under review

சர்மாவின் உயில்

From Tamil Wiki
சர்மாவின் உயில்

சர்மாவின் உயில்(1940) க.நா.சுப்ரமணியம் எழுதிய முதல் நாவல். அவருடைய நாவல்களில் தன் வரலாற்றுத்தன்மை கொண்டது.

எழுத்து, பிரசுரம்

1938-ல் சேலத்தில் ஒரு விடுதியில் தங்கி 15 நாளில் முதல்வடிவை எழுதிமுடித்த தன் முதல் நாவல் இது என்றும் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் சாண்டில்யன் சிபாரிசால் இந்நாவல் தொடராக வெளிவந்தது என்றும் க.நா.சுப்ரமணியம் தன் முன்னுரையில் சொல்கிறார். 1948-ல் கலைமகள் காரியாலய வெளியீடாக நூல்வடிவம் கொண்டது.

கதைச்சுருக்கம்

சிவராமன் என்ற இலக்கிய ஆசிரியனின் கதை இது. அவன் தந்தை பட்டாபிராமய்யர் சுவாமிமலையில் ஒரு தபால் அதிகாரி. கொஞ்சம் பணமும் வீடும் நிலபுலன்களும் வைத்திருக்கிறார். மகனை பிஏ வரை படிக்கவைத்திருக்கிறார். பையன் இலக்கிய ஆசிரியனாக ஆகவேண்டுமென்ற ஆசை இருந்திருக்கிறது. அவனும் அதேபோல எழுத ஆரம்பித்திருக்கிறான். அவன் அரசாங்கவேலையில் சேர்ந்து மாதம் நூறு ரூபாய் சம்பாதிக்கிறான்.

பி.ஏக்காரன் என்பதனால் சிவராமனுக்கு திருச்சி வக்கீல் ஒருவர் தன் மகள் ராஜத்தைக் கட்டிக்கொடுக்கிறார். ராஜம் வசதியான குடும்பத்தில் செலவுசெய்து வாழ்ந்து பழகியவள். இந்நிலையில் இலக்கிய இலட்சியவாதம் மேலோங்கிய சிவராமன் வேலையை விட்டுவிடுகிறான். மேல்நாட்டு எழுத்தாளர்களைப்போல இலக்கியத்துக்காகவே வாழவேண்டும் என்ற கனவுடன் இருக்கிறான். தந்தை சொல்லை மீறி வேலையை உதறிவிடுகிறான். அவர் 'நான் இருப்பது வரை என் செலவில் இருப்பாய். பிறகு என்ன செய்வாய்?’ என்று கேட்கிறார். அதனால் ரோஷப்பட்டுக்கொண்டு அப்பாவிடம் பணமே வாங்கக்கூடாது என்று சூளுரைத்து மனைவியுடன் சென்னையில் குடித்தனம் வைக்கிறான்.

ஆனால் அப்போது தமிழில் இலக்கியமோ வாசிப்போ உருவாகவே இல்லை. எனவே அவனுக்குப் பணமும் வரவில்லை, புகழும் வரவில்லை. அன்றைய வாசகர்கள் தேடும் அக்கப்போர்களையும் சில்லறை எழுத்துக்களையும் எழுதாமல் சிவராமன் தரமான இலக்கியத்தை உருவாக்க விழைகிறான். ஆகவே அவனுடைய எழுத்துக்கள் பெரும்பாலும் திரும்பிவிடுகின்றன. அவ்வப்போது சில பிரசுரமானாலும் மாதம் ஐம்பது ரூபாய்கூட தேறுவது கடினமாக இருக்கிறது. ராஜம் தாராளமாகவே செலவுசெய்கிறாள். பலவருடம் வேலைசெய்து சேர்த்துவைத்த ஆயிரம் ரூபாய் ஆறே மாதத்தில் காலியாகிவிடுகிறது.

ராஜம் அழகி. இலக்கிய வாசனை கிடையாது. எழுதப்படிக்கத்தெரியும் அவ்வளவுதான்.சிவராமன் எழுதுவதை அவள் வாசித்துப்பார்க்கிறாள், ஒன்றும்புரியவில்லை ஆகவே சிவராமனுக்கும் ராஜத்துக்கும் தினம் சண்டைதான். அவர்களுக்குக் குழந்தைவேறு இல்லை. எனவே சண்டையின் உக்கிரம் கூடுகிறது. அவர்களின் சண்டையே ஒரு காதல் லீலைபோலத்தான்.

