கடுவன் இளவெயினனார்
கடுவன் இளவெயினனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் பரிபாடலில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
கடுவன் இளவெயினனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கடுவன் என்னும் ஊரினர். எயினர் குடியை சேர்ந்தவர். திருமால் குறித்து இவர் பாடிய பாடல்களில் வேதக் கருத்துகள் இடம்பெறுவதால் வேத மரபை சார்ந்தவர் என்று கருதப்படுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
கடுவன் இளவெயினனார் பாடிய பாடல்கள் பரிபாடலில் 3, 4, 5-ம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன. பரிபாடல் 3 ,4-ம் பாடல்களில் திருமாலைப் போற்றிப் பாடியுள்ளார். 5-ம் பாடலில் செவ்வேளான முருகக் கடவுளை போற்றிப் பாடியுள்ளார். மூன்று பாடல்களும் பாலை யாழ்ப் பண்ணில் அமைந்தவை. திருமால் குறித்து பாடப்பெற்ற 3, 4-ம் பாடல்களுக்கு பெட்டகனாரும் முருகன் குறித்து பாடப்பெற்ற 5-ம் பாடலுக்கு கண்ணகனாரும் இசையமைத்துள்ளார்கள்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
திருமாலின் சிறப்பு
- தீ, காற்று, வானம்,நிலம், நீர் என்னும் ஐந்து பூதங்களும்,சூர்ய சந்திரர்களும், தர்மமும் (அதற்கு ஆதாரமான வேள்விகளும்) ஐந்து கோள்களும் (செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி), திதியின் மைந்தர்களாகிய அஸுரர்களும், விதியின் மக்களாகிய பன்னிரண்டு ஆதித்யர்களும், குற்றமற்ற அஷ்ட வஸுக்களும், ஏகாதஸ ருத்ரர்களும். இரு அஸ்வினி தேவர்களும்.யமனும் அவனுடய படராகிய கூற்றுவனும், மூவேழாகிய இருபத்தியொரு உலகங்களும், அவற்றில் வாழும் உயிர்களும் ஆகிய இவை எல்லாம் உன்னிடத்திலிருந்தே வெளிப்பட்டு நிலைத்தன என்று வேதம் மொழிகிறது.
- தாமரை மலரில் தோன்றிய பிரம்மதேவனும் அவனுக்குத் தந்தையும் நீயே என்று அந்தணர்களின் அருமறை மொழிகின்றது.
- தேவர்களிடமிருந்து அமிர்தத்தைக் கொணர்ந்து தன் தாயின் துயர் தீர்த்த கருடனை வாகனமாகக் கொண்டிருக்கிறாய். அந்தக் கருடனையே கொடியாகவும் கொண்டிருக்கிறாய்.உன் திருவடிகளில் ஒன்று கீழ் ஏழு உலகங்களையும் அளந்தது.
- ஊழியின் முடிவில்,நெருப்பும், கூற்றுவனும், யமனும், சூர்யனும் திரிந்து கூடி, பொங்கும் கடலில் அமிழும் நிலமகளை அழகிய கொம்புடைய வராஹமாகி எடுத்தாய் எனவும்; மேகங்கள் (விடாது) பொழிவதனால் விழும் நீரை, அன்னச் சேவலாகி உன் சிறகினால் வற்றச் செய்தாய் எனவும் முனிவர்களும் தேவர்களும் உன் சிறப்பினை நயந்து பாடுகின்றனர்.
- நீயே குதிரை வடிவில் வந்த கேசி என்னும் அஸுரனை அழித்தாய்.உன் புகழைப்போலவே உன் கைகளும் எண்ணிலடங்காதவை. அமிர்தத்தைக் கடைந்து எடுத்த அக்காலத்தில், அஸுரர்களை விலக்கி, தேவர்களுக்கே நீ அமிர்தத்தைக் கொடுத்ததால், ஒரு கை நடுவு நிலையிலிருந்து திரிந்தது. இரு கை, மூன்று கை, நூறு, ஆயிரம், பதினாயிரம்,நூறாயிரம் என்றிவ்வாறு எண்ணற்ற கைகளையும், யாக்கைகளையும் உடையவனாக இருக்கிறாய். வேதங்களின் முதல்வனே! பரம் பொருளே! நீ எங்கள் பொறி புலன்களுக்கு எட்டாதவனாக இருக்கிறாய்.
