under review

தோட்டத் துண்டாடல்

From Tamil Wiki
Rubberestates.jpg

ஆங்கிலேயே முதலாளிகளின் பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட தோட்டங்கள், சிறு சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவை உள்ளூர் முதலாளிக்கு விற்கப்படும் செயல் தோட்டத் துண்டாடல் என அழைக்கப்படுகிறது. மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு மலாயாவில் தோட்டத் துண்டாடல் தீவிரமடைந்தது. ஆயிரக்கணக்கான தோட்டங்கள்ரப்பர் தோட்டங்ககள் துண்டாடலுக்கு உள்ளாயின.

பின்னணி/வரலாறு

Estate-workers-old-photo.jpg

1950-களில் மலாயாவில் கம்யூனிச அச்சுறுத்தல் மிகுந்த காரணத்தால் மலாயாவில் இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது ரப்பர் தோட்டங்களை விற்பனைச் செய்யத் தொடங்கின. பிரிட்டிஷ் நிறுவனங்கள், 1950-களின் பிற்பகுதியிலும் 1960-களின் முற்பகுதியிலும் இரப்பர் தோட்டங்கள் உள்ளிட்ட தங்கள் தொழிலை படிப்படியாக நிறுத்தத் தொடங்கின. 1957-யில் மலாயா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷார் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை உருவானது. எனவே அவர்கள் அவசர அவசரமாக தங்கள் தோட்டங்களை விற்க முன்வந்தனர்.

பெரிய தோட்டங்களை விற்பனை செய்வதில் சிக்கல் இருந்தது. பெரும் பணம் செலுத்தி அவற்றை வாங்கும் வசதி படைத்த உள்நாட்டு செல்வந்தர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆகவே உள்ளூர் முதலாளிகளிடம் தோட்டங்களை விற்பனை செய்ய அவை சிறு சிறு பகுதிகளாகத் துண்டாடப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள ரப்பர்த் தோட்டங்கள் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுத் பல உள்ளூர் முதலாளிகளிடம் விற்கப்பட்டன. அவற்றை சீன முதலாளிகள் அதிகம் வாங்கினர். வெளிநாட்டவர் உடமைகளாக இருந்த அத்தோட்டங்கள் உள்நாட்டுச் சிறு பண்ட உற்பத்தியாளர்களுக்கு கைமாற்றப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் என அரசாங்கம் நினைத்தது. ஆகவே, தோட்டத் துண்டாடலை மலாயா அரசு ஆதரித்தது. 1961 மார்ச் முதல் மே மாதங்களில் எடுக்கப்பட்ட ஓர் கணக்கெடுப்பின்படி, 290 தோட்டங்களின் 231, 850 ஏக்கர் நிலப்பரப்பு துண்டாடப்பட்டன.

இந்தியர்களின் அவலம்

பேராக்கின் ஜோங் லேண்டர் தோட்டத்தைச் சேர்ந்த 300 பேர் கொண்ட தொழிலாளர் படை

அன்றைய காலக்கட்டத்தில் மலாயா இந்தியர்களில் எண்பது விழுக்காட்டினர் தோட்டங்களையே நம்பியிருந்ததால், தோட்டத் துண்டாடல் அவர்களின் பொருளாதார நிலையில் குழப்பத்தை ஏற்படுத்தியது. தோட்டத் துண்டாடல் தோட்டப்புறங்களில் வசித்த இந்தியர்களுக்குப் பாதகத்தையும் ஊக வணிகர்களுக்கு அதிக லாபத்தையும் தந்தது. உண்மை விலையைக் காட்டிலும் நான்கு அல்லது ஐந்து மடங்கு விலைக்குத் தோட்டங்கள் விற்கப்பட்டன. 1957-க்கும் 1960-க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 200,000 ஏக்கர் கொண்ட 300 ரப்பர் தோட்டங்கள் சிறு உடைமகளாக மாற்றப்பட்டன. 1967-களில் சிறு உடமைகளின் அளவு 324,000 ஏக்கராக உயர்ந்தது. அத்தோட்டங்களில் வேலை செய்துகொண்டிருந்த இந்திய தொழிலாளர்கள் பலர் வேலையிழந்தனர். சிலர் புறம்போக்கு நிலங்களில் குடியேறினர். தோட்ட துண்டாடலின் விளைவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 28,363 தோட்டத் தொழிலாளர்கள் தோட்டத்தைவிட்டு இடம்பெயர்ந்தனர்.

