கோ. பெரியண்ணன்
கோ. பெரியண்ணன் (முனைவர் கோ. பெரியண்ணன்; நல்லாமூர் டாக்டர் கோ. பெரியண்ணன்; டாக்டர் ஜி. பெரியண்ணன்) (பிறப்பு: மார்ச் 26, 1947) எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
கோ. பெரியண்ணன், மார்ச் 26, 1947 அன்று, மயிலம் அருகிலுள்ள, நல்லாமூரில் கோவிந்தசாமிக் கவுண்டர் - தனலட்சுமி இணையருக்குப் பிறந்தார். நல்லாமூர், மயிலம் பள்ளிகளில் பள்ளிக் கல்வி கற்றார். மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று கல்வியியலில் இளநிலை, முதுநிலை (பி.எட்.; எம்.எட்.) பட்டம் பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் குருவிக்கரம்பை சண்முகத்தின் வழிகாட்டலில் மாலை நேரக் கல்லூரியில் பயின்று 'ஆய்வியல் நிறைஞர்' (எம்ஃபில்) பட்டம் பெற்றார். அவருடைய வழிகாட்டுதலிலேயே 'திண்டிவனம் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
கோ. பெரியண்ணன், மணமானவர். மனைவி: அம்சவேணி. பிள்ளைகள்: பெ. மயிலவேலன், பெ.வனிதாமணி, பெ.ஜோதிப்ரியா.
கல்விப் பணிகள்
கோ. பெரியண்ணன், 1969-ல் சென்னை கோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பிறகு கோடம்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளியிலும், வேடந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், நங்கநல்லூர் அரசு உயர் நிலைப்பள்ளியிலும் இரண்டாம் நிலைத் தமிழாசிரியராக பணியாற்றினார். நங்கநல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைத் தமிழாசிரியராகப் பதினேழு ஆண்டுகள் பணியாற்றினார். செங்கல்பட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏழு ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். செங்கற்பட்டு மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலராகப் பொறுப்பு வகித்தார். பெரம்பலூர், தனலட்சுமி கல்வியியல் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். வந்தவாசி, துரை கல்வியியல் கல்லூரி முதல்வராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
கோ. பெரியண்ணன் எழுதிய 'மரம் வளர்ப்போம் வாருங்கள்' என்ற பாடல் தமிழக அரசின் 8-ம் வகுப்புப் பாடநூலில் இடம்பெற்றது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பாட நூல் ஆசிரியர் குழு உறுப்பினராகச் செயல்பட்டார். ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலின் மேலாய்வாளராகப் பணியாற்றினார். பன்னிரண்டாம் வகுப்பு சிறப்புத் தமிழ் பாட நூலின் ஆசிரியர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகப் பல பாட நூல்களை எழுதினார்.
இலக்கிய வாழ்க்கை
கோ. பெரியண்ணன், உரை, நாட்டுப்புறவியல், சாரணர் இயக்கம், இலக்கணம், சுயமுன்னேற்றம், வரலாறு, சிறார் இலக்கியம், கட்டுரை நூல்கள் என பல்வேறு வகைமைகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். 40-க்கும் மேற்பட்ட கல்வியியல் நூல்களை எழுதினார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தார். கருத்தரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்றவற்றில் பங்குபெற்று உரையாற்றினார். பட்டிமன்ற நடுவராகச் செயல்பட்டார்.
பெரியண்ணன் திருக்குறளுக்கு எழுதியிருக்கும் ஓலைச்சுவடி வடிவிலான உரை வரவேற்பைப் பெற்றது.
அமைப்புச் செயல்பாடுகள்
கோ. பெரியண்ணன், நங்கநல்லூர் பள்ளியில் பணியாற்றியபோது சாரணர் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார். 50-க்கும் மேற்பட்ட கல்வியியல் சார்ந்த தேசிய பன்னாட்டுக் கருத்தரங்குகளைத் நடத்தினார். 2004-ல் 'தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவன'த்தைத் தொடங்கினார். அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். ஒவ்வோர் ஆண்டும் சிறந்த 50 ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 'ஆசிரியச் செம்மல்' விருது வழங்குகிறார்.
