under review

ஆள்வினை வேள்வி

From Tamil Wiki

ஆள்வினை வேள்வி பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசனது இல்லறச் சிறப்பை, குறிப்பாக அரசனது விருந்தோம்பல் பண்பைக் காட்டுகிறது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல்தான் மேற்கொண்ட வினையை முடித்த அரசனது இல்லறக் கடமையைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது. ஆள்வினை விருந்தோம்பல் முதலான செயல்கள் என்று பொருள்படும்.

வினை முற்றிய கனைகழலோன்
மனைவேள்வி மலிவு உரைத்தன்று (கொளு.27)

வெண்பா

நின்ற புகழொடு நீடுவாழ்க இவ்வுலகில்
ஒன்ற உயிர் களிப்ப ஓம்பலால் - வென்றமருள்
வாள்வினை நீக்கி வருக விருந்து என்னும்
ஆள்வினை வேள்வி அவன் (215)

பொருள் : வாட்போரினை முடித்த அரசன் தன் இல்லத்திற்கு விருந்தினராக வருபவர் வரலாம் என்று சொல்வதன்மூலம் எல்லா உயிரும் மகிழும்படி பாதுகாத்தலால் அவன் புகழ் நீண்ட காலம் வாழும்.

உசாத்துணை

பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2025, 11:45:06 IST