64 சிவவடிவங்கள்: 54-சக்கர தான மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சக்கர தான மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் ஐம்பத்தி நான்காவது மூர்த்தம் சக்கர தான மூர்த்தி. சிவபெருமான், சுதர்சனச் சக்கரத்தைத் திருமாலின் சிவபக்திக்காகக் கொடுத்ததால் சிவனுக்கு ’சக்கர தான மூர்த்தி’ என்ற பெயர் ஏற்பட்டது.
தொன்மம்
ஒரு சமயம் பிரளயத்தால் உலகம் முழுதும் அழிந்தது. சிவபெருமான் மீண்டும் ஒரு புதிய உலகைப் படைக்க பிரம்மாவையும் திருமாலையும் உண்டாக்கினார். அவர்கள் இருவரிடமும் படைத்தல் மற்றும் காத்தல் தொழிலை ஒப்படைத்தார். காத்தல் தொழில் செய்வதற்காகத் திருமால் சிவனிடம் ஆயுதம் ஒன்று வேண்டினார். சிவபெருமான் தனது முக்கண்களால், சூரிய சந்திர ஒளியைக் கொண்டு, கதை ஒன்றையும் சக்கரம் ஒன்றையும் கொடுத்தார். உடன் பார்வதி தன் பங்கிற்கு தனது முகத்தினால் ஒரு சங்கும், கண்களால் பத்மமும் உருவாக்கி அவை தாங்குவதற்கு இருகரங்களையும் அளித்தார்.
அவற்றைக் கொண்டு காத்தல் தொழிலைச் செய்துவந்தார் திருமால். இந்நிலையில் குபன் என்னும் மன்னனுக்காகத் திருமால், ததீசி முனிவரை எதிர்த்துப் போரிட்டார். கடும் யுத்தம் நடந்தது. ததீசி முனிவரை வெல்வது அவ்வளவு எளிதாக இல்லை. அதனால் திருமால், தனது சக்ராயுதத்தை ஏவினார். சக்ராயுதம் முனிவரின் வஜ்ஜிரக் கையில் பட்டு திரும்பத் திருமாலிடமே வந்து சேர்ந்தது. உடனே திருமால் தன்னைப்போல் ஓர் உருவத்தை மாயையால் உருவாக்கினார். அதனைக் கண்ட ததீசி முனிவர் தனது பாதக் கட்டை விரலை அசைத்தார். அந்த அசைவிலிருந்து பல திருமால்கள் தோன்றினர். இதனைக் கண்ட திருமால், இம்முனிவர் நம்மைவிட வலிமை வாய்ந்தவர் என்பதை உணர்ந்து, அவரிடம் போரிடுவதை விட்டுவிட்டு வணங்கி விடைபெற்றார்.
சிவபெருமான் அளித்த சக்கராயுதம் ததீசி முனிவரிடம் தோற்றதால், அதனை விட வலிமையான ஆயுதத்தைச் சிவபெருமானிடம் இருந்து பெற வேண்டும் என்று திருமால் எண்ணினார். யாராலும் அழிக்க முடியாத ஜலந்தரனை அழிக்கச் சிவபெருமான், தனது கால் கட்டை விரலால் பூமியில் ஒரு சக்கரம் வரைந்து அதனை ஆயுதமாக்கிச் சலந்தரனை அழித்தார். அது போன்ற ஓர் ஆயுதத்தை பெற வேண்டும் என்று முடிவு செய்து கடுமையான தவம் செய்தார் திருமால். தினந்தோறும் ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானைப் பூஜித்தார். ஒருநாள் ஆயிரம் தாமரைகளில் ஒன்றைச் சிவபெருமான் மறைத்தார். பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு மலர் இல்லாததைக் கண்ட திருமால், தனது கண்களில் ஒன்றைப் பிடுங்கி எடுத்து இறைவனுக்குச் சமர்ப்பித்து அன்றைய பூஜையை முடித்தார். தனது கண்ணை தாமரை மலராக எண்ணி இறைவனுக்கு அர்ச்சித்ததால் சிவபெருமான் அவரை கமலக்கண்ணன் என்றழைத்தார். திருமாலின் விருப்பப்படி சுதர்சனச் சக்கரத்தைக் கொடுத்தார். யாரையும் எதிர்த்து வெற்றி பெறும் வலிமை மிக்க சுதர்சனச் சக்கரத்தைத் திருமாலின் சிவபக்திக்காகக் கொடுத்ததால் சிவபெருமானுக்கு ’சக்கர தான மூர்த்தி’ என்ற பெயர் ஏற்பட்டது.
வழிபாடு
கும்பகோணம் அருகே உள்ள திருவீழிமிழலையில் சிவன் சக்கர தான மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். இங்குள்ள இறைவன் பெயர் விழி அழகர். இறைவி சுந்தர குஜாம்பிகை. ஆயிரம் தாமரை மலர்களால் சிவராத்திரியில் வழிபட்டால் வேண்டிய வரங்களைப் பெறலாம், செல்வமும் சேரும் என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமைகளில், மஞ்சள்நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து, பழவகை நைவேத்தியமும் அளித்து வழிபட, நீடித்த ஆயுள், கல்வியறிவு, உயர்பதவி வாய்க்கப்பெறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 17:55:56 IST