under review

தெய்வீகன்

From Tamil Wiki
(Redirected from User:Theivigan)
தெய்வீகன்

தெய்வீகன் (மார்ச் 18, 1980) புலம்பெயர் ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள், அரசியல் பத்திகள், புதினங்கள் என்று கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் பயணித்து வருபவர்.

பிறப்பு / கல்வி

தெய்வீகன் இலங்கை வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் என்னும் நகரில் பஞ்சலிங்கம் - சியாமளா இணையருக்கு மார்ச் 18-ம் திகதி 1980-ல் பிறந்தார். தெய்வீகன் பள்ளிப்படிப்பை நவாலி விவேகானந்தா வித்தியாசாலையிலும் மேற்படிப்பை யாழ் இந்துக்கல்லூரியில் முடித்தார். பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர் ல ட்ரோப் பல்கலைக் கழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். தற்போது, மெல்பேர்னில் தரவு விஞ்ஞானத்துறையில் பணிபுரிந்துவருபவர்.

இதழியல்

1999-ம் ஆண்டு யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையில் மாணவ பத்திரிகையாளராக இணைந்து, அங்கு 2001-ம் ஆண்டு வரைக்கும் ஆசிரியர்பீட நிருபராகப் பணியாற்றினார். பின்னர்,, தலைநகர் கொழும்பில் வெளியாகிய 'சுடரொளி" பத்திரிகையில் 2001-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டுவரைக்கும் உதவி செய்தி ஆசிரியராகப் பணியாற்றினார். 2003 முதல் 2004-ம் ஆண்டு வரைக்கும் இலங்கையின் தேசிய பத்திரிகையான 'வீரகேசரி" வார வெளியீட்டின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், 'ஈழமுரசு" மற்றும் 'எதிரொலி" பத்திரிகைகளிற்குப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

கட்டுரைகள், பத்திகள்

இலங்கையிலிருந்து வெளியாகும் 'தமிழ் மிரர்" பத்திரிகையில், 2016-ம் ஆண்டு காலப்பகுதியில் தெய்வீகன் தொடர்ச்சியாக எழுதி வந்த அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு, 2017-ல் 'காலியாகப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி" - என்ற பெயரில் கிளிநொச்சி 'மகிழ்" பதிப்பகத்தினால் வெளியாகியிருந்தது. இதுவே தெய்வீகனது முதல் நூல்.

அதன்பின்னர், இவர் எழுதிய 'பெய்யெனப் பெய்யும் வெயில்" - என்ற செய்திகளின் தொகுப்பு 2018-ல் 'மகிழ்" பதிப்பகத்தினால் வெளியானது.தாமரைக்குள ஞாபகங்கள்" என்ற கட்டுரைகளின் தொகுப்பு 2020-ல் 'தமிழினி" பதிப்பகத்தினால் சென்னையில் வெளியிடப்பட்டது. புலம்பெயர்ந்த மண்ணின் அன்றாட வாழ்வியலையும் பண்பாட்டு - கலாச்சார மோதல்களையும் இயல்பான அங்கதத்துடன் எழுதிய இவரது பத்திகளே "தாமரைக்குள ஞாபகங்கள்" 2021 டிசம்பர் முதல் 25 வாரங்கள் இவரது 'நாடற்றவர்களின் கடவுச் சீட்டு' என்ற தொடர் வெளிவந்தது.

சிறுகதைகள்

2016-ல் 'விகடன் தடம்" இதழில் வெளியான 'அடுத்தகட்டப் போராட்டம்" - என்ற சிறுகதையின் மூலம் புனைவிலக்கியத்தில் பலரது கவனத்தை ஈர்த்த தெய்வீகன், தொடர்ச்சியாக தீவிர இலக்கியத்தின் பக்கம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். விகடனில் வெளியான "அமீலா" 'சயனைட்" போன்ற கதைகளின் மூலம் ஈழ இலக்கியத்தின் பிறிதொரு பக்கத்தினை முன்வைத்தார்.

இவரது 'அமீலா" - என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பு 2020-ல் 'தமிழினி" பதிப்பகத்தினால் சென்னையில் வெளியிடப்பட்டது. 'ஈழத்தின் வாழ்வனுபவங்களை மட்டுமல்லாது ஆஸ்திரேலிய புலம்பெயர் நிலமும் வாழ்வும் தெய்வீகனது சிறுதைகளில் நுழைந்திருந்தது. கொரோனா பெருந்தொற்றுக்காலத்தின்போது, இவர் எழுதிய "அவனை எனக்குத் தெரியாது" என்ற சிறுகதை, உலகளாவிய ரீதியில் தமிழ் சூழலில் பலரது கவனத்தைப் பெற்றது. தமிழில் கடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்ட முக்கிய கதைகளில் ஒன்று எனப் பரிந்துரைக்கப்பட்டது. 2022-ல் தெய்வீகனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியான 'உன் கடவுளிடம் போ" தமிழினி பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.

அமைப்புப் பணிகள்

தெய்வீகன், ஆஸ்திரேலிய தமிழ் கலை இலக்கிய சங்கத்துடன் (ATLAS) இணைந்து செயற்படுவர்.

இலக்கிய இடம்

அ. முத்துலிங்கம் 'சுருக்கமாக, வாழ்வின் அற்புதங்களையும், அபத்தங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது தெய்வீகனது 'உன் கடவுளிடம் போ' தொகுப்பு - என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘புலம்பெயர் எழுத்தாளர்களிடம் மட்டுமல்லாமல், இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களிடமும் வெளிப்படும் பண்பாட்டுச் சிக்கலும் பதற்றமும். தனிநபராக கீழ்த்திசை மனிதர்கள் மேற்கத்திய மனநிலைக்குள் நுழையமுடியாமல் தவிப்பது நீண்ட காலச் சிக்கல். அச்சிக்கலை ப.தெய்வீகன் சரியாகக் கதையாக்கியிருக்கிறார்’ என்று விமர்சகர் பேரா.அ.ராமசாமி குறிப்பிடுகிறார்.

நூல்கள்

கட்டுரைகள்
  • காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி (2017)
  • தாமரைக்குள ஞாபகங்கள் (2020)
  • பெய்யெனப் பெய்யும் வெயில் (2018)
சிறுகதைகள்
  • அமீலா (2020)
  • உன் கடவுளிடம் போ (2022)

உசாத்துணை


✅Finalised Page