64 சிவவடிவங்கள்: 62-பிரார்த்தனா மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று பிரார்த்தனா மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் அறுபத்தியிரண்டாவது மூர்த்தம் பிரார்த்தனா மூர்த்தி. கௌரியின் பிரார்த்தனைக்கேற்ப சிவன் தாண்டவ நடனம் ஆடிக் காட்டியதால், பிரார்த்தனா மூர்த்தி என்ற பெயர் பெற்றார்.
தொன்மம்
தாருகாவனத்தில் வாழ்ந்த ரிஷிகள் சிலர், தெய்வங்களை விடத் தாங்கள் சொல்லும் மந்திரங்களும், தாங்கள் செய்யும் யாகங்களுமே உயர்ந்தவை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அதனால் சிவன் உள்ளிட்ட தெய்வங்களை மதிக்காமல் ஆணவத்துடன் செயல்பட்டனர். அவர்களது துணைவியர்களோ இறைவனை விடத் தங்களது கற்பே உயர்ந்தது என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நல்லறிவைப் புகட்ட எண்ணிய சிவபெருமான், திருமாலை மோகினி அவதாரம் எடுக்க வைத்து, தாமும் பிட்சாடனர் அவதாரம் எடுத்தார். பிட்சாடனர் நிர்வாணமாக, வலது கையில் திருவோட்டுடன் மோகினி பின்தொடர தாருகாவனத்தை அடைந்தார். அங்குள்ள ரிஷிகளின் ஆசிரமங்களுக்குச் சென்று பாடல்களைப் பாடியவாறே பிச்சை கேட்டார். பிச்சை போட வெளியே வந்த ரிஷி பத்தினிகள், பிட்சாடனரின் அழகில் மயங்கினர். அவர் மீது அளவற்ற மோகம் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களது கற்பு களங்கமுற்றது.
ரிஷிகள் யாகம் செய்யும் இடத்திற்குச் சென்ற மோகினியின் அழகில் ரிஷிகள் மயங்கினர். யாகங்களை அப்படியே நிறுத்திவிட்டு, மோகினியைப் பின் தொடர்ந்ததால் யாகம் குலைவுற்றது. மோகினியைப் பின் தொடர்ந்த ரிஷிகள் பிட்சாடனரை வந்தடைந்ததும், அங்கே தங்களின் மனைவியர்கள் அனைவரும் அவரது பின்னால் வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதற்கெல்லாம் காரணமான சிவபெருமானை அழிக்க எண்ணிய முனிவர்கள் அபிசார யாகம் இயற்றி, அதிலிருந்து வெளிவந்த பொருள்களைச் சிவபெருமானைக் கொல்ல ஏவினர். ஆனால் சிவபெருமான் அவற்றையெல்லாம் ஆடையாகவும், ஆபரணமாகவும் அணிந்து கொண்டார். முயலகன் என்ற அசுரனும் சிவபெருமானை நோக்கி வர அவனது முதுகில் ஏறி நடனமாடினார். இறுதியில் முனிவர்களை மன்னித்து அவர்களுக்கு ஞானமளித்தார்.
சிவபெருமான் தன்னை விடுத்து திருமாலை மோகினியாக்கிச் சென்றாரென்ற செய்தியைக் கேட்டதும் உமாதேவியார் வருந்தினார். ஒரு திருவிளையாடலை நடத்த எண்ணி சிவனுடன் ஊடல் கொண்டார். சிவபெருமான் சக்தியின் ஊடலுக்கான காரணத்தை அறிந்ததும், அதனைப் போக்க நினைத்தார். சக்தியிடம் சென்று, “தேவி, எனது ஒரு சக்தியான நீயே செய்கின்ற வேலைகளைப் பொறுத்து நான்காகப் பிரிகிறாய். அதாவது நீயாகவும், திருமாலாகவும், காளியாகவும், துர்க்கையாகவும் பிரிகிறாய். என் மனைவியாகக் கையில் நீயும், ஆணுருவம் கொள்கையில் திருமாலாகவும், யுத்தக் களத்தில் துர்க்கையாகவும், கோபத்தில் காளியாகவும் உருமாறுகிறாய். எனவே திருமால், காளி, துர்க்கை இவர்கள் அனைவரும் நீயே என்பதை உணர்க” என்றார். உடன் உமாதேவியார் கோபம் மறைந்து தன் பிழை பொறுக்க வேண்டினார்.
பின் சிவபெருமானிடம், “இறைவா, தாருகாவனத்தில் நீர் ஆடிய அத்திருநடனத்தை நான் காண வேண்டும். எனக்கு ஆடிக்காட்டருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார். உடன் சிவபெருமானும் அந்நடனத்தை ஆடிக் காட்டினார். கௌரியின் பிரார்த்தனைக்கேற்ப சிவன் ஆடிய நடனமே ’கௌரி தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது. சிவனும் பிரார்த்தனா மூர்த்தி என்ற பெயர் பெற்றார்.
வழிபாடு
பிரார்த்தனா மூர்த்திக்குரிய தலமாக ருத்ரகங்கை குறிப்பிடப்படுகிறது. இவருக்கு வெண்தாமரை அர்ச்சனையும், நைவேத்தியமாக சர்க்கரை பொங்கலும் புதன் அன்று அளித்து, நெய் தீபமிட்டு வழிபட்டால் திருமணத்தடை விலகி திருமணம் கைகூடி வரும், செல்வம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Oct-2024, 10:31:20 IST