under review

எஸ்.ஜி. கிட்டப்பா

From Tamil Wiki
எஸ்.ஜி. கிட்டப்பா
எஸ்.ஜி. கிட்டப்பா

எஸ்.ஜி. கிட்டப்பா (செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா) (ஆகஸ்ட் 25, 1906 – டிசம்பர் 2, 1933) நாடக நடிகர், நாடக ஆசிரியர், இசைவாணர். இருபத்தியெட்டு வயதில் காலமானபோது கிட்டப்பா பாடகராக, நடிகராக புகழின் உச்சத்தில் இருந்தார்.' ஸ்ரீ கானசபா' நாடகக்குழுவை கே.பி. சுந்தராம்பாளுடன் இணைந்து ஏற்படுத்தி பல நாடகங்களை அரங்காற்றுகை செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ்.ஜி. கிட்டப்பாவின் இயற்பெயர் இராமகிருஷ்ணன். உறவினர்கள் 'பொங்கப்பா' என்றழைத்தனர். வீட்டிலுள்ளவர்கள் 'கிட்டன்' என்றழைத்தனர். நாடக உலகில் கிட்டப்பா என்று அறியப்பட்டார்.

அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த செங்கோட்டையில் கங்காதர அய்யர், மீனாட்சி இணையருக்கு ஆகஸ்ட் 25, 1906-ல் பிறந்தார். பூர்வீகம் திருநெல்வேலியிலுள்ள ஆழ்வார்க்குறிச்சி. உடன் பிறந்தவர்கள் சுப்புலட்சுமி, சிவகாமி, அப்பாத்துரை, சுப்பையா, செல்லப்பா, சங்கரன், காசி, பிச்சம்மாள், நாராயணன் ஆகியோர். குடும்ப வறுமை காரணமாக முறையான கல்வி பயிலவில்லை. 1920-ல்‌ இவருக்கு உபநயனம்‌ நடந்தது.

எஸ்.ஜி. கிட்டப்பா

தனிவாழ்க்கை

ஜூன் 23, 1924-ல்‌ சென்னையில்‌ திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விசுவநாத ஐயரின் மகள், பதினொரு வயதுள்ள கிட்டம்மாளை கிட்டப்பா மணந்தார். திருமணத்திற்கு முத்தையா பாகவதர்‌, மகாராஜபுரம்‌ விஸ்வநாத ஐயர்‌, செளடையா, தட்சிணாமூர்த்திப்‌ பிள்ளை முதலிய இசைக்கலைஞர்கள் வந்தனர். சி. கன்னையா மணமக்களுக்கு ஆயிரம்‌ ரூபாய்‌ திருமணப்பரிசாக அளித்தார்.

எஸ்.ஜி. கிட்டப்பா திரைப்பட நடிகையும் பாடகியுமான கே.பி. சுந்தராம்பாளை 1927-ல் காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 1926-ல்‌ கிட்டப்பாவின்‌ தாய்‌ காலமானார். 1927-ல்‌ இவரைப்‌ பராமரித்து வந்த அப்பாதுரை ஐயர்‌ காலமானார்‌. அதன்பின் சுந்தராம்பாளுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக மதுபானம்‌ அதிகம் அருந்தி வயிற்றுநோயால்‌ அவதிப்பட்டார். இந்தக் காலங்களில் பள்ளிகளுக்கு சங்கீத நாடகங்கள் நடத்திக்‌ கொடுத்தார்‌. வேறு சில உதவி நாடகங்கள் நடத்திக்‌ கொடுத்தார்‌.

காந்தியவாதி

எஸ்.ஜி. கிட்டப்பா காந்தியத்தில்‌ ஈடுபாடு கொண்டவர். 1921-ல்‌ காந்தியின்‌ கதர்ப்‌பிரச்சார காலத்திலும், பஞ்சாப்‌ படுகொலை நிகழ்ந்தபோதும், திலகர்‌ சுயராஜ்ய நிதிக்கும்‌, கதர்‌ நிதிக்கும்‌ தேசபந்து சித்தரஞ்சன் தாசின்‌ சுயராஜ்ய கட்சிக்கும்‌, சென்னை உப்பு சத்தியாகிரகத்துக்கும்‌ தம்முடைய நாடகங்கள்‌ மூலம்‌ பணம்‌ திரட்டி உதவி செய்தார். 1930-ல்‌ உப்பு சத்தியாகிரகத்திற்குக்‌ கடற்கரைப்‌ பொதுக்கூட்டத்தில்‌ தன்னுடைய பேனாவை ஏலம்‌ விட்டதில்‌ கிடைத்த ஐம்பது ரூபாய்‌ பணத்தை நிதியாக அளித்தார். கடைசிவரையில்‌ கதர்‌ ஆடையும்‌ காந்தி குல்லாவும்‌ அணிந்திருந்தார்‌.

