64 சிவவடிவங்கள்: 59-கூர்ம சம்ஹார மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கூர்ம சம்ஹார மூர்த்தி
வடிவம்
64 சிவ வடிவங்களில் ஐம்பத்தி ஒன்பதாவது மூர்த்தம் கூர்ம சம்ஹார மூர்த்தி. திருமாலின் அவதாரமாகிய ஆமையை அழித்ததால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. (கூர்மம் = ஆமை)
தொன்மம்
தேவர்கள் அசுரர்களை விட வலிமை குறைந்தவர்கள். அவர்களுக்குத் தங்களது வலிமையை அதிகரித்துக் கொள்ள அமிர்தம் தேவைப்பட்டது. அமிர்தத்தைப் பெற அசுரர்களுடன் இணைந்து பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்து இருவரும் பிரித்துக் கொள்ள முடிவு செய்தனர். திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும், வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பைக் கயிறாகவும் கொண்டு, ஒரு பக்கம் அசுரர்களும் இன்னொரு பக்கம் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திரமலையின் அடிப்பாகத்தைத் தாங்கினார்.
அமிர்தம் வந்தது. அதனைத் தொடர்ந்து பல அரிய பொருட்களும் வந்தன. அமிர்தத்தை அசுரர்கள் உண்டால் உலகிற்கு மென்மேலும் தீமைகள் பெருகும் என்று எண்ணிய திருமால், தேவர்கள் மட்டுமே அமிர்தத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மோகினியாக மாறினார். அசுரர்களை ஏமாற்றி அமிர்தத்தை தேவர்களுக்குக் கொடுக்க முற்பட்டார். இச்செய்தி அறிந்த அசுரர்கள் இருவர் தேவர்போல் வேடமிட்டு அமிர்தத்தை உண்டனர். இவ்விஷயத்தை சூரிய, சந்திரர்கள் திருமாலிடம் கூறினர். இதனால் சினமுற்ற திருமால் கையில் இருந்த அகப்பையால் அமிர்தம் உண்ட அசுரர்களது தலையை வெட்டி இரு கூறாக்கினார். அவர்கள் அமிர்தம் உண்ட பலனால் இறக்காமல் சிவபூஜை செய்து ராகு, கேது எனும் கிரகங்களாக மாறினர்.
மந்திர மலையைத் தாங்கியபடி நின்ற திருமாலாகிய ஆமை, ஏழு கடல்களையும் ஒன்றிணைத்தது. அதன் வெள்ளம் உலகத்தை உலுக்கியது. பின் கடல் உயிரினங்கள் அனைத்தையும் தின்றது. பசி நீங்காததால் கடல் நீரையும் குடித்துச் சேற்றையும் உண்டது. இதனால் சந்திர, சூரியர் கடலில் சென்று மறைய பயந்து வேறொங்கோ ஒளிந்துக்கொண்டனர், இருளின் பிடியில் உலகம் அமிழ்ந்தது,
உலக மாந்தர்களும் தேவர்களும் சிவபெருமானை அடைந்து அபயம் வேண்டினர். சிவபெருமான் தன்னுடைய சூலாயுதத்தினால் ஆமையின் உடலைக்குத்தி அதன் ஓட்டை ஆபரணமாக்கி, தன் மார்பில் இருந்த பிரம்மாவின் தலைமாலையின் நடுவே அணிந்துகொண்டார். திருமால் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினார். திருமாலின் ஓர் அவதாரமாகிய ஆமையின் உருவத்தை அழித்ததால் சிவபெருமானுக்கு கூர்ம சம்ஹார மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.
வழிபாடு
சென்னையிலுள்ள பாரிமுனைக்கருகே அமைந்துள்ள கச்சாளீஸ்வரர் ஆலயத்தில் கூர்ம சம்ஹார மூர்த்தியின் ஓவியம் காணப்படுகிறது. இவருக்கு வில்வார்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமும், திங்களன்று அளித்து வழிபட நீர்க் கண்டம் மறையும், பயம் விலகும், தம்பதியர் ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Oct-2024, 10:34:21 IST