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் உருவாக்கம்

துன் வீ.தி. சம்பந்தன்

மலாயா அரசாங்கம் தோட்டத் துண்டாடல் குறித்தும் அதில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு குறித்தும் எவ்வித மாற்று நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அக்காலக்கட்டத்தில் தோட்டத் துண்டாடலினால் அல்லாடிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கத்தில் அப்போதைய மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவர் துன் வீ.தி. சம்பந்தன் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தை 1960-ல் தோற்றுவித்தார். இச்சங்கத்திற்கு அரசின் ஆதரவும் இதன் நிறுவனர்களுக்குப் போதிய விளம்பரமும் செல்வாக்கும் இருந்தது. “குருவிக்கும் தங்க வீடுண்டு நமக்கு அதுவும் இல்லை” என்ற பரப்புரை வாசகத்துடன் துன் வீ.தி சம்பந்தன் தோட்ட உரிமையாளராக வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.

தோட்டத்தொழிலாளர்கள் வீ.தி. சம்பந்தனுக்கு மாபெரும் வரவேற்பு அளித்தல்.

தோட்டத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் மாதத்திற்கு 10 ரிங்கிட் வீதம் இச்சங்கத்துக்குத் தருவதன் மூலம் கூட்டுறவு முறையில் தோட்டங்களை விலைக்கு வாங்க இச்சங்கத்தால் திட்டமிடப்பட்டது. இதன் வழி தோட்டத் தொழிலாளர்கள் இடம் பெயர்வதைத் தடுக்க முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இச்சங்கம் செயல்பட்டது. சங்கத்தின் உறுப்பினராக ஒரு தொழிலாளி நூறு ரிங்கிட் மதிப்புள்ள பங்குகளை வாங்க வேண்டும். அதனை மாதம் பத்து ரிங்கிட் வீதம் தவணை முறையிலும் செலுத்தலாம் என்ற திட்டத்துடன் இச்சங்கம் செயல்பட்டது. இத்திட்டம் விரைவில் வெற்றி கண்டது.

சங்கம் தொடங்கப்பட்ட முதலாண்டில் பதினைந்தாயிரம் பேர், குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்கள் உறுப்பினரானார்கள். அவர்களிடமிருந்து ஒரு மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டது. இவர்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தில் கெடாவில் உள்ள புக்கிட் சீடிம் எஸ்டேட் முதல் முதலாக இச்சங்கத்தின் வழி வாங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேறு சில தோட்டங்களையும் இச்சங்கம் வாங்கியது. அச்சமயத்தில் சங்கத்தின் சொத்து மதிப்பு 350 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது. மலேசிய இந்தியர்களுக்குச் சொந்தமான உடைமைகளிலே தேசிய நிதிக் கூட்டுறவுச் சங்கம்தான் மிகப் பெரிய நிறுவனமாகும்.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் எதிர்நோக்கிய சவால்கள்

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் தோற்று விக்கப்பட்ட பிறகு சில தோட்டங்களை வெற்றிகரமாக வாங்க முடிந்தது. ஆனால் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்திற்கு எதிர்ப்பும் இருந்தது. குறிப்பாக பி.பி நாராயணன் தலைமையில் இயங்கிய தேசிய தோட்ட தொழிலாளர் தொழிற்சங்கம் துன் சம்பந்தனை ஆதரிக்கவில்லை. தொடக்கத்தில் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் கூட்டுறவு முறையில் தோட்டத்தை வாங்கும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் திட்டத்தை வரவேற்று ஒத்துழைப்புத் தருவதாக உறுதியளித்தது. பின்னர் அது முரண்பட்ட நலன்களைக் காரணம் காட்டி அந்த ஒப்புதலைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. காலப் போக்கில் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தங்களால்தான் முடியும் என இரு அமைப்பும் கருத்து மோதலில் ஈடுபட்டன.

பி.பி. நாராயணன்

1950-களின் இறுதியில் தோட்டத் துண்டாடல் குறித்த பிரச்சனையில் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம்(தே.தோ.தொ.சங்கம்) தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது. இப்பிரச்சனையில் அரசாங்கம் தலையிட வேண்டும் என தே.தோ.தொ.சங்கம் வேண்டுகோள் விடுத்தது. நூறு ஏக்கருக்கு மேல் உள்ள தோட்டங்களின் உரிமை மாற்றம் செய்வது தொடர்பாகச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் தே.தோ.தொ.சங்கம் அரசை வற்புறுத்தியது. தொடர்ந்து வேண்டுகோள் விட்டுக் கொண்டிருந்தும் அதற்கான ஆதரவு இச்சங்கத்திற்குக் கிடைக்கவில்லை. தே.தோ.தொ. சங்கம் சொந்தமாக கெட்கோ எனும் நிலக்குடியேற்றத் திட்டம் வாயிலாக டென்டர் போடும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

தோட்டத் துண்டாடலைத் தடுத்து நிறுத்த எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையிலிருந்த தே.தோ.தொ.சங்கம் வீ. தி. சம்பந்தத்தின் முயற்சிகளைக் கடுமையாகக் குறை கூறிவந்தது. தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் தொடங்கப்பட்டபோது அது காலப் பொருத்தமற்றது என்றும் கேலி செய்தது. ஆனால், நாளடைவில் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததைக் கண்டு தே.தோ.தொ.சங்கம் கவலையுற்றது.

