64 சிவவடிவங்கள்: 5-மகா சதாசிவ மூர்த்தி
- சதாசிவம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சதாசிவம் (பெயர் பட்டியல்)
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று மகா சதாசிவ மூர்த்தி
மகா சதாசிவ மூர்த்தி – விளக்கம்
64 சிவ வடிவங்களில் ஐந்தாவது மூர்த்தம் மகா சதாசிவ மூர்த்தி. 64 சிவ மூர்த்தங்களையும் தன்னுள் அடக்கியவராக மகா சதாசிவ மூர்த்தி காணப்படுகிறார். கயிலாயத்தில் காட்சி தரும் இவர், இருபத்தி ஐந்து தலைகள், ஐம்பது கைகள் 75 கண்களுடன் இருப்பவர். மகா கயிலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலிப்பதால் இவர் அனுக்கிரக மூர்த்தியாக அறியப்படுகிறார்.
மகா சதாசிவ மூர்த்தி, இன்ன உருவம் உடையவர் எனக் குறிப்பிட்டுக் கூற முடியாதபடி அனைத்தும் கலந்த திருமேனியுடையவராகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவரைச் சுற்றி இருபத்தி ஐந்து மூர்த்திகள் இருப்பர். ருத்ரர்களும் சித்தர்களும் முனிவர்களும் எப்போதும் வணங்கக் கூடியவராக இருக்கும் மூர்த்தி மகா சதாசிவ மூர்த்தி
வழிபாடும் பலன்களும்
மகா சதாசிவ மூர்த்தியின் வடிவம் சிவபெருமானின் மற்ற வடிவங்களைப் போலக் கோவில்களில் சிலை வடிவாக இருப்பதில்லை. இவை கோவில் கோபுரங்களில் சுதை வடிவில் காணப்படுகின்றன. திருவண்ணாமலையில் உள்ள அம்மணி அம்மாள் கோபுரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் ஆலயம், வைத்தீஸ்வரன் கோவில், காஞ்சிபுரம் கரகரேஸ்வர் ஆலயங்களின் கோபுரங்களில் இவர் சிற்ப மற்றும் சுதைச் சிற்ப வடிவில் காட்சி தருகிறார்.
இவரை வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Aug-2024, 19:45:12 IST