under review

64 சிவவடிவங்கள்: 6-உமாமகேஸ்வர மூர்த்தி

From Tamil Wiki
உமா மகேஸ்வர மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று உமாமகேஸ்வர மூர்த்தி

உமாமகேஸ்வர மூர்த்தி – விளக்கம்

64 சிவ வடிவங்களில் ஆறாவது மூர்த்தம் உமாமகேஸ்வர மூர்த்தி. இவர் திருக்கயிலையில் பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் உமையுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமான் சகல உயிர்களுக்கும் தந்தை. பராசக்தி அனைத்து உயிர்களுக்கும் தாய். இருவரும் இணைந்து இவ்வுலகை நடத்துகின்றனர்.

உமையம்மை, சிவத்திடம் ஐக்கியமானவர். இறைவனாகிய சிவபெருமானின் எண்ணப்படியே அனைத்துச் செயல்களையும் நடத்துகிறார்.

சக்தி அம்சங்கள்

கருணையே வடிவான மகாசக்தி, ஐவகைச் செயல்களுக்காக ஐவகைப் பிரிவில் செயல்படுகிறார். அவை,

  • பராசக்தி - இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
  • ஆதிசக்தி - பராசக்தியில் 1001 கூறு கொண்டது.
  • இச்சா சக்தி - ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டது.
  • ஞானசக்தி - இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டது.
  • கிரியா சக்தி - ஞானசக்தியில் 1001 கூறு கொண்டது.

பராசக்தி, பக்குவமடைந்த ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறார். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொடுக்கிறார். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி சிருஷ்டித் தொழில் செய்து சிருஷ்டிப்பவர். கிரியா சக்தி உலகப் படைப்பை மேற்கொள்பவர். இந்த ஐந்து சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படும் போது எல்லாம் ஒன்றாகி சதாசிவமூர்த்தத்துள் அடங்கி விடுகிறது.

வழிபாடும் பலன்களும்

கும்பகோணம் அருகேயுள்ள கோனேரிராஜபுரத்தில் உமாமகேஸ்வர்ர் ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன்: உமாமகேஸ்வரர். இறைவி: தேகசௌந்தரி. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவர்களுக்கு இளநீர், பால், தேன் அபிஷேகம் செய்ய கடுமையான குஷ்ட நோயும் தீரும். இத்தல இறைவனின் மற்றொரு திருநாமம் பூமிநாதர். எந்த ஒரு தொழில் செய்யும் முன்பும் இந்த பூமிநாதரை வணங்கி, இங்கிருந்து ஒரு பிடி மண் கொண்டு வந்து தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் தொழில் சிறப்படையும் என்பது தொன்மம்.

புதன் தோறும் சிவப்பு அல்லிப்பூவால் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும் செய்து வழிபட்டால் குடும்ப வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அகலும். இங்குள்ள மண்ணால் விநாயகர் செய்து வீட்டில் வைத்து வழிபட காரியத்தடையும் அகலும் என்பது மக்கள் நம்பிக்கை.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 21:02:33 IST