under review

64 சிவவடிவங்கள்: 45-கிராத மூர்த்தி

From Tamil Wiki
கிராத மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கிராத மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் நாற்பத்தி ஐந்தாவது மூர்த்தம் கிராத மூர்த்தி. அர்ஜுனனின் தவத்திற்கு இடையூறாக வந்த முகாசுரனைக் கொல்ல வேட்டுவனாக(கிராதன்) சிவபெருமான் ஏற்ற வடிவமே கிராத மூர்த்தி.

தொன்மம்

பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்தனர். அவர்களின் குறைளைக் கேட்கவும், அவர்களுக்கு ஆலோசனை கூறவும், வியாசமுனிவர் கானகம் சென்றார். அங்கே பலவிதங்களில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த பாண்டவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

பின் கௌரவர்களைப் போரில் வெல்வதற்கு வேண்டிய சக்திவாய்ந்த அஸ்திரத்தைப் பெற, அர்ஜுனனிடம் சிவபெருமானை நோக்கி தவமியற்றச் சொன்னார். அவரது அறிவுரைப்படி குறிப்பிட்ட நல்லநாளில் தவம் செய்வதற்கு ஏற்ற உடையுடனும், பொருளுடனும் அர்ஜுனன் கயிலை மலையை அடைந்து சிவபெருமானை மனதில் நினைத்து, திருநீறணிந்து இருகைகூப்பி, ஒரு காலை மடித்து நின்றவாறு தவம் செய்தான்.

அர்ஜுனனின் தவத்தைக் கலைக்க விரும்பிய இந்திரன், தேவலோக நாட்டியக் கன்னிகளை அனுப்பினான். அவர்கள் அர்ஜுனன் முன்பு பலவித நாட்டியமாடினர். ஆனாலும் அர்ஜுனனின் மன உறுதியால் அவன் தவம் கலையவில்லை.

தேவகணங்கள் மூலம் அர்ஜுனின் தவத்தை அறிந்தார் பார்வதிதேவி. அதுபற்றிச் சிவபெருமானிடம் கூறினார். அர்ஜுனனுக்கு அருள் புரிய விரும்பிய சிவபெருமான் வேடராகவும், பார்வதி தேவி வேடுவச்சியாகவும், முருகன் குழந்தையாகவும், வேதங்கள் நான்கும் வேட்டை நாய்களாகவும், தேவகணங்கள் வேடுவக் கூட்டமாகவும் மாறினர். அனைவரும் அர்ஜுனன் தவம் செய்யும் இடத்தை அடைந்தனர்.

அர்ஜுனனின் தவத்தைக் கலைக்க முகாசுரன் பன்றியாக மாறி வேகமாக வந்தான். இதனைக்கண்ட சிவபெருமான், அந்தப் பன்றியைக் கொல்ல அதன் மீது அம்புவிட்டார். அதே சமயத்தில் அர்ஜுனனும் தவம் கலைந்து பன்றி மீது அம்புவிட்டான். பன்றி இறந்தது. சிவபெருமானுக்கும் அர்ஜுனனுக்கும் மடிந்த பன்றியை யார் கொன்றது என்ற விவாதம் ஏற்பட்டது. தேவகணங்களான வேட்டுவக் கூட்டத்தினர் ஒருவர் கொன்ற மிருகத்தை மற்றொருவர் சொந்தம் கொள்வது தகாது என்றனர்.. இதனால் சண்டை மேலும் முற்றியது.

அர்ஜுனனுடைய வில்லின் நாணைச் சிவபெருமான் அறுத்தார். பதிலுக்கு வில்லால் சிவனை அடித்தான் அர்ஜுனன். அந்த அடி உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. உடன் அர்ஜுனன் உண்மை உணர்ந்து மன்னிப்பு வேண்டினான். சிவபெருமான் தம்பதி சமேதராய் அவனுக்குக் காட்சி கொடுத்தார். அவன் தவத்திற்கு மெச்சி அவனுக்கு அரிய அஸ்திரமான பாசுபதாஸ்திரத்தை அளித்து ஆசிர்வதித்தார்.

அர்ஜுனனின் தவத்திற்கு இடையூறாக வந்த முகாசுரனைக் கொல்லச் சிவபெருமான் ஏற்ற வடிவமே கிராத மூர்த்தி.

வழிபாடு

குடவாசல் அருகே அமைந்துள்ள தலம் திருக்கொள்ளம்புதூர். இங்கு இறைவன் கிராத மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவன்: வில்வாரண்யேஸ்வரர். இறைவி: அழகு நாச்சியார். இங்குள்ள அகத்திய தீர்த்தத்தில் நீராடி வில்வார்ச்சனை செய்ய பகையை எதிர் கொள்ளும் ஆற்றல் வரும். செவ்வரளிப் பூக்கள் கொண்டு அர்ச்சித்து வெண்பொங்கல் அல்லது மிளகு அடை நைவேத்தியம் செவ்வாய் அன்று அளித்து வழிபட பகைவர்கள் நண்பராவர். சொத்துச் சண்டை உள்ளிட்ட சச்சரவுகள் முடிவிற்கு வரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:01:35 IST