- வழிவழி வந்த வேத முதல்வனே! அரிய நூல்களாலும், மனம்,அஹங்காரத்தினாலும், மற்ற எல்லாவற்றாலும் உன் வலியையும் வனப்பையும் அறிய இயலாது. பூரண கலைகளுடன் கூடிய சந்திரனின் கிரணங்களையே உணவாக உடைய, பலவித அணிகள் பூண்ட தேவர்களின் தலைவனாக இருக்கிறாய். நீ பூமியை அளந்த காலத்தில் உனக்கு அஞ்சி, கலைந்து கெட்ட மாலைகளுடன் கடலுக்குள் புகுந்து கொண்ட அஸுரர்களுக்கும் நீயே தலைவனாக இருக்கிறாய்! உன் மரபை நன்கு அறிந்த ஞானிகளும், உனக்கு யார் பகைவன், யார் நண்பன் என்று சொல்ல இயலாது!
- ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளையும் தன் அலகினால் கவ்விய கருடனை வாகனமாக உடையவனே! சிவந்த கண்ணுடைய திருமாலே எனக் கதறும் வண்ணம் அவன் தருக்கையும் அடக்கியவனே! காலத்திற்கும் முதல்வனாக உள்ளவன்.
- உன் தன்மையை சாமவேதம் பாடுகிறது ! அதனால் ஒருவாறு அறிந்தோம்..நெருப்பில் வெம்மையும், மலரில் மணமும், கல்லினுள் மணியும், சொல்லில் வாய்மையும், அறத்தினுள் அன்பும்., மறத்தினுள் கொடுமையும், வேதத்தில் உபனிஷதமும்,பூதத்தில் ஆகாயமும்,சூர்யனில் ஒளியும், சந்திரனில் குளிர்ச்சி யும் நீ தான். எல்லாம் நீயே, அவற்றின் உட்பொருளும் நீயே ! அதனால் நீ உறைதலும் இல்லை, உறையும் இடமும் இல்லை! அவற்றைக் கொண்டு உன்னை அறிதல் மாயையாகும்! (மாயமார் அனையை) நீ பிறவாத பிறப்பில்லை ! உன்னைப் பிறப்பித்தோரும் இல்லை!
- காயாம் பூ போன்று நீல நிறத்தவனே! அருளே குடையாகவும், அறமே செங்கோலாகவும் கொண்டு மூவேழ் உலகத்தையும் நீ ஆட்சி செய்கிறாய்!
- ஐந்து பூதங்கள், ஐந்து கன்மேந்த்ரியங்கள், ஐந்து ஞானேந்த்ரியங்கள், ஐந்து புலன்கள், மனம் முதலிய அந்தக்கரணங்கள் மூன்று. மூலப் ப்ரக்ருதி, புருஷன் எனப்பட்ட இருபத்தியைந்து தத்துவங்களினாலும் நான்கு யுகங்களிலும் உன் பெருமையை ஆராய்ந்து வருகின்றனர்!