தோட்டத் துண்டாடல் இந்தியர்களுக்கு உண்டாக்கிய விளைவுகள்

தோட்டத் துண்டாடல் 1967-ல் அதன் உச்சத்தை அடைந்தது. சிறு தோட்ட முதலாளிகள் தங்கள் தோட்டங்களில் தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைத்தனர். மேலும் பல தோட்டங்கள் ரப்பர் நடவை நிறுத்திக் கொண்டு அதற்கு மாற்றாகச் செம்பனை மரங்களை நடவு செய்தன. ரப்பர் மரம் வெட்டும் தொழிலை மட்டுமே பழகியிருந்த இந்திய தொழிலாளிகளால் செம்பனை தோட்டத்தில் வேலை செய்ய முடியவில்லை. செம்பனை தோட்டங்களில் வேலை செய்ய இந்தோனேசிய தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர்.

துண்டாடலுக்கு உள்ளான தோட்டங்களில் ஒன்றின் பொதுக்கிணறு

ஆகவே, ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்தனர். பலர் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். தோட்டங்களில் செயல்பட்ட மருத்துவமனைகள், மழலையர் காப்பகங்கள், பள்ளிகள் போன்ற சமூக வசதிகள் கைவிடப்பட்டன. தோட்டத் தொழிலாளர்கள் தேசியத் தோட்டத் தொழிற் சங்கத்தின் உறுப்பினர் பதவியையும் இழந்து தவித்தனர்.

மலாயா தோட்ட முதலாளிமார்கள் சங்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன் படிக்கைகளில் கூறப்பட்டுள்ள அவர்களது ஊதிய உயர்வு, பணி நிபந்தனைகள் தோட்டத் துண்டாடல் நடைமுறைக்கு உகந்தவையாக அமையாத காரணத்தால், தோட்டத் தொழிலாளர்களுக்கு அச்சலுகைகள் வழங்கப்படவில்லை. இது அவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியது. தோட்டத் துண்டாடல் கிராமப்புறங்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்திருந்தது. பன்னை விவசாய நிலங்கள் நகர்ப்புற மக்களின் உடைமைகளாக மாறுவதை அதிகரிக்கச் செய்தது.

அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் இந்தியர்கள்

தோட்டங்களைவிட்டு வெளியேறியவர்கள் புறம்போக்கு நிலங்களிலும் குடிசை வீடுகளிலும் வாழ்ந்தனர். பலர் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்து பிழைத்தனர். சொந்த வீடுகள் இல்லாமல் நகரத்தில் மோசமான நிலையில் வாழ்ந்தனர். இளைஞர்களும் பெண்களும் நகரங்களில் புதிதாக தோன்றிய தொழிற்பேட்டைகளில் வேலை செய்யத் தொடங்கினர்.

தோட்டங்களைவிட்டு வெளியேறாதவர்கள் தோட்டத்தின் புதிய உரிமையாளர்களிடம் சிறு சிறு பிரிவினராகப் பல முதலாளிகளிடம் வேலை செய்தனர். தரங்குறைந்த வீடுகளில், மோசமான சூழ்நிலையில் இவர்கள் வாழ்ந்தனர். 1980-களில் இவ்வாறு துண்டாடலுக்கு உள்ளாகிய தோட்டங்கள் சிறு கிராமங்களாக எந்தவொரு அடிப்படை வசதியும் முன்னேற்றமுமின்றி உருபெற்றன. தெருவிளக்கு, தார்ச் சாலை, கழிப்பிட வசதிகள், பொழுதுபோக்கு மையம் என எந்த வசதிகளும் இல்லாத கம்பமாகவே இவ்விடங்கள் செயல்பட்டன. தோட்டத் தொழிலாளர்களில் சிலர் நில உரிமங்கள் இல்லாத இவ்வீடுகளை அதிக விலைகொடுத்து வாங்கிக் கொண்டனர். நிலச் சொந்தக்காரர்களுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டனர்.

இலக்கியப் பதிவுகள்

உசாத்துணை


✅Finalised Page