under review

ஆழம் (நாவல்)

From Tamil Wiki
ஆழம்.jpg

‘ஆழம்’ (2022) சீ. முத்துசாமியின் மூன்றாவது நாவல். சாதிய சண்டை காரணமாக இரு குடும்பங்களுக்கு நடுவில் உருவாகும் பகை ஒரு கொலைக்குக் காரணமாவதும் அது தொடர் கொலைகளுக்கு வழிவகுப்பதும் நாவலின் சாரம்.

வரலாறும் பின்புலமும்

சுதந்திரத்துக்குப் பின்னர் கம்யூனிஸ்ட்டுகள் ஆங்கில தோட்ட முதலாளிகளுக்கு எதிராகச் செய்த தாக்குதலின் பின்னணியில் இந்நாவல் உருவாகியுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து ஆங்கில முதலாளிகள் தோட்டங்களைச் சீனர்களுக்கு விற்பதையும் தோட்டத் துண்டாடல் நிகழ்வதையும் இந்த நாவல் பதிவு செய்துள்ளது.

கதைச்சுருக்கம்

சாதிய சண்டை காரணமாகப் பெருமாள் குடும்பத்துக்கும் செவத்தியன் குடும்பத்துக்கும் நடுவில் உருவாகும் பகை ஒரு கொலைக்குக் காரணமாவதும் அது தொடர் கொலைகளுக்கு வழிவகுப்பதும்தான் நாவலின் சாரம். இந்தச் சாதி பகையைச் சுதந்திரத்துக்குப் பின்பான தோட்டப்புறச் சூழலில் சீ. முத்துசாமி உருவாக்கியுள்ளார். தோட்ட முதலாளிகள் மீது கம்யூனிஸ்டுகளின் தாக்குதல்களும் தோட்டத் துண்டாடல்களும் நிகழ்ந்து கொண்டிருந்த அழுத்தம் நிறைந்த வரலாற்றுப் பின்னணியில் இரு குடும்பங்களுக்கிடையில் கனன்று கொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியும் அதன் பின்னணியில் இயங்கும் மனப்பாவனைகளையும் சீ. முத்துசாமி புனைவாக்கியுள்ளார்.

வேடியப்பனின் அப்பா செவந்தியன் ஒரு சாதி தகராறில் பெருமாளைத் தாக்க அவர் முடமாகி வீட்டிலேயே முடங்குகிறார். ஒரு திருவிழா பந்தியில் தாழ்ந்த சாதி நபர் ஒருவர் பரிமாறியதால் இந்தத் தகராறு எழுகிறது. இதைத் தொடர்ந்து அத்தோட்டத்தின் தண்டலாகும் தொப்புளான் வேடியப்பனைப் பழி தீர்க்க நினைக்கிறார். எனவே, வேலை விசயத்தில் அவருக்குப் பலவிதமான இடையூறுகள் தருகிறார். ஒரு கொலைப் பழியை அவர் மேல் சுமத்துகிறார். இதனால் வேடியப்பன் தொப்புளானைக் கொன்று பழி தீர்க்கிறார். தங்கள் தந்தையை வேடியப்பன்தான் கொன்றிருப்பார் எனச் சந்தேகிக்கும் தொப்புளானின் இரு புதல்வர்களான ராமனும் லட்சுமணனும் வேடியப்பன் மகன் மணியைக் கொல்லத் திட்டமிடுகின்றனர்.

கதை மாந்தர்கள்

  • செவத்தியன் - சாதி சண்டையில் ஈடுபட்டுப் பெருமாள் என்பவரின் காலை உடைத்து முடமாக்குபவர். இரு குடும்பங்களுக்கான பகை இவரிடமிருந்தே தொடங்குகிறது.
  • வேடியப்பன் - செவத்தியனின் மகன். இவரே நாவலின் மைய கதாபாத்திரம். செய்யாத கொலைக்காக சிறைக்குச் செல்கிறார். தன்னைச் சிறைக்கு அனுப்பியவர்களைப் பழி வாங்குகிறார்.
  • மணி - வேடியப்பனின் மகன். நாவல் இவன் பார்வையில் விரிகிறது.
  • பெருமாள் - செவத்தியனிடம் சாதி சண்டையில் ஈடுபட்டு முடமாகுபவர்.
  • தொப்புளான் - பெருமாளின் மகன். தோட்ட தண்டலாக வந்து வேடியப்பனைப் பழி வாங்க முயல்கிறார்.
  • ராமன் லட்சுமணன் - தொப்புளானின் இரட்டை மகன்கள். மணியைக் கொலை செய்ய முயல்கின்றனர்.

இலக்கிய இடம்

மிக முக்கியமான வரலாற்றுப் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருந்தாலும் பழிவாங்கும் இரு குடும்பத்தினரின் வன்மத்தை மட்டும் பேசுவதாலும் நாவல் பேச முனையும் சாதிய சிக்கலை வலுவாக முன்வைக்காததாலும் எழுத்தாளர் ம. நவீன் 'ஆழம்' நாவல் ஜனரஞ்சக இலக்கியத்துக்கான தன்மையைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Jul-2023, 16:33:17 IST