நாடக வாழ்க்கை

எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள்

கிட்டப்பா இளமையில் தாயிடமும்‌, சகோதரர்களிடமும் இசை கற்றார். சங்கரதாஸ் சுவாமிகளின் ஆதரவால் இசையிலும் நாடகக்கலையிலும் ஈடுபட்டார். அவர் மூலம் நடிப்பு, பேச்சு, பாட்டு ஆகிய திறமைகளை வளர்த்துக்‌ கொண்டார்‌. தன் ஆறாவது வயதில் முதன்முதலில் மேடையேறினார். எட்டு வயதில் இலங்கையில் நடைபெற்ற நாடகங்களில் நடித்தார். முதன்முதலாக மதுரையில்‌ சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகம்‌ ஒன்றில்‌ பாடல் பாடினார். 'அலிபாதுஷா' நாடகத்தில்‌ பாதுஷாவின்‌ பிள்ளையாக நடித்தார். நல்லதங்காள்‌ நாடகத்தில்‌ நல்லதங்காளின் பிள்ளைகளில்‌ ஒருவனாக நடித்து ’தந்தையே எவ்விதம்‌’ என்ற பாடலைப் பாடினார். திருவனந்தபுரம்‌, எர்ணாகுளம்‌ ஆகிய இடங்களிலும் நாடகங்களில் நடித்தார்.

1919-ல்‌ கிட்டப்பா கொழும்பிலிருந்து திரும்பியபோது தம்‌ சகோதரர்‌ காசியுடன்‌ சி. கன்னையாவின் நாடகக் கம்பெனியில்‌ சேர்ந்தார்‌. புகழும், செல்வமும் அதன்பின் சேர்ந்தன. கிட்டப்பா என்ற பெயர்‌ பல பொருள்களுக்கு இடப்பட்டு வியாபாரிகள்‌ லாபம்‌ அடைந்தனர். கன்னையா 'கிருஷ்ண லீலா' நாடகத்தை எஸ்.ஜி. கிட்டப்பாவை நாயகனாகக் கொண்டு அரங்காற்றுகை செய்து புகழும் பணமும் பெற்றார். சி. கன்னையாவின்‌ 'தசாவதாரம்' நாடகம்‌ கிட்டப்பாவுக்கு மேலும் புகழ் சேர்த்தது. இந்த நாடகம் சென்னை ராயல்‌ தியேட்டரில்‌ தொடர்ச்சியாக மாதக்கணக்காய்‌ நடந்தது.

எஸ்.ஜி. கிட்டப்பா ஏழு வருடங்கள் கிருஷ்ண வினோத சபா நாடகக் கம்பெனியில் பணியாற்றிய பின், 1926-ல் சி. கன்னையாவிடம்‌ ஏற்பட்ட மனத்தாங்கலால் அதிலிருந்து விலகினார். விலகியபின் சிறப்பு (ஸ்பெஷல்) நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். நாடகத்தில் நடிப்பதற்காக, சிங்கம் அய்யர் என்பவரின் அழைப்பின்பேரில் கிட்டப்பா தன் சகோதரர்கள்‌ சுப்பையா, செல்லப்பையா, காசி ஆகியோருடன் இலங்கை சென்று பல நாடகங்கள்‌ நடத்தினார். அங்கு கே.பி. சுந்தராம்பாளைச் சந்தித்தார். அவரின் ஸ்திரீபாட்டுக்கு (கதாநாயகி வேடம்) இணையாக ராஜ்பார்ட்(கதாநாயகன்) வேடங்களில் நடித்தார்.

எஸ்.ஜி. கிட்டப்பா
ஸ்ரீ கானசபா

திருமணத்திற்குப்பின் 'ஶ்ரீகானசபா' என்ற நாடகக் குழுவை சுந்தராம்பாளுடன் இணைந்து ஏற்படுத்தினார். தமிழகம் முழுவதும் நாடகங்கள் அரங்காற்றுகை செய்தார். இருவரும்‌ சேர்ந்து இலங்கை, தமிழ்நாடு மட்டுமன்றி, மைசூர்‌, திருவாங்கூர்‌, ஹைதராபாத்‌, பர்மாவிலும்‌ நடித்து பொருள்‌ ஈட்டினர்.

