under review

சடகோபர் அந்தாதி

From Tamil Wiki
commonfolks.in

சடகோபர் அந்தாதி தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் கம்பர். கம்பரின் ஒன்பது படைப்புகளுள் ஒன்றான இந்நூல் அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் பாட்டுடைத் தலைவர் சடகோபர்[1] என அழைக்கப்பட்ட நம்மாழ்வார்.

ஆசிரியர்

கம்பர் தமிழின் பெருங்காப்பியமான கம்பராமாயணத்தை இயற்றியவர். ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி ஆகியவையும் கம்பர் இயற்றிய நூல்களே.

பார்க்க: கம்பர்

கம்பர் தான் இயற்றிய கம்பராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்ற விரும்பினார். கோவிலதிகாரிகள் அனுமதி மறுக்க, பெருமாளை வேண்டியபோது பெருமாள் கனவில் தோன்றி 'எம் சடகோபனைப் பாடினாயோ?' எனக் கேட்டதாகவும், கம்பர் சடகோபர் அந்தாதியைப் பாடியபின் அனுமதி கிட்டியதாகவும் தொன்மக்கதை கூறுகிறது. இச்செய்தி சிறப்புப் பாயிரத்தில் வரும்

நம் சடகோபனைப் பாடினயோ என்று நம்பெருமாள்
விஞ்சிய ஆதரத்தால கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த

என்ற வரிகளால் அறியப்படுகிறது.

நூல் அமைப்பு

அபியுக்தர் எழுதி அளித்த சிறப்புப் பாயிரமும்[2] , கம்பர் எழுதிய தற்சிறப்புப் பாயிரமும் நூல் சிறப்பும் தவிர்த்து இதில் நூறு கட்டளைக் கலித்துறைப் பாக்கள் அந்தாதியாக உள்ளன.

மன்றே புகழும் திருவழுந்தூர் வள்ளல் மாறனை முன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென் தமிழ்த் தொடையில்
ஒன்றே பதிகம் உரைத்தவன் பொன் அடி யுற்று நின்றான்
என்றே பதிகம் பதிகம் அதாக இசைத்தனனே.

அந்தாதியாக அமைந்த நூறு பாடல்களில் நம்மாழ்வாரின் பக்தியும், ஞானமும், சிறப்பும் சொல்லப்படுகின்றன. அவர் வாழ்ந்த திருக்குருகூரின்( இன்றைய ஆழ்வார் திருநகரி) அழகும், சிறப்பும் சொல்லப்படுகிறது.குருகூர் எனப் நம்மழ்வாரின் மூதாதையரான குருகனின் பெயராலேயே குருகூர் எனப்பெயர்பெற்றதாகக் கூறப்படுகிறது. "ஆனால் குருகு என்ற பறவையில் இருந்தே குருகூர் என்ற சொல் வந்திருக்கும் என்பதற்கான ஆதாரம் கம்பன் சடகோபர் அந்தாதியில்

கயல் குதிப்ப திரங்குங் கழை நெடுந்தாளிர்தொடுத்த
செந்தேனுடைத்து பரக்கும் பழன வயற்குருகூர்

என்று சொல்லியிருப்பதுதான். இன்றும் ஆழ்வார் திருநகரி இருப்பது குருகு வாழும் ஓடைகளும், வயல்களும் மண்டிய தாமிரவருணிக்கரைச் சூழலில் தான்" என்று ஜெயமோகன் ஊரின் பெயர்க்காரணத்திற்கு சடகோபர் அந்தாதியை சான்றாகக் குறிப்பிடுகிறார்.

கம்பர் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் ‘கண்ணன் உண்ணும் அறுசுவை உணவு’ (7), பக்திக்கு மூலப்பனுவல் (8), திருமாலின் 11ஆவது அவதாரம் (78), நான்கு வேதத்தின் சாரம் (71) எனப் பலவாகக் காண்கின்றார்.

பாக்களில் சிறந்ததாகத் திருவாய் மொழியையும், அதைப் பாடிய நம்மாழ்வாரை ‘ஞானத்தைத் திறந்து தந்தவன்’(85) என்றும் புகழ்கின்றார்.

உசாத்துணை

சடகோபர் அந்தாதி-மூலமும் உரையும்-தமிழ் இணைய கல்விக்கழகம்

குருகு-ஜெயமோகன்

அடிக்குறிப்புகள்

  1. நம்மாழ்வார் பிறந்ததும் மற்ற குழந்தைகளைப் போல அழவில்லை. பதினாறு ஆண்டுகள் பேசவும் இல்லை. மாயையை உருவாக்கும் “சட” எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. சட நாடியை வென்றதால் “சடகோபன்” என்றும் அழைக்கப்பட்டார்.
  2. தேவில் சிறந்த திருமாற்குத் தக்கதெய்வக் கவிஞன்
    பாவால் சிறந்த திருவாய் மொழிபகர் பண்டிதனே
    நுவில் சிறந்த மாறற் குத் தக்கநன் நாவலவன்
    பூவில் சிறந்த ஆழ்வான் கம்பநாட்டுப் புலமையனே.
    ஆரணத்தின் சிரமீது உறை சோதியை ஆந்தமிழால்
    பாரணம் செய்தவனைக் குருக்ஷரனைப் பற்பலவா
    நாரணனாம் என ஏத்தித் தொழக் கவி நல்குகொடைக்
    காரணனைக் கம்பனைக் நினைவாம் உள் களிப்புறவே.
    நம் சடகோபனைப் பாடினயோ என்று நம்பெருமாள்
    விஞ்சிய ஆதரத்தால கேட்பக் கம்பன் விரைந்து உரைத்த
    செஞ்சொல் அந்தாதி கலித்துறை நுறும் தெரியும் வண்ணம்
    நெஞ்ணூ அடியேற்கு அருள் வேதம் தமிழ்செய்த நின்மலனே.
    நாதன் அரங்கன் நயத்துரை என்ன நல் கம்பன் உன்தன்
    பாதம் பரவி பைந்தமிழ் நுறும் பரிவுடனே
    ஓதும்படி எனக்க உள்ளம் தனையருள் ஓதரிய
    வேதம் தமிழ்செய்த மெய்ப்பொருளே இதுஎன் விண்ணப்பமே.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 09:00:26 IST