under review

64 சிவவடிவங்கள்: 39-ஆபத்தோத்தாரண மூர்த்தி

From Tamil Wiki
ஆபத்தோத்தாரண மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று ஆபத்தோத்தாரண மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் முப்பத்தி ஒன்பதாவது மூர்த்தம் ஆபத்தோத்தாரண மூர்த்தி. ஆபத்தோத்தாரண மூர்த்தி என்றால், ஆபத்திலிருந்து காக்கும் மூர்த்தி என்பது பொருள். ஆபத்திலிருந்து காக்க எந்த உருவிலும் வரலாம் என்பதால் சாதாரண மனிதரைப்போல் சட்டையணிந்து கரங்களில் தண்டமும், கபாலமும் ஏந்தியபடி காட்சியளிப்பவர்.

தொன்மம்

ஜோதி மயமான சிவனே உலகில் சஞ்சரிக்கக்கூடிய அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் துன்பங்களைப் போக்கக் கூடியவர். அத்தகைய ஈடில்லா சிறப்பினைப் பெற்ற சிவபெருமானைச் சுற்றிலும் எண்ணற்ற தேவகணங்கள், பூதகணங்கள், நடன மங்கையர், நான்முகன், இந்திரன், திருமால், முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள், அசுரர், கிம்புருடர், கின்னரர், யமன், பதினென் கணங்கள், முருகன், வினாயகன், தேவியர், பார்வதி, காளி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி, அபிராமி, மகேஸ்வரி, சப்தகன்னியர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஆயுதங்கள், நாரதர், சந்திர, சூரியர், கிரகங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், சப்தரிஷிகள், நட்சத்திரக் கூட்டங்கள், மனிதர், நரகர், நாகர் என அனைவரும் நின்று தொழுவர்.

சிவபெருமானைச் சுற்றிலும் நின்றபடி இருக்கும் அவர்கள் அனைவருக்கும் வேண்டிய வரங்களையும், வேண்டும் பிறவற்றையும் கொடுப்பார் சிவபெருமான். அச்சமயங்களில் அவர்களது எண்ணப்படி சாதாரண மானிடர் போல் சட்டையணிந்து இரண்டு திருக்கரங்களிலும் தண்டமும், கபாலமும் ஏந்தியபடி அவர் வீற்றிருப்பார்.

இவ்வாறென்று கூற முடியாதபடி அந்தந்த சமயத்திற்குத் தகுந்தபடி அனைவரது குறைகளையும் கேட்டறிந்து, அவர்களின் துன்பங்களில் இருந்தும், ஆபத்திலிருந்தும் அவர்களைக் காத்து ரட்சிப்பார். ஆகவே அவரது அற்புதங்களும், அவதாரங்களும், மூர்த்தங்களும் தோன்றியது இன்னக் காரணங்களுக்கெனக் கூறமுடியாது. துன்பம் அடைந்தோரையும், ஆபத்திலிருப்போரையும் காத்து ரட்சிக்கும் திருக்கோலமே