under review

சாந்தலிங்க சுவாமிகள்

From Tamil Wiki
சாந்தலிங்க அடிகள், சித்தரிப்பு ஓவியம்

சாந்தலிங்க சுவாமிகள் (சாந்தலிங்க அடிகள்) (சாந்தலிங்க தேசிகர்) (பொ.யு. 17 -ம் நூற்றாண்டு) பேரூர் சாந்தலிங்க சுவாமிகள், தமிழ்ப்புலவர், மொழிபெயர்ப்பாளர். வீர சைவ மரபைச் சேர்ந்த ஆசிரியர்.

வாழ்க்கை வரலாறு

சாந்தலிங்க தேசிகர் தொண்டை நாட்டில் திருத்துறை என்ற ஊரில் பொ.யு. 17-ம் நூற்றாண்டில் பிறந்தார். சாந்தலிங்க அடிகள் பதினேழாம் நூற்றாண்டில் பேரூரில் வீரசைவ மடத்தை நிறுவினார். இவர் திருவாவடுதுறை ஆதீன நிறுவனர் பஞ்சாக்கரதேசிகரின் மாணவர். திருக்கயிலாய பரம்பரை, திருவாவடுதுறை ஆதீன வழித்தோன்றல், துறையூர் திருவண்ணாமலை ஆதீன ஆதிகுருமுதல்வர் சிவப்பிரகாச தேசிகரிடம் உபதேசம் பெற்றவர். இதை,

செப்பிரும் கைலைக் குருமுறை மையிற்றன்
சிரமிசைச் சரணம்வைத் துளவோர்

என்ற வைராக்கிய தீப அடிகளால் ஊகிக்கலாம்.

மாணவர்கள்

தனிவாழ்க்கை

மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகளின் குறிப்பின்படி துறைமங்கலம் சிவப்பிரகாசரின் தங்கை ஞானாம்பிகையை சாந்தலிங்க சுவாமிகள் மணம் முடித்தார். பின்னர் துறவறம் பூண்டார். ஞானாம்பிகையார் திருவண்ணாமலை சென்று பெரியமடத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றி இறையருள் பெற்றார். அந்த இடம் ஞானாம்பிகை பீடமாக திருமடத்தின் முகப்பில் உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

சாந்தலிங்க தேசிகர் 'நெஞ்சுவிடு தூது', 'வைராக்கிய சதகம்', 'வைராக்கிய தீபம்', 'கொலை மறுத்தல்', 'அவிரோதவுந்தியார்' என்னும் ஐந்து நூல்களை எழுதினார். இவை ஜீவகாருண்யம், ஈஸ்வர பக்தி, பாச வைராக்கியம், பிரம்ம ஞானம் ஆகியவற்றை உணர்த்துவன. 'வைராக்கிய தீபம்' சதகம் போலவே நூறு செய்யுட்கள் கொண்டது. இந்த இருநூல்களுக்கு இவர் மாணவர் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் உரை எழுதினார். அவிரோதவுந்தியாரும் நூறு செய்யுட்கள் கொண்டது. அது மற்றையவை போலாகாது ஒவ்வொரு பாவும் மூன்றடியுற்று இறுதி இரண்டடிகளும் 'உந்தீபற" என்று முடிவது. இந்நூலுக்கு சிதம்பர சுவாமிகள் உரைசெய்தார். இந்த உரையில் மேற்கோளாகப் பத்தொன்பது நூல்களில் இருந்து ஐநூற்றி நாற்பது பாடல்களைச் சுட்டியுள்ளார்.

சாந்தலிங்க தேசிகர் இருபத்தியெட்டு ஆகமங்களுள் ஒன்றான வீராகமத்தை சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தார்.

பாடல் நடை

  • அவிரோதவுந்தியார்

அறம்பொரு வின்பம் வீ டாயவோர் நான்கிற்
சிறந்த பயன் வீடென் றுந்தீபற
தேரின் வீடே யெலா முந்தீபற

சமாதி

சாந்தலிங்க சுவாமிகள் மாசி மாதம் மகம் விண்மீன் கூடிய நாளில் சமாதியானார். அவருடைய சமாதித் திருக்கோயிலும், திருமடமும் கோயம்புத்தூருக்கு அருகேயுள்ள பேரூரில் பட்டீஸ்வரர் கோயிலுக்குக் கிழக்கே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.

நூல்கள்

உசாத்துணை


✅Finalised Page