64 சிவவடிவங்கள்: 33-யோக தட்சிணாமூர்த்தி
- தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தட்சிணாமூர்த்தி (பெயர் பட்டியல்)
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று யோக தட்சிணாமூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் முப்பத்தி மூன்றாவது மூர்த்தம் யோக தட்சிணாமூர்த்தி. சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த திருக்கோலமே யோக தட்சிணாமூர்த்தி. நான்கு கரங்களுடன் யோக நிலையில் அமர்ந்திருக்கிறார்.
தொன்மம்
பிரம்மாவுக்கு சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் என நான்கு மகன்கள். அவர்கள், வேதத்தை முழுமையாகக் கற்றிருந்தனர். இருந்தாலும் அவர்களது மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதனைச் சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டினர். சிவனும் சனகாதி முனிவர்களுக்கு பசு, பதி, பாசம் இவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்.
அவர்கள் மேலும் சிவபெருமானிடம், “இறைவா! மனம் ஒடுங்கும் யோக மார்க்கங்களை எங்களுக்கு உரைக்கவும்” என்று விண்ணப்பித்தனர்.
சிவபெருமான் பின்வருமாறு யோக மார்க்கங்களை விளக்கிக் கூறலானார். “யோகம் என்பது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் கலப்பது. அது எப்படியெனில் வெளிக்கரணத்தை அந்தக்கரணத்தில் அடக்கி, மனதை ஆன்மாவில் அடக்கி, தூய்மையான ஆன்மாவைப் பரத்தில் சேர்த்தலாகும். அத்துடன் யோகப்பயிற்சி இருந்தால் மட்டுமே பரம்பொருளை தரிசிக்க முடியும்.
பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனும் தசவாயுக்களை அடக்குவது யோகமாகாது. யோகத்தை எட்டாகப் பிரிக்கலாம். அவை இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. இவற்றில் இயமம் என்பது கொல்லாமை, பிறர்பொருளுக்கு ஆசைப்படாமை. நியமம் என்பது தவநிலை. ஆதனம் என்பது சுவந்திகம், கோமுகம், பதுமம், வீரம், பத்திரம், முத்தம், மயூரம், சுகம் என எட்டாகும், பிராணாயாமம், மூச்சுப்பயிற்சி. பிரத்தியாகாரம் நம்மைப் பார்ப்பது. தாரணை என்பது ஏதாவது ஒரு உடலுறுப்பின் மீது சிந்தையை வைப்பது. தியானம் என்பது மனத்தை அடக்குதல். சமாதி என்பது மேற்சொன்னவற்றுடன் பொருத்தி ஆதார நிலையங்கள் ஆறுடன், நான்கு சக்கரங்களை வியாபித்து அனைத்துமாகிய, சகலமான பரம்பொருளைத் தியானித்தல். அதுவே சிவயோகம் என்றழைக்கப்படும் சமாதி நிலை.” - இவ்வாறு யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு உரைத்ததுடன் தாமே சிறிது நேரம் அந்நிலையில் இருந்து காட்டினார்.
இதனால் முனிவர்களின் மனம் ஒடுங்கியது. பின் சனகாதி முனிவர்கள் சிவபெருமானை வணங்கி விடைபெற்றனர்.
சிவபெருமான், சனகாதி முனிவர்களுக்குப் புரியும்படி யோக முறையைக் கற்பித்து, அத்தகைய யோக நிலையில் இருந்து காட்டிய கோலமே யோக தட்சிணாமூர்த்தி.
வழிபாடு
மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது குறுக்கை. இங்கு யோக தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளது. இவர் கிரகங்களுக்கெல்லாம் அதிபதியாகக் கருதப்படுகிறார். யோக நிலையில் காணப்படுவதால் சக்திவாய்ந்த தெய்வமாகக் கருதப்படுகிறார். வியாழன்தோறும் விரதமிருந்து இவரை வணங்கப்பிறவித் துன்பம் தீரும் என்றும், வெண்தாமரை அர்ச்சனையும், கொண்டைக்கடலை மற்றும் தயிரன்ன நைவேத்தியமும் வியாழன் தோறும் அளித்து வழிபட, சிறப்பான வாழ்க்கை அமையும் என்றும், இங்குள்ள மூர்த்திக்கு பச்சைக்கற்பூர நீரால் அபிஷேகம் செய்ய, பல்வேறு யோக சித்திகள் வாய்க்கப்பெறும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:08:57 IST