ஊசல் (நூல்)
ஊசல், (பொ.யு. பனிரெண்டாம் நூற்றாண்டு) செங்குந்த வீரர்களைப் புகழந்து பாடப்பட்ட நூல். ஊசல், வாழ்த்து, லாலி, எச்சரிக்கை, பெரியகட்டியம், சின்னகட்டியம், மங்களம் போன்ற செய்திகளைக் கொண்டது. மயிலைநாதர் என்பவரால் இயற்றப்பட்டது.
நூல் அமைப்பு
ஊசல் நூல் ஊசல் என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்தது. விநாயகர் மீதான காப்புச் செய்யுளைத் தொடர்ந்து 30 பாடல்கள் உள்ளன.
உள்ளடக்கம்
ஊசல் என்பது தெய்வங்களையும், மன்னர்களையும் ஊஞ்சலில் அமர வைத்து அவர்களது புகழையும், பெருமையையும், அவர்களது வீர, தீரச் செயல்களையும் கூறி. அவ்வூஞ்சலை அசைத்து ஆடுமாறு செய்வது. பிள்ளைத் தமிழ் நூல்களில் வரும் ஊசலோடு தொடர்புடையது. செங்குந்த குலத்தவரைப் பெரும்பாலும் மன்னவராகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது. செங்குந்தர், உமாதேவியார் புத்திரர் என்றும், சோழமண்டல முதலிகள் என்றும் ஊசல் நூல் கூறுகிறது.
பாடல்
ஊஞ்சல்
வச்ரமணி யால்கடைந்த கால்கள் நாட்டி
வைடூரி யத்திலுயர் விட்டம் போட்டு
பச்சைநிற மரகதத்தால் கொடுங்கை சேர்த்துப்
பருநீல மணிப்பலகைத் தொட்டில் பூட்டி
நிச்சயச்செம் பொன்னின்வடக் கயிறு தூக்கி
நிலையாகச் சோடித்த ஊசல் மீதே
கச்சிமா வடிக்கம்பர் பங்கில் வாழுங்
கெளரியுமை புத்திரரே ஆடீர் ஊசல்
பட்டாடை அசைந்தாட மார்பில் இட்ட
பதக்கம்பொன் சரப்பளிமுத் தாரம் ஆட
இட்டரத்தி னக்கடுக்கன் காதில் ஆட
எழில்வீசும் செங்கடப்ப மாலை ஆடச்
சுட்டிகண்ட சாமணப்பூ மாலை ஆடத்
தொடுத்தநிறை பூடணத்தின் நிழல்கள் ஆட
மட்டவிழ்மா மலர்நிறைந்த ஊசல் மீதே
வல்லானை வென்றவரே ஆடீர் ஊசல்
செங்குந்தத்தின் பெருமை
தெருளோங்கு தில்லைமா காளிநிலை கொண்டாழ்ந்த
தேரோட விட்டகுந்தம்
தெரிவருந் தேயம்எண் ணிலவென்று திறை தரத்
தேய்த்திடா தாண்டகுந்தம்
தெளிகொள்ஆ ருயிரெலாம் சிந்தித்த எய்தபல்
சிவாலயம் அமைத்தகுந்தம்
தெற்றியினும் இல்லினும் தன்னை வழிபடுவோர்க்கெண்
சித்திதந் தாள் செங்குந்தம்
தெய்வமறை யோதுபஞ் சாக்கரம் செபியாத
தீயர்வாய் சீச்செய்குந்தம்
தெண்மைதரு வெண்ணீறோ டக்கமணி புனைகலாச்
சிதடர்மெய் சிதைசெய்குந்தம்
தெறிதராச் சிந்தையொடு தனைஅருச் சிப்பவரைச்
சிவபதத் தேற்றுகுந்தம்
தெண்டிரைக் கடல்சூழும் உலகில்கைக் கோளர்தம்
செயவீர செங்குந்தமே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Oct-2024, 10:17:40 IST