தபோது, அனைத்துத் தரப்பு மக்களும் இதனை உணர்ந்து கொள்ள தமிழிலும் அது வெளியிடப்படவேண்டும் என்று சுகாபிவிருத்தினி இதழ் வலியுறுத்தியது.

புதுச்சேரியிலிருந்து வ.வே.சு. ஐயர் தடைகள் நீங்கி பிரிட்டிஷ் இந்தியா சென்றது, பாரதியாருக்கு பிரிட்டிஷ் அரசு விதித்திருந்த அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டதான கடிதம் என பல செய்திகளை சுகாபிவிருத்தினி இதழ் வெளியிட்டது. இந்தியா இதழ் வெளியிட்ட பல செய்திக்குறிப்புகளை சுகாபிவிருத்தினி இதழ் மீள் பிரசுரம் செய்தது.

இதழ் நிறுத்தம்

சுகாபிவிருத்தினி இதழ் எப்போது நின்றுபோனது என்ற விவரங்களை அறிய இயலவில்லை.

மதிப்பீடு

பொது நலன் சார்ந்து புதுச்சேரியிலிருந்து வெளிவந்த குறிப்பிடத்தகுந்த ஓர் இதழாக சுகாபிவிருத்தினி இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • தமிழில் இதழியல், இ.சுந்தரமூர்த்தி, மா.ரா. அரசு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, முதல் பதிப்பு: 2011



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2024, 16:14:43 IST