பொறுப்பு
- தேசியத் தலைவர், பொதுச் செயலாளர் அனைத்து இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
- இயக்குநர், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம்
- சைதாப்பேட்டை கல்வி மாவட்ட தமிழாசிரியர் கழகத் தலைவர்
- தலைமையாசிரியர் கழக காஞ்சி வருவாய் மாவட்டத் தலைவர்
- மாநில சாரண, சாரணியர் இயக்கத் துணைத் தலைவர்
- நங்கநல்லூர் திருக்குறள் பேரவைச் செயலாளர்
பதிப்பு
கோ. பெரியண்ணன், தனது மனைவியின் பெயரில் 'அம்சா ஆப்செட் பிரிண்டர்ஸ்' என்ற அச்சகத்தை நிறுவினார். தனது மகளின் பெயரில் 'வனிதா பதிப்பகம்' என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். தனது மகன் பெ. மயிலவேலனைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பு வகிக்கச் செய்து, தமது நூல்களையும், பிறரது நூல்களையும் இப்பதிப்பகம் மூலமாக வெளியிட்டார்.
விருதுகள்
- தமிழக அரசின் நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது
- தமிழக அரசின் திருவள்ளுவர் விருது
- புதுச்சேரி சிறுவர் இலக்கிய மன்றம் அளித்த 'குறள் உரைக்கோ' விருது
- சென்னை கம்பன் கழகம் அளித்த 'தமிழ்நிதி' விருது
- வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்றம் அளித்த 'கிராமியப் பாடல் வித்தகர்' பட்டம்
- வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்றம் அளித்த 'சாரணப் பேரொளி' பட்டம்
- உலகத் திருக்குறள் உயராவு மையம் அளித்த 'குறள் வளர் செம்மல்' விருது
- ஞான ஒளித் திருத்தொண்டர் விருது
- திருக்குறள் மாமணி பட்டம்
- பழவந்தாங்கல் அரிமா சங்கம் அளித்த நல்லாசிரியர் விருது
- 'சாரணர் இயக்கம்' நூலுக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அளித்த சிறந்த நூலுக்கான பரிசு
- 'முத்தமிழகராதி' நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு
- பாரத சாரண சாரணிய இயக்கத்தினர் அளித்த மாநில விருது
- உலகத் தமிழ் செம்மொழிப் பேரவை அளித்த அமுதத் தமிழ் அரசு விருது
- இந்திய அரசு வழங்கிய தேசிய நல்லாசிரியர் விருது
வாழ்க்கை வரலாறு
கோ. பெரியண்ணனின் வாழ்க்கை வரலாற்றை கோ. குணசேகர் எழுதினார். இந்நூலை 2016-ல், கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் மலாயா இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து வெளியிட்டது.
மதிப்பீடு
கோ. பெரியண்ணன், மாநில, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழாசிரியர்களுள் ஒருவர். திருக்குறள் உரையாசிரியர். இலக்கியம், கல்வி, பதிப்புப் பணிகளோடு, சாரண இயக்க வளர்ச்சிக்கும் உழைத்த சான்றோராக அறியப்படுகிறார்.
நூல்கள்
சிறார் நூல்கள்
- சிறுவர் இன்னிசைப் பாடல்கள்
- சிறுவர் பாடல்கள்
- சிறுவர்களுக்கான இசைப் பாடல்கள்
- மாணவர்களுக்கு அப்துல்கலாம் - பொன்மொழிகள்
- மாணவர்களுக்கு ம.பொ.சி.
- மாணவர்களுக்கு பாரதிதாசன்
- நன்னெறிக் கதைகள்
சாரணர் இயக்க நூல்கள்
- சாரணர் இயக்கம்
- சாரணர் இயக்கம் வளர்ந்த கதை
- சாரணர் இயக்கமும் மாணவர் வளர்ச்சியும்
- சாரணர் மாநில விருது பெறுவது எப்படி?
- சாரணர் குடியரசுத் தலைவர் விருது பெறுவது எப்படி?
