under review

64 சிவவடிவங்கள்: 63-இரத்த பிட்சா பிரதான மூர்த்தி

From Tamil Wiki
இரத்த பிட்சா பிரதான மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று இரத்த பிட்சா பிரதான மூர்த்தி

வடிவம்

64 சிவ வடிவங்களில் அறுபத்தி மூன்றாவது மூர்த்தம் இரத்த பிட்சா பிரதான மூர்த்தி. திருமால், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோரது ஆணவத்தை அழிக்க, அவர்களிடமே இரத்தத்தைப் பிட்சையாகப் பெற்றதால் சிவபெருமானுக்கு இரத்த பிட்சா பிரதான மூர்த்தி என்ற பெயர்

தொன்மம்

சிவபெருமானைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்து ’நானே பெரியவன்’ என்ற அகந்தையுடன் இருந்தார் பிரம்மா. பிரம்மாவைப் போல் யாரும் அகந்தை கொள்ளக்கூடாது என்று எண்ணிய சிவபெருமான், பைரவரின் ரூபத்தை எடுத்து பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றைத் தனது நகத்தினால் திருகி எடுத்தார். பிரம்மாவின் தலையிலுள்ள மண்டை ஓடு பைரவரது கைகளிலேயே ஒட்டிக் கொண்டது. அதன் பின்னர் தன்னால் உருவாக்கப்பட்ட அதிபலன், ஆலகாலன், கனன்முகன், காலவேகன், சோமகன் போன்ற கணத்தலைவர்களுடன் வனம் சென்றார் பைரவர். அங்கிருந்த முனிவர்கள், ரிஷிகள், தவசிகள் ஆகியோர்களிடம் இரத்தம் வேண்டினார். அவர்களது உடலைத் தன்னுடைய சூலாயுதத்தால் குத்தி, வழிந்த இரத்தத்தைக் கபாலத்தில் பிடித்தார். பின்னர் தேவலோகம் சென்று தேவர்களின் இரத்தத்தைப் பிடித்தார்.

அடுத்து வைகுந்தம் சென்றார். அங்கே தன்னையும், தன் கணத்தலைவர்களையும் தடுத்த திருமாலின் முழுமுதற்காவலனான வடுகசேனனை சூலாயுதத்தால் கொன்றார். அவனைத் தன் தோள் மீது போட்டுக் கொண்டார். பின் கணங்கள் படை சூழ பாம்பணையில் பள்ளிக் கொண்டிருந்த திருமாலின் முன் சென்றார். அவரிடம் இரத்தப் பிட்சை ஏற்க வந்ததைச் சொன்னார். திருமாலும் சந்தோஷத்துடன் தனது நகத்தினால் நெற்றியைக் கீறி ஒரு ரத்த நரம்பை உருவி அதிலிருந்து சொட்டிய இரத்தத்தைக் கபாலத்தில் விட்டார்.

இவ்வாறாக ஆயிரம் ஆண்டுகள் இரத்தம் கொடுத்தும் பைரவரின் பிட்சா பாத்திரம் நிறையவில்லை, இதனால் திருமால் பலவீனமடைந்து மயங்கினார். அதனைக் கண்ணுற்ற அவனது தேவியர் திகைத்தனர். பைரவர் அவர்களைத் தேற்றி, திருமாலை எழச்செய்தார். பின்னர் திருமாலின் வேண்டுகோளின்படி வடுகசேனனை மறுபடியும் உயிர்ப்பித்தார். இவ்வாறு முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள், திருமால் போன்றோரிடம் பைரவர், இரத்தம் பெற்றதற்குக் காரணம் அவர்களுடைய அகந்தையையும், கர்வத்தையும் அழிப்பதற்குத்தான். அகந்தை அழிந்தவுடன் கபாலமானது சிவபெருமானின் கையை விட்டு நீங்கியது. இவ்வாறு அவர்களின் அகந்தையை ஒழிக்க இரத்தத்தைப் பிட்சையாகப் பெற்றதால் சிவபெருமானுக்கு இரத்த பிட்சா பிரதான மூர்த்தி என்ற பெயர் உண்டாயிற்று.

வழிபாடு

இரத்த பிட்சா பிரதான மூர்த்தி, காசியில் விஸ்வநாதராகக் காட்சி அளிக்கிறார். இங்குள்ள விஸ்வநாதருக்கு செவ்வரளி அர்ச்சனையும், வாழைப்பழ நைவேத்தியமும், எள் தீபமும் செவ்வாய்கிழமைகளில் அளித்து வழிபட பகைவர் தொல்லை மறையும்; கங்கையில் மூழ்கி விஸ்வநாதரைத் தரிசிக்க பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Oct-2024, 10:30:41 IST