Tamil Wiki:சரிபார்ப்பதன் அடிப்படைகள்

From Tamil Wiki

நோக்கம் – அடிப்படைத் தமிழ் வாசிக்கத் தெரிந்த ஒருவர் எவ்வித சிரமுமின்றி வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரைகளை பதிவிடுதல்

மூன்று விதங்களில் சரிபார்த்தல்

1.  மொழி அடிப்படையில்

1.1.  மொழி சரளமான பொதுச் சொற்களால் அமைய வேண்டும்.

1.2.  எழுத்துப் பிழைகள், பொருந்தாத சொற்சேர்க்கைகள் இருக்கக் கூடாது

1.3.  பால் விகுதி, ஒருமை-பன்மை விகுதி கவனிக்கப்பட வேண்டும்

1.4.  சுருக்கமான வாக்கியங்களில் சொல்லப்பட வேண்டும்

1.5.  நீண்ட, கூட்டு வாக்கியங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனி வாக்கியங்களாக அமைக்கப்பட வேண்டும்

1.6.  காற்புள்ளி, ஒற்றெழுத்து, நிறுத்தற்குறிகள் தகுந்த இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்

1.7.  கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகையில் பொதுவான பயன்பாட்டில் உள்ள கலைச்சொற்களுக்கே முன்னுரிமை

1.8.  கூறியது கூறல் (வெவ்வேறு வரிகளில் ஒரே விஷயத்தைப் பேசுவது ) தவிர்க்கப்பட வேண்டும்

1.9.  உணர்வு நவிற்சி வார்த்தைகள், தேய்வழக்குச் சொற்கள் (ரத்தமும்,சதையுமாக, வேரோடும் வேரடி மண்ணோடும், ... என்று மிக்க அன்புடன் அழைக்கப்பட்டார், சீரும் சிறப்புமாக, இரவு பகல் பாராது, கண்ணை இமை காப்பது போல... ) தவிர்க்கப்பட வேண்டும். நேரடியான சொற்களில் நிகழ்வுகள் சொல்லப்பட வேண்டும்; (xx.xx.xxxx அன்று ஜாஜா இறந்தார்/மறைந்தார் என்று இருக்க வேண்டும் - xx.xx.xxxx அன்று ஜாஜா நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தி விட்டு  மண்ணுலகை விட்டு விண்ணுலகை ... போன்ற வரிகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்)

2.  தரவுகளின் அடிப்படையில்

2.1.  எண்களால் ஆன தகவல்கள் (தேதி, வயது, எண்ணிக்கை) ஆகியன ஆதாரத்துடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்

2.2.  இடங்கள் குறித்து வரும் தகவல்களும் சரிபார்க்கப்பட வேண்டும் (அன்றைய காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகள் இன்றைய செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகள்)

2.3.  பெயர்சொற்களைப் பொறுத்தவரை தன் பெயரை ஒரு ஆளுமை எவ்வாறு சொல்கிறாரோ அவ்வாறே எழுத வேண்டும்; அக்குறிப்பு கிடைக்காவிட்டால் பொதுவாக அறியப்படும் பெயரை எழுத வேண்டும்; பிற அன்புப்பெயர்களை, பட்டங்களை தகவல் குறிப்பாக வேண்டுமானால் சொல்லலாம்.(உ-ம் , ஈ வெ ராமசாமி அவரது ஆதரவாளர்களால் பெரியார் எனக் குறிப்பிடப்படுகிறார்)

2.4.  ஆளுமைகள். ஆளுமைகளின் மனைவி/கணவர், வாரிசுதாரர்கள் ஆகியோரின் தொடர்பு எண், மின்னஞ்சல், முகவரி  ஆகியவை கட்டுரையில் இடம் பெறக் கூடாது. ஆளுமை அவரே இணையத்தளம் ஒன்றை நடத்தி வந்தாலோ, அவர் பெயரில் பொதுவாக ஒரு இணையத்தளம் இருந்தாலோ அவை குறிப்பிடப்படலாம்.

2.5.  ஒரு புத்தகம் பற்றிய பதிவில் அதனை வெளியிட்ட பதிப்பகத்தின் விவரங்கள் இடம் பெறலாம். விலை குறித்து விவரங்கள் இடம் பெற வேண்டியதில்லை.

2.6.  படங்களைப் பொறுத்தவரை தனித் தளத்தில் இருந்து எடுக்கப்படும் படங்களை அனுமதியுடன் வெளியிடுவது நலம். ஆளுமைகளின் செயல்பாட்டில் நேரடியாகப் பங்கேற்காத குடும்ப உறுப்பினர்களின் படங்களை, குடும்பப் படங்களை வெளியிட வேண்டியதில்லை.

3.  மேம்படுத்துதல் அடிப்படையில்

3.1.  ஒரு பதிவில் மேலும் சில தகவல்கள் தேவைப்படும் என நினைத்தால் அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு “உள்ளடக்க அணியினருக்கு அல்லது பிழை திருத்தும் அணியினருக்கு ” அனுப்ப வேண்டும்; நாமே இணைத்தாலும் அவர்களுக்குத் தெரியப்படுத்த  வேண்டும்; அடுத்த பதிவுகளை அவர்கள் சிறப்பாகச் செய்ய இது உதவும்

3.2.  தேவைப்படும் தகவல்கள் என நாம் நினைப்பவற்றை நம்மால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதனைக் குறிப்பிட்டு “உள்ளடக்க அணிக்கு” அனுப்பி விட வேண்டும்; அவர்கள் பெரிய அணியினர் என்பதாலும், எண்ணிக்கை அதிகம் என்பதாலும் முயற்சி செய்து கண்டுபிடித்து சேர்க்கலாம்;

3.3.  உடனடியாகச் சேர்க்க முடியாவிட்டாலும் ஒரு கட்டுரைக்கு “இன்னும் சேகரிக்கப்பட வேண்டியவை” எனும் பட்டியல் இருப்பது வருங்காலத்தில் தேடுதல்கள் இன்னும் எளிதாகும்போது கட்டுரையை முழுமையாக்க உதவும்.  

3.4.  ஒரு கட்டுரையை சரிபார்க்கும்போதே அதிலிருந்து அடுத்து எழுதப்பட வேண்டிய கட்டுரைகள், தலைப்புகள், ஆளுமைகள்  ஆகியவற்றையும் குறித்த ஆலோசனைப் பட்டியலையும் உள்ளடக்க அணிக்கு அளிக்கலாம்; துணைத் தலைப்புகள், இணைத் தலைப்புகள், பிரிவுகள், வகைப்பாடுகள் ஆகியவற்றை தொடர்ந்து ஆலோசனைகளாக முன்வைக்க வேண்டும்.

 

எந்த நிலையிலும் இப்பணி ஒரு கூட்டுப்பணியே என்பதையும், நமது மொழி,கலை,இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் மீதான நமது பொறுப்பே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.