- சிறுவர் சாரண இயக்கம்
- சாரண சாரணியர்
- சாரண சாரணியர் இயக்கப் பாடல்கள்
- சாரண இயக்கப் பயிற்சிகள்
- சாரண இயக்கச் செயற்பாடுகள்
- சமுதாய மேம்பாட்டிற்குச் சாரணர் இயக்கம்
திருக்குறள் நூல்கள்
- திருக்குறள் பெரியண்ணன் உரை
- திருக்குறள் கதைக் களஞ்சியங்கள் (1330 படங்கள், 1330 கதைகள்)
- திருக்குறள் கதைக் களஞ்சியங்கள் அறத்துப்பால்
- திருக்குறள் கதைக் களஞ்சியங்கள் காமத்துப்பால்
- திருக்குறள் கதைக் களஞ்சியங்கள் பொருட்பால் தொகுதி - 1
- திருக்குறள் கதைக் களஞ்சியங்கள் பொருட்பால் தொகுதி - 2
- திருக்குறள் ஒரு பக்க படக்கதைகள்
- திருக்குறள் ஓலைச்சுவடி உரை
கல்வியியல் நூல்கள்
- கல்வி சார்ந்த செயற்பாடுகள்
- சுற்றுப்புறச் சூழல் கல்வி
- சுற்றுப்புறச் சூழலும் சுகாதாரப் பாதுகாப்பும்
- சிந்தனை வளர்ச்சிப் பூக்கள்
- பெரியண்ணன் கல்விச் சிந்தனைகள்
- வனிதாவின் பொதுக் கட்டுரைகள்
- சீர்மிகு செம்மொழிக்கல்வி
- மது விழிப்புணர்வுக் கல்வி
- கல்வி உளவியல்
- தற்கால இந்திய சமுதாயம்
- கற்பித்தல், கற்றல்
- கலைத்திட்டத்தில் மொழி
- குழந்தை உரிமைகள், பாதுகாப்பு
- கற்றல் மதிப்பீடு
- சுற்றுச்சசூழல் கல்வி
- பள்ளி மேலாண்மை, நிர்வாகம்
- பாலினம், பள்ளி, சமுதாயம்
- கல்வியறிவும் கலைத்திட்டமும்
- ஒருங்கிணைந்த பள்ளியை உருவாக்குதல்
- யோகா, உடல்நலம், உடற்கல்வி
- விழுமம் அமைதிக்கான கல்வி
- மனித உரிமைக் கல்வி
- தொழில் கல்வியின் வழி சமூக ஈடுபாடு
- பேரிடர் மேலாண்மை
- சிறப்புக் கல்வி
- வாழ்கைத் திறன் கல்வி
நாட்டுப்புற இலக்கிய நூல்கள்
- கிராமியப் பாடல்கள்
- ஏற்றப்பாட்டில் இராமாயணம்
- நல்லாமூர் நாட்டுப்புறப் பாடல்
- திண்டிவனம் வட்டார நாட்டுப்புறப் பாடல்கள்
- நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்
இலக்கண நூல்கள்
- இனிய தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள்
- தேன்தமிழைத் தெரிந்து கொள்வோம்
- அடிப்படைத் தமிழிலக்கணம்
- தேர்வுக்குதவும் தீந்தமிழிலக்கணம்
- மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கான இலக்கணம்
- தேர்வாணையத் தேர்வுக்கேற்ற இலக்கணம்
- தமிழில் தவறின்றி எழுத, பேச, கற்க!
- தமிழ் இலக்கணம் - தொடக்க நிலை
- தமிழ் இலக்கணம் - உயர்நிலை
- தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்
வரலாற்று நூல்கள்
- தென் தமிழகம் தந்த தீயாக தீபங்கள்
- டாக்டர் A.P.J. அப்துல் கலாம்
- சாதனை படைத்த சான்றோர்கள் வரலாறு
- வீர சிவாஜியின் வரலாறு
- குருநானக் வரலாறு
- வரலாற்றுப் புகழ் நல்லாமூர்
சுய முன்னேற்ற நூல்கள்
- வெற்றிக்கு வழிகள்
- நினைவாற்றலுடன் வாழ்க்கையில் முன்னேற
அகராதி நூல்
- முத்தமிழகராதி
பக்தி நூல்கள்
- இராம காதை
- வில்லிப்புத்தூரார் மகாபாரதம்
உசாத்துணை
- வனிதா பதிப்பகம் இணையதளம்
- கோ. பெரியண்ணன் நூல்கள், மெரீனா புக்ஸ் தளம்
- கோ. பெரியண்ணன் நூல்கள், அமேசான் தளம்
- உலகத் தமிழர் கலைக்களஞ்சியம், ஆசிரியர், அமரர், டாக்டர் சி.எஸ்.எஸ். சோமசுந்தரனார், பதிப்பாசிரியர், முனைவர் இ.கே.தி. சிவகுமார், விஜய ராஜேஸ்வரி பதிப்பகம், தி.நகர், சென்னை - 17, முதல் பதிப்பு, நவம்பர் 2006
- கோ. பெரியண்ணன், எழுத்தாக்கம்: கோ. குணசேகர், கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2016.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Feb-2025, 22:12:12 IST