under review

அழகனார்

From Tamil Wiki

அழகனார் (பிறப்பு: ஜூன் 30, 1937) சிறார் எழுத்தாளர், கவிஞர், இதழாளர்.

பிறப்பு, கல்வி

அழகனார், ஜூன் 30, 1937 அன்று, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாச்சம்பாளையம் என்ற ஊரில், பழனியப்பன் - முருகாத்தாள் இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக்கல்வியை திண்ணைப் பள்ளியில் படித்தார். தொடர்ந்து மாச்சம்பாளையம், இடையர்பாளையம், கோவை நகர நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் கற்றார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். மலையாள மொழி கற்றார்.

தனி வாழ்க்கை

அழகனார், பணி நிமித்தம் கோவையிலிருந்து கேரளாவில் கள்ளிக்கோட்டைக்குக் குடிபெயர்ந்தார். மணமானவர். மனைவி, கமலம். இவர்களுக்கு மூன்று மகன்கள்.

அழகனார் நூல்

இலக்கிய வாழ்க்கை

அழகனாரின் முதல் படைப்பு, 1952-ல், 'டமாரம்' இதழில் வெளியானது. தொடர்ந்து 'கோகுலம்', 'ரத்னபாலா', 'பூந்தளிர்', தினமணி - சிறுவர் மணி உள்ளிட்ட பல்வேறு சிறார் இதழ்களில் பாடல்கள், சிறுகதைகளை எழுதினார். 'அன்பெழில்' என்ற புனைபெயரில் பல படைப்புகளை எழுதினார்.

1962-ல் 'கொக்கரக்கோ' என்ற குழந்தைப் பாடல் நூலினை எழுதினார். 1972-ல் 'சட்டமும் காசும்' என்ற சிறுவர் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். தொடர்ந்து சிறார் பாடல் மற்றும் சிறுகதை நூல்களை எழுதினார். 'நாலடியார்' மலையாள மொழியில் வெளிவரத் துணை நின்றவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

அழகனார், 1960 தொடங்கி வெளிவந்த சிறார் இதழ்களின் சேகரிப்பாளர். அவற்றைக் கொண்டு பல கண்காட்சிகளை நடத்தினார்.

இதழியல்

அழகனார், 'கண்ணன்' இதழின் கோவை நகர நிருபராக பணியாற்றினார். கேரளாவின் கள்ளிக்கோட்டையிலிருந்து வெளியாகும் 'கள்ளிக்கோட்டை தமிழ் மலர்' இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். கேரளத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை வெளியிடும் 'சேரத்தமிழ்' இதழின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

மதிப்பீடு

அழகனார், தமிழின் மூத்த சிறார் எழுத்தாளர்களுள் ஒருவராகவும், குழந்தைக் கவிஞர் பரம்பரையைச் சேர்ந்த படைப்பாளியாகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

சிறார் பாடல்கள்
  • கொக்கரக்கோ
  • குருவிக் கூடு
சிறுகதைத் தொகுப்பு
  • சட்டமும் காசும்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2025, 11:44:33 IST