இசை

திரைப்படங்கள் பிரபலம்‌ ஆவதற்கு முன் நாடகங்களில் சங்கீதம் முக்கிய அம்சமாக இருந்தது. கிட்டப்பா இசைவாணராய்‌ இருந்ததால் அவரின் நாடகங்கள்‌ 'சங்கீத நாடகம்‌' என்றே விளம்பரம்‌ செய்யப்பட்டன. கிட்டப்பா நடித்த நாடகங்கள்‌ இக்காரணத்தால்‌ அக்காலத்தில்‌ 'சங்கீத சத்தியவான்‌ சாவித்திரி', 'சங்கீத கோவலன்‌', 'சங்கீத நந்தனார்‌', 'சங்கீத வள்ளி திருமணம்‌', 'சங்கீத சாரங்கதரா', 'சங்கீத குலேபகாவலி' என்று விளம்பரம்‌ செய்யப்பட்டன. கர்நாடக சங்கீதம்‌ மட்டுமல்லாமல்‌ இந்துஸ்தானி மெட்டுக்களையும்‌ பாடினார்‌. இசைத்தட்டுக்களிலும்‌ பதிவு செய்தார்‌. அக்காலத்தில்‌ அதிகமாகப்‌ பயன்பட்ட தியாகராஜர்‌ கீர்த்தனங்களை தன் நாடகங்களில் அதிகம் பாடி நடித்தார்.

எஸ்.ஜி. கிட்டப்பா

விருதுகள்/ பாராட்டுகள்

  • சென்னை மாநிலத்தின்‌ கவர்னர்கள் வெலிங்டன்‌, சோஷன்‌ ஆகியோரிடமிருந்து தங்கப்‌ பதக்கம்‌ பரிசு பெற்றார்.
  • இலங்கையிலிருந்த இந்திய வர்த்தக அமைப்பு எஸ்.ஜி. கிட்டப்பாவின் கலைத்திறமையைப் பாராட்டித் தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கியது.
  • முத்தையா பாகவதர்‌, மகாராஜபுரம்‌ விஸ்வநாத ஐயர், மதுரை பொன்னுசாமி, திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை, வீருசாமிப்‌ பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணியம்‌, பிடில்‌ கோவிந்தசாமிப்‌ பிள்ளை, தட்சிணாமூர்த்தி, காஞ்சிபுரம்‌ நயினாப்பிள்ளை, பிடாரம்‌ கிருஷ்ணப்பா, செளடையா, மருங்காபுரி கோபாலகிருஷ்ணய்யர்‌, முத்தையா பாகவதர்‌, காரைக்குடி வீணை சகோதரர்கள்‌, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் போன்றோர்‌ கிட்டப்பாவின் நாடகங்களை முன் வரிசையில் உட்கார்ந்து பார்க்கும் வழக்கம் கொண்டிருந்தனர்.
  • எஸ்.ஜி. கிட்டப்பாவின் சிந்துபைரவி பாடல்‌ ஒன்றின் இசைத்தட்டைக்‌ கேட்ட புதுக்கோட்டை மிருதங்க மேதை தட்சிணாமூர்த்திப்‌ பிள்ளை “ஆண்டவனே இதுவல்லவா சத்தியமான சங்கதம்‌” என்று பாராட்டினார்.
  • வடநாட்டில்‌ புகழ்பெற்ற சங்கீத வித்துவான்‌ விஷ்ணுதிகம்பரர்‌ சென்னைக்கு வந்தபோது கிட்டப்பா அவருக்குப் பிரியமான பகாடி ராகத்தை பாடியபோது அவர் எழுந்து ஓடிவந்து கிட்டப்பாவைத்‌ தழுவிக்கொண்டு, முத்தமிட்டு ஆசிர்வதித்தார். அதன் பிறகு திகம்பரருக்கு மிகவும்‌ விருப்பமான ’ரகுபதி ராகவ ராஜாராம்‌ பதீத பாவன சீதாராம்‌’ என்ற பஜனை சங்கீர்த்தனத்தைத்‌ தங்களுடைய நாடகத்தின்‌ இறுதியில்‌ பாடும் வழக்கத்தைக் கிட்டப்பா ஏற்படுத்திக்‌ கொண்டார்‌.
  • கிட்டப்பா, 'கந்தர்வகான கிட்டப்பா' என்று பட்டம்‌ பெற்றார்‌.
  • ஆக்கூர்‌ அனந்தாசாரியர்‌ கிட்டப்பாவை 'செங்கோட்டை சிங்கம்‌' என்று பாராட்டினார்.
எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள்

மறைவு

கிட்டப்பா திருவாரூரில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே மயங்கி விழுந்து டிசம்பர் 2, 1933 அன்று காலமானார்.

புகழ்பெற்ற பாடல்கள்

  • 'கோபியர் கொஞ்சும் ரமணா'
  • 'காமி சத்யபாமா'
  • 'அன்றொருநாள் குட்டி அருஞ்சிறையிலிட்டேன் நான்'

இவரைப்பற்றிய நூல்கள்

  • எஸ்.ஜி. கிட்டப்பா (அவரது ஜீவிய சரித்திரம்): ஆக்கூர் அனந்தாச்சாரி (1934)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Mar-2023, 07:18:23 IST