சிவராமனின் சித்தப்பா கிருஷ்ணசாமி சர்மா சிறுவயதிலேயே ஊரைவிட்டு ஓடிப்போய்ப் பலவகையான தொழில்கள் செய்து பல ஊர்கள் கண்டு கடைசியில் கல்கத்தாவில் நிலைக்கிறார். நிறையச் சொத்து இருக்கிறது. சோதிடத்தில் ஈடுபாடு ஏற்பட்டு மிக விரிவாக அதில் ஆராய்ச்சி செய்கிறார். தன்னுடைய மரணநேரத்தைக் கணிக்கிறார். தன் குடும்பத்தின் பிரச்சினைகளையும் கணித்து ஒரு நீண்ட உயிலை எழுதுகிறார். அதை அவர் அவரது அக்காள் மகளான பவானிக்கு அனுப்புகிறார். அவள் ஒருவருடம் கழித்து அதைத் திறந்து வாசிக்கவேண்டும், அதுவரை எவரிடமும் சொல்லக்கூடாது என்று கூடவே அனுப்பிய கடிதத்தில் கட்டளைபோடுகிறார்.

பவானி ஓர் இளம் விதவை. கிருஷ்ணசாமி சர்மா அவளை சென்னைக்கு அனுப்பி பி.ஏ படிக்கவைக்கிறார். பவானி அழகி. அத்துடன் தீவிரமான இலக்கியவாசகி. கதைகளும் எழுத ஆரம்பிக்கிறாள். அவள்தான் சென்னையில் சிவராமனுக்கு இலக்கியத்துணைவி. அவள் ராஜம் மீது மிகுந்த அன்புடன் இருக்கிறாள். ராஜத்துக்கும் சிவராமனுக்குமான சண்டைகளில் சமரசம் செய்கிறாள். ராஜத்துக்கும் பவானியை மிகவும் பிடிக்கிறது. அதேசமயம் பவானிமீது தன் கணவனுக்கு இருக்கும் மதிப்பைக் கண்டு பொறாமையும் இருக்கிறது.

கிருஷ்ணசாமி சர்மா உயிர்துறக்கிறார். அவர் ஓர் உயில் எழுதியது எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. சிவராமனின் மாமனார் உயிலுக்காக ஆலாய்ப்பறக்கிறார். அது கிடைக்காததனால் சொத்துப் பிரிவினை நிகழாமல் போகிறது. இதன்நடுவே சிவராமனின் அப்பாவின் அம்மா சானுப்பாட்டி என்கிற ஜானகி மரணப்படுக்கையில் கிடக்கிறாள். மகன் இறந்த விஷயம் அவளுக்குத்தெரியாமலேயே நினைவிழந்து கிடக்கிறாள். அவளைப்பார்க்க சென்னையில் இருந்து வருகிறான் சிவராமன். சானுப்பாட்டி இறக்கிறாள்.

சானுப்பாட்டி பழங்காலத்தின் மிகச்சிறந்த ஒரு அம்சத்தின் பிரதிநிதி என்பது சிவராமனுக்குத் தெரிகிறது. குடும்பம் என்ற அமைப்பையே வாழ்க்கையின் இலட்சியமாகக்கொண்டு வாழ்ந்தவள் அவள்.ஒரு பேரன்னை. அவளைச்சூழ்ந்து அந்தக்குடும்பம் மட்டுமல்ல அந்த கிராமமே ஒரு பெரும் குடும்பமாக வாழ்வதை சிவராமன் உணர்கிறான். சுவாமிமலையிலேயே தங்கி இலக்கியப்பணி ஆற்ற முடிவெடுக்கிறான். தன்னுடைய தரிசனத்தை ஒரேகுடும்பம் என்ற நாவலாக எழுதுகிறான்.

இந்நிலையில் சர்மாவின் உயில் திறக்கப்படுகிறது. அதில் கிருஷ்ணசாமி சர்மா சோதிடத்தில் தனக்கு ஆர்வம் வந்ததைப்பற்றிச் சொல்கிறார். சிவராமன் இலக்கிய ஆசிரியனாகப் புகழ்பெறுவான் என்கிறார். கடைசியாக ராஜத்துக்குப் பதினாறுவருடம் கழித்தே குழந்தை பிறக்கும் என்றும் சிவராமன் பவானியை இரண்டாம்தாரமாகத் திருமணம்செய்துகொள்ளவேண்டும் என்றும் சொல்கிறார்.

அனைவரும் ஏற்றுக்கொள்ள சிவராமனுக்கு சித்தப்பாவின் சொத்தும் இலக்கிய ஆர்வம் கொண்ட அழகிய மனைவியும் கிடைக்கிறார்கள். அவனுடைய நாவல் ஒரேகுடும்பம் பெரிய வெற்றி அடைந்து புகழ் தேடிவருகிறது. அவன் சுவாமிமலை அக்ரஹாரத்திலேயே தங்கி விடுகிறான்

இலக்கிய இடம்

இந்நாவல் மிகையில்லாத யதார்த்தவாத அழகியலுடன், பரபரப்பான நிகழ்வுகளோ அல்லது உணர்ச்சிமிக்க தருணங்களோ இல்லாமல் எழுதப்பட்ட படைப்பு. பெண் கதாபாத்திரங்கள் இயல்பான நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்குன்றனர். சானுப்பாட்டி என்னும் கதாபாத்திரம் தமிழில் எழுதப்பட்ட முதல் 'பேரன்னை’ உருவகம்.

உசாத்துணை


✅Finalised Page