- சிவந்த கண்களுள்ள வாசுதேவனே! கருத்த கண்களும் வெளுத்த உடலும் கொண்ட ஸங்கர்ஷணனே! சிவந்த உடலுடைய ப்ரத்யும்னனே! பச்சைக் கண் உள்ள அநிருத்தனே! ஆய்ச்சியர்களோடு கை கோர்த்து அவர்களுக்கு இடமும் வலமும் ஆடினாய்! கூத்தாடக் குடமும் எடுத்தாய்! கலப்பை ஆயுதத்தை உடையவனே! உலகைக் காப்பவனே! எவராலும் அறியமுடியாத மரபை உடையவனே! அடியவர்களின் இதயத்தில் நிலைபெற்றவனே ! என்றும் நிலை பெற்றவனே !உலகை ஆளும் மன்னவ ! இயல் அறிந்த பழம் புலவனே! யாழ் வாசிக்கும் பாணனே ! வனமாலையை அணிந்தவனே ! தோல்வி யறியாத தலைவனே! பீதாம்பரம் அணிந்தவனே! வலம்புரி சங்கும் சக்கரமும் ஏந்தியவனே! போரில் நிபுணனே ! திருமகள் கணவனே ! வெற்றி வீரனே !
- நிலம் தோன்றாத அந்த ஆதிகாலத்தில், நீரின் நடுவில், உன் உந்தியில் ப்ரம்மனோடு தோன்றிய கமலத்தை உடையவனாகிய உன் சக்கரமே உலகிற்குக் காப்பாகும்!
- திருமாலின் அடியவர் மெய், வாய், கண், மூக்கு, செவி ஐந்து பொறிகளில் தோன்றும் இருள்-மயக்கத்தை நீக்கியவர்கள்.
- மனத்தில் தோன்றும் இரக்கமின்மை, இரக்கம், போற்றுதல், இகழ்தல் (மைத்திரி, கருணை, முதிதை, இகழ்ச்சி) என்னும் நான்கினுள் வேண்டாதவற்றைத் துடைத்தவர்கள். இவற்றையெல்லாம் ஒன்றுபடுத்தி உன்னிடம் ஆற்றுப்படுத்தி உன்னைத் தொழுபவர். உன் புகழைச் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள்.
- திருமணி, அலையில்லாத கடல், பொழியும் மேகம் - மூன்றைப் போன்ற மெய்-நிறம் கொண்டவன் நீ. இந்த மா-நிற உடம்புக்கு மாறுபட்ட, பொன்னிற உடை கொண்டவன். உன்னைத் தாங்கிக்கொள்ளாத பகைவரை அழிக்கும் சக்கரத்தைக் கொண்டவன்.
- சினம் தணிந்த சிவப்புக் கண்களை உடையவன் நீ. பிரகலாதன் உன்னைப் புகழ்ந்தான்.அதனைக் கேட்டதும் அவன் தந்தை இரணியன் நெஞ்சு புகைந்தது. பிரகலாதன் நெஞ்சில் ஈரச் சந்தனம் காய்ந்தது. பிரகலாதனைக் பலப்பல வையாகக் கட்டிப் போட்டான்.பிரகலாதனோ துன்புற்றான். எனினும் உன் புகழ் வாயில் வர மலர்ந்துகொண்டே இருந்தான்.
- தந்தை உன்னை இகழ்ந்தான். நீ அவனை இகழவில்லை. அவன் மார்பினைக் கட்டித் தழுவினாய். அவன் மனத்தில் படிந்திருந்த மதத்தைச் சாம்பலாக்கினாய். தந்தைக்கு இன்னலும், மகனுக்கு இனிமையும் [இன்னர்] இடியாக முழங்கும்படி வெடி ஓசையுடன் தூண் பிளந்து பொடியாகும்படி தோன்றினாய். உன் நகங்களால் அவன் தசையைப் பிளந்தாய்.
- பன்றி உருவம் கொண்டு உன் கண்பார்வை வலிமையால் இந்த உலகத்தைத் தூக்கினாய்.இது குன்றைத் தூக்குவது போல் இருந்தது. உயிரினங்களின் தோற்றம், நிலைபேறு, ஒடுங்கி அழிதல் - ஆகிய மூன்றும் உனக்குள் ஒடுங்கிக் கிடக்கின்றன.
