under review

64 சிவவடிவங்கள்: 51-திரிபாதத் திரிமூர்த்தி

From Tamil Wiki
திரிபாதத் திரிமூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று திரிபாதத் திரிமூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் ஐம்பத்தியோராவது மூர்த்தம் திரிபாதத்ரி மூர்த்தி. பிரம்மா, திருமால், சிவன் மூவரும் இணைந்து மூன்று கால்களை உடைய சிவபெருமானின் வடிவமே திரிபாதத் திரிமூர்த்தி.

தொன்மம்

சைவ மார்க்கத்தின்படி சிவபெருமானே மகேஸ்வரனாகி அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவர். அனைவரையும் தம்முள்ளே ஒடுக்கிக் கொள்பவரும் அவரே. அவ்வாறு ஒடுக்குவது நித்தியம்,நைமித்தியம், பிராகிருதம், ஆத்தியந்திகம் என நான்கு வகைப்படும்

நித்தியம்

நித்தியம் என்பதற்கு உயிரினங்கள் தங்கள் ஆயுளின் முடிவில் சிவனை அடைதல் என்பது பொருள்.

நைமித்யம்

நைமித்தியம் என்பதற்கு நான்முகனின் பகல் கூடிய உலக சஞ்சலத்தால் மறைதல் என்பது பொருள்.

பிராகிருதம்

பிராகிருதம் என்பது பிரமதேவனின் கால அளவு. அது தவிர உலக உயிரெல்லாம் மடிந்து ஓடுங்குவதையும் அது குறிக்கும்.

ஆத்தியந்திகம்

ஆத்தியந்திகம் என்பது உயிரினங்கள் முக்திபெறுதலைக் குறிக்கும். இதில் நித்தியம் வெளிப்படையானது. நைமித்தியம் பிரளயத்தின் இறுதியில் ஈரேழு உலகமும் சூரியக்கதிர்களை வாங்கி வெளியிடுவதால் அனைத்துமே பிரகாசமாகும். அதனால் கடல் அனைத்தும் வற்றிவிடும். இவ்வாறு நடந்த பின்பு நூறாண்டுகளில் அனைத்து திசைகளிலும் மழை பொழிந்து அனைத்துலககும் நீரால் நிரம்பும். இக்காலமே பிரமன் யோகநித்திரை செய்யும் காலம்.

இத்தகைய ஊழிக்காலத்தில் மூன்று விதமான தொழில்களைச் செய்து வந்த மும்மூர்த்திகளும் சிவபரம்பொருளில் ஒன்றாக ஒடுங்குவர் என்பது தொன்மம். உலகை மீண்டும் படைக்க விரும்பும் போது தன்னுள் ஒடுங்கி இருந்த மூவரையும், ஒற்றைக் காலில் நின்று, தனது இதயத்திலிருந்து ருத்திரனையும் தனது வலப்பாகத்தில் இருந்து பிரம்மனையும் தனது இடப்பாகத்திலிருந்து திருமாலையும் தோற்றுவிப்பார் சிவபெருமான். அப்போது அவர் எடுக்கும் கோலமே திரிபாதத் திரிமூர்த்தி.

திரிபாதத்ரி மூர்த்தி வடிவத்தில் பிரம்மனும் திருமாலும் தங்கள் ஒரு காலுடன் சிவனுடன் இணைகின்றனர். சிவனின் ஒற்றைக் காலுடன் இவர்களின் ஒற்றைக் கால்களும் சேர்ந்து மூன்று கால்கள் ஆவதால் சிவபெருமானின் இந்தத் திருவடிவம் திரிபாதத் திரிமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

வழிபாடு

திருவிடைமருதூரில் திரிபாதத் திரிமூர்த்தியை தரிசிக்கலாம். திருவொற்றியூர், திருவானைக்கா, தப்புளாம் புலியூர் (திருவாரூர்) போன்ற தலங்களிலும் திரிபாதத் திரிமூர்த்தி காட்சியளிக்கிறார். திருவொற்றியூரில் நடராஜர் சன்னதியின் பின்புற சுவரில், திரிபாதத் திரிமூர்த்திகள் சிலாவடிவம் செதுக்கப்பட்டுள்ளது. திருவிடைமருதூரில் திரிபாதத் திரிமூர்த்திக்கும் சொக்கநாதருக்கும் அபிஷேகம் செய்து மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில் பாடல் பாடி வழிபட்டால், அது கடும் கோடைக் காலமாக இருந்தாலும் மழை பொழியும் என்பது ஐதீகமாக உள்ளது. இவருக்குத் தும்பை மாலை அர்ச்சனையும், மிளகு அடை நைவேத்தியமும், புதனன்று அளித்து வழிபட, அறிவு விருத்தியடையும், முக்காலமும் அறியும் ஆற்றல் ஏற்படும் என்ற நம்பிக்கையாக நிலவுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 17:56:40 IST