64 சிவவடிவங்கள்: 64-சிஷ்ய பாவ மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சிஷ்ய பாவ மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் அறுபத்தி நான்காவது மூர்த்தம் சிஷ்ய பாவ மூர்த்தி. சிவபெருமான் சிஷ்யராக இருக்க, முருகப் பெருமான் குருவாக இருந்து பிரணவ உபதேசம் கொடுத்ததால், சிவபெருமானுக்கு சிஷ்ய பாவ மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.
தொன்மம்
தேவர்களைத் துன்புறுத்தி வந்த சூரபத்மனை அழித்தவர் முருகபெருமான். ஒருமுறை கயிலைக்கு பிரம்மதேவர் வந்தார். அப்போது அகந்தை மேலிட முருகனை வணங்காமல் சென்றார். முருகன் பிரமனை அழைத்து அவர் யாரென்றும், அவர் செய்யும் தொழில் என்னவென்றும் கேட்டார். பிரம்மனும் நான் படைப்புத் தொழில் புரிபவன் என்றார். முருகனும் படைப்புத் தொழிலை எவ்வாறு செய்வாய் என்று கேட்டார், வேதம் ஓதிச் செய்வதாகக் கூறினார் பிரம்மா.
உடன் ’வேதம் ஓதுக’ என்றார் முருகன். பிரம்மனும் ’ஓம்’ என்று தொடங்கி வேதம் கூறத்தொடங்கினார். உடன் முருகன், பிரம்மனை நோக்கி, “இப்பொழுது நீர் கூறிய ‘ஓம்’ என்னும் பிரணவத்தின் பொருள் கூறுக” என்றார். பிரம்மா, பிரணவத்தின் பொருள் தெரியாது விழிக்க, ”பிரணவத்தின் பொருள் தெரியாத நீரெல்லாம் எவ்வாறு படைப்பை மேற்கொள்வாய்?” என்று கேட்டு பிரம்மாவைச் சிறையில் அடைத்தார்.
இதனைக் கேள்வியுற்ற சிவபெருமான், முருகனிடம் வந்து, ”குமரா நீ பிரணவத்தின் பொருளை அறிவாயா? அப்படியெனில் எனக்குக் கூறு” என்றார். உடன் முருகனும் முறைப்படிக் கேட்டால் கூறுவதாகச் சொன்னார். உடனே சிவபெருமான் சீடராக மாறிக் கேட்க, முருகன், குருவாக மாறி சிவ பரம்பொருளுக்குப் பிரணவத்தை உபதேசித்தார். தந்தைக்கே சுவாமியாக, குருவாக இருந்து பிரணவத்தின் பொருள் உரைத்ததால் முருகனுக்கு ’தகப்பன் சாமி’ என்ற பெயர் ஏற்பட்டது. சிவபெருமான் சிஷ்யராகவும், குமரன் குருவாகவும் உபதேசம் கொடுத்ததால் சிவபெருமானுக்கு ’சிஷ்ய பாவ மூர்த்தி’ என்ற பெயர் உண்டாயிற்று
அதன் பின்னர் பிரம்மா சுவாமிமலை சென்று சிவபூஜை செய்து முருகனை வழிபட்டார். பின்னர் முருகப்பெருமான் பிரணவத்தின் பொருளுரைக்க பிரம்மா அறிந்துகொண்டார்.
வழிபாடு
சுவாமிமலை கும்பகோணம் அருகே அமைந்துள்ளது. இத்தலத்தில் தான், தந்தை சிவபெருமானுக்கு மைந்தன் முருகனால் பிரணவ உபதேசம் செய்யப்படது என்பது ஐதீகம். இங்குள்ள சிவபெருமானுக்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியமும், திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் அளித்து நெய்விளக்கிட்டு வழிபட கல்வி சிறப்படையும், நீண்ட ஆயுள் உண்டாகும்., அறிவு மேன்மையடையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
உசாத்துணை
- 64 சிவ வடிவங்கள்
- தினமலர் இதழ் கட்டுரை
- தினமணி இதழ் கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Oct-2024, 10:29:19 IST