- உன்னுடைய சூடும் வெளிச்சமும் சூரியனிடம் இருக்கிறது. உன்னுடைய குளுமையும் அழகும் நிலாவிடம் உள்ளது.உன்னுடைய பொழிவும் கொடையும் மழையிடம் உள்ளது.உன்னுடைய பாதுகாத்தல், தாங்கிக்கொள்ளுதல் பண்புகள் நிலத்திடம் உள்ளன.உன்னுடைய மணமும் ஒளிநிறமும் பூவை என்னும் காயாம் பூவில் உள்ளது.உன்னுடைய தோற்றமும் விரிவும் நீரில் உள்ளது. உன்னுடைய உருவமும் ஓசையும் ஆகாயத்திடம் இருக்கிறது.உன்னுடைய வரவும் ஒடுங்கி-மடிதலும் மருத்துவத்திடம் உள்ளது.
- அதனால், இவையும் உவையும் அவையும் பிறவும் ஆகிய எல்லாமே உன்னிடம் பாதுகாவலாக உள்ளன. ஆனால் உன்னிடமிருந்து பிரிந்து உள்ளன,கருடச்சேவல் கொண்ட உயர்ந்த கொடியை உடையவனே! திருமால் பனைக்கொடியை உடையவனே! பலராமன் நாஞ்சில் என்னும் கலப்பைக்கொடியை உடையவனே! பரசுராமன் யானைக்கொடியை உடையவனே! முதலைக்கு மோட்சம் தந்த யானை அவதாரம்
- நஞ்சு கொண்டது பாம்பு. அந்தப் பாம்பின் உயிரை வாங்குவது கருடன். அந்தக் கருடன் உனக்குக் கொடி. அந்தப் பாம்பு உன் முடிப்பக்கம் உள்ளது. அந்தப் பாம்பே உனக்குத் தொடியாகவும் (கங்கணமாகவும்) உள்ளது. அந்தத் தொடியில் பாம்பு தலைப்பக்கம் கொண்டுள்ளது.
பாம்பே உனக்கு அணிகலன். அதுவே உனக்குச் சிறைமெத்தை. அதன் தலைப்பக்கம் உன் தலை. அந்தப் பாம்பின் மேல் சாய்ந்து அதன் மதத்தைச் சாய்த்தவன் நீ. பூணாகவும் கொடியாகவும் கொண்ட உன்னைத் தாக்கித் தானே அந்தப் பாம்பு உனக்கு இரையானது.
- கடுமையாகத் துன்புறுத்துவது, அச்சுறுத்துவது, கடுப்பேற்றுவது, கொடை வழங்குவது, கொடுமை செம்மை வெம்மை தண்மை ஆகிய தன்மைகளாக விளங்குவது முதலானவை இருக்குமிடமெல்லாம் இருப்பவன் நீ. இல்லாத இடங்களிலெல்லாம் இல்லாமல் இருப்பவன் நீ
- போற்றாப் பகைவர், போற்றும் நண்பர் ஆகியோர் உயிர்களிலும், மாற்று (ஏமாற்றாத தன்மை), ஏமாற்று என்னும் தன்மைகள் - என்று பாகுபடுத்தாமல் இருக்கிறாய். உன்னைப் போற்றினால் நண்பர், பகைவர் என்று நீ பார்ப்பது இல்லை.
- உனக்கு வடிவம் என்பது எங்கள் மனம் நினைப்பதுதான். இருளே இருக்கை.மணியே மேனி. துளசி உன் மாலை. திருமகள்-மறு இருக்கும் மார்பு கொண்டவன்.
- உனக்குள்ளிருந்து தோன்றியது தாமரை. அந்தத் தாமரையே உன் கண். அந்தத் தாமரையே உன் திருவடி. உன்னைப் போன்று சிறந்த வேறு கடவுளும் உண்டு. அந்தக் கடவுளர் நீ சொல்லும் மறைவேதங்களையே அந்தணர் மறைகளாகப் பேசுகின்றனர்.
- நல்ல நிழல் தரும் ஆலமரம், கடம்ப-மரம், திரு-அரங்கம் என்னும் ஆற்று-நடு, காற்று மோதும் ஆறு குன்றங்கள், மற்றும் பிற இடங்களில் அமர்ந்து நீ வெவ்வேறு பெயர் பூண்டு விளங்குகிறாய்.
- எங்கு யார் இருந்தாலும் அவரெல்லாம் நீதான். உன்மீது அன்பு கொண்டவர் தொழும்படி விளங்குகிறாய். அவரவர்களுக்கு வேலைக்காரனும் நீதான். அவரவர் செய்யும் பணிகளுக்குப் பாதுகாப்பாக விளங்குபவனும் நீதான்.
முருகக் கடவுள் குறித்த செய்திகள்
- செவ்வேள் என்னும் முருகப்பெருமான், கடல்நிலமே துகளாகும்படிக் கடலுக்குள் புகுந்தவன். மயிலில் ஏறிச் செல்பவன். போரிட்டு, தீப்பந்தம் விட்டெறிந்து, போரால் துன்புறும் சூரபன்மனை வெட்டி வீழ்த்தியவன்.வெற்றி வீரர்களுடன் சேர்ந்துகொண்டு உயிரினங்களைக் கொன்று தின்ற மாய அரக்கர்களை எச்சமிச்சம் இல்லாமல் கொன்ற வேலை உடையவன்.
- நாவலந்தண்பொழில் எனப்படும் தென்னகம், வடநாடு இரண்டுக்கும் இடையே இருந்த குருகுப் பறவையின் பெயர் கொண்ட பெரிய மலையை கிரவுஞ்ச-கிரியை உடைந்து மலையை வழியனுப்பிவைத்த ஆறு இளந்தலைகள் கொண்டவன்.ஆறு தலைகளுக்கும் பன்னிரண்டு தோள் கொண்டவன்.பகலவன் போல ஒளி மிக்கவன். தாமரையில் பிறந்தவன். அழிக்கும் கடவுளின் மகன்.செம்மைக் கொடையாளி. பேய்கள் விழாக் கொண்டாடி 'சால்புடையவன், தலைவன்' என்று போற்றி வெறியாட்டம் ஆடும் பெருந்தகை.
- முருகன் எல்லை இல்லாதவன்.இந்த உலகமும் நீ. ஆதலின் உன்னைச் சிறப்பித்துப் போற்றுவதால் உனக்குச் சிறப்பு வரப்போவதில்லை.
- சிறப்புக்கும் சிறப்பு நீ. பிறப்பில் தாழ்ந்தவன் நீ. என்றாலும், எல்லாரும் நின் ஆற்றலுக்கு உட்பட்டவர்கள்.
- சிவன் முப்புரத்தை அழித்தான்.அப்போது,பிரமன் ஆதி அந்தணன் தேர் ஓட்டினான்.வேதங்கள் குதிரை.நிலவுலகம் தேர்.நாகம் வில்லிலுள்ள நாண்.மேரு மலை வில்.அழலும் தீ அம்பு.ஒரே அம்பில் மூன்று கோட்டைகளையும் தீப்பற்றி எரியச்செய்தவன்.இந்தச் சினம் தணிய, தேவர்கள் வேள்வி செய்தனர்.அவர்கள் அளித்த வேள்விப் பாகத்தை வாங்கி உண்டவன்.அவன் இளங்கண் ஒன்றும் கொண்ட பார்ப்பான்.
- சிவன் உமையுடன் கூடிக் காமப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தான். அது புணர்ச்சி இல்லாத புணர்ச்சி. அப்போது அவன் நெற்றிக் கண் ஒரு வரம் தந்தது.
- அந்த வரம் ஒரு கருவைத் தந்தது,பெற்ற கருவை பிரமன் இந்திரனுக்கு அளித்தான். இந்திரன் கைகளால் அதனை தாங்க முடியவில்லை. எனவே இந்திரன் தன் கையிலிருந்த கோடாரி படையால் அடித்து அதன் உருவத்தைச் சிதைத்தான். அது உலகம் ஏழுக்கும் அருள் புரியும் ஏழு பிண்டங்களாக மாறியது.
- ஏழு மாதவ முனிவர்கள் சிதைந்த கருவைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் முதிர்ந்து தேய்ந்து தழுதழுத்த உடம்பினை உடையவர்கள். அவர்கள் அந்தத் தசைப் பிண்டங்களைத் தீ வேள்வியில் இட்டு எடுத்து, தம் மனைவியரிடம் தந்து உண்ணுமாறு வேண்டினர்.
- ஏழு கன்னிமாருள் வடமீனாக விளங்கும் அருந்ததி உண்ணவில்லை.ஏனைய ஆறு பேரும் உண்டனர். ஆறு பேரும் கருவுற்றனர்.ஆறு பேரும் குழந்தை பெற்றனர்.இமயமலை நீலப்பைஞ்சுனையில் உள்ள ஆறு தாமரைப் பூக்களில் பெற்றனர்.குழந்தைகளைக் கண்டு சினம் கொண்ட இந்திரன் தன் வச்சிரப் படையால் தாக்கினான்.சிதைந்த ஆறு குழந்தைகளும் ஒன்று திரண்டு ஓருருவம் பெற்றது. அக்குழந்தையே முருகன். இப்படி நிறைவடையாத உடம்பில் அமர்ந்துகொண்டு நீ விளையாடிய போரில் இந்திரன் தோற்றுப்போனான்.
- உன் வெற்றியைப் பாராட்டி, அனல்-கடவுள் தன் உடம்பிலிருந்து பிரித்து வாரணம் என்னும் சேவலைக் கொடுத்தான். (எரியும் தீ போல் சிறகுகளைக் கொண்டது சேவல்). இந்திரன் (வானத்துச் செல்வன்) தன் உடம்பிலிருந்து பிரித்து மயிலைத் தந்தான். (ஆயிரம் கண் கொண்ட மேனி போல் மயில்) எமன் (ஞமன்) தன் உடம்பிலிருந்து பிரித்து வெள்ளாட்டுக் குட்டியைக் கொடுத்தான். அவ்வாறே பிறரும் அவரவர் உடம்பிலிருந்து பிரித்து விரும்பியதைத் தந்தனர். இதனால் ஆட்டுக்குட்டி, மயில், சேவல், வரிந்து கட்டிய வில், மரம், வாள், ஈட்டி, கோடாரி, மூவிலை-வேல், தீச்சட்டி, மாலை, மணி என்று 12 கைகளில் 12 விருதுப் பொருள்களைக் கொண்டுள்ளாய்.
- தாமரைக் கொட்டையில் இருந்த குழந்தைப் பருவத்திலேயே இந்திரனின் புகழ் வரம்பை கடந்தவன்.
- உன் குணத்தைச் சிலர் அறம் எனக் கொண்டனர். நிலைபெற்ற (தடுமாறாத) குணமுடைய மாதவர் உன்னை வணங்கினர். இவர்கள் உன் திருவடி நிழலை அடைந்தனர். அழிக்கும் தீய நெஞ்சில் நீடித்த சினமுடையவர்களும், அறம் சேராமல் சீர்மை இல்லாமல் இருப்பவர்களும், அழிதவம் செய்வர்களும், மறுபிறப்பு இல்லை என்று சொல்லும் மடையர்களும் உன் நிழலை அடையமாட்டார்கள்.
பாடல் நடை
பரிபாடல் - 3
மாஅயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மாஅயோயே!
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
மாயா வாய்மொழி உரைதர வலந்து:
...................................................................................................
இட வல! குட வல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!
தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண!
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பெரு விறல் மள்ள!
மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே!
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jan-2026, 13:27:51 IST