under review

காவேரி கல்யாண நாடகம்

From Tamil Wiki
Kaveri kalyanam.jpg

'காவேரி கல்யாண நாடகம்' மராட்டிய மன்னர் சாகேஜி எழுதிய நூல். இந்நூல் கவேர என்னும் மன்னனின் மகள் காவேரிக்கு மணம் தேடி திருவையாறு இறைவனின் முன் திருமணம் நிகழ்ந்ததாக அமைந்த கற்பனைக் கதை.

பார்க்க: மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியர் மராட்டியப் பேரரசை தமிழகத்தில் தோற்றுவித்த ஏகோஜி மன்னரின் மூத்த மகன் சாகேஜி. நூலில் உள்ள “திரா.பா. காவேரி கல்யாண நாடகம் - ஸாகராஜ க்ருதம் - தைலங்க பக்கம் 40 விவாஹ” என்னும் குறிப்பின் வழி இதனை ஏகோஜியின் முதல் மகனான சாகேஜி தமிழ் மொழியில் இயற்றினார் என்றும், அது தெலுங்கு மொழிக்குரிய எழுத்தில் எழுதப்பட்டது என்றும் அறியமுடிகிறது. சாகேஜி மன்னரின் காலம் பொ.யு. 1684 - 1712.

நூலில்,

“புகழ் பஞ்சநதி வாசா போசல குல ஈசா
சகசி ராசா இரவும் பகலும்தான் பணியும் சர்வேசா”

என வரும் குறிப்பால் இதனை வேறு புலவர் எழுதி சாகேஜி மன்னர் பெயரில் வெளியிட்டிருக்கலாம் என ஆய்வாளர் மு. இளங்கோவன் கருதுகிறார்.

கதை

காவேரி கவேர மன்னின் மகள். மன்னன் காவேரியின் திருமணத்திற்காக கணவனை தேடி வரச் சொல்லி அமைச்சர்களை அனுப்புகிறார். அதே வேளையில் கடலரசன் தனக்குப் பெண் தேடி அகஸ்திய முனிவரிடம் சென்றான். கவேர மன்னனின் அமைச்சர்களும், கடலரசனும் வழியில் சந்தித்துக் கொள்கின்றனர். கடலரசனுக்கும், காவேரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருவையாறு இறைவனின் முன்னிலையில் நிகழ்கிறது என அமைந்த செய்யுள் நாடகமே ‘காவேரி கல்யாண நாடகம்’

மராட்டியர் ஆட்சிக் காலத்தில் நாடகத்தை ‘நாடகம்’, ‘கல்யாணம்’, ‘விலாசம்’ எனக் கூறும் வழக்கம் இருந்தது.

கதாபாத்திரங்கள்

  • சூத்திரதாரன்: நாடகத்தை அறிமுகம் செய்து விளக்கம் கொடுப்பவன்.
  • கட்டியக்காரன்: நாடகத்தை தொடங்கி வைப்பவன்
  • கவேரராஜன்: கவேர கன்னியின் தந்தை
  • கவேரராஜ ஸ்திரீ: கவேரராஜனின் மனைவி
  • கவேர கன்னி: கவேரராஜனின் மகள் (காவேரி)
  • கவேர ராஜன் மந்திரி: அமைச்சர்
  • சமுத்திரராஜன்: கடல் அரசன், கவேர கன்னியின் கணவன்
  • அகஸ்தியர்: பொதிகை மலை வாழ் முனிவர்
  • சகி: கன்னியின் தோழி
  • பஞ்சநதீசர்: திருவையாற்று இறைவன்

பிற குறிப்புகள்

  • கதைக் களம்: திருவையாறு பஞ்சநதீசர் ஆலயம் (காவேரிக் கரை)
  • காலம்: சாகேஜி மன்னரின் காலம்
  • காவேரி கல்யாணம் (யக்ஷ கானம்)
  • ராகம்: நாட்டை
  • தாளம்: ஜம்பை

சுவடி

இந்நூலின் சுவடி தஞ்சை சரஸ்வதி மகால் நூலகச் சுவடி எண் 639-ல் உள்ளது.

நூலின் மொழி

இந்நூல் சாகேஜி மன்னரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது. “காவேரி கல்யாண அரவி பாஷை” என்னும் குறிப்பினால் இந்நூல் தமிழ்மொழியிலும் எழுதப்பட்டிருக்க வேண்டுமென ஆய்வாளர் மு. இளங்கோவன் குறிப்பிடுகிறார். ‘காவேரி கல்யாணம்’ மராட்டிய மொழியிலும் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென ஆய்வாளர் அறிவுடைநம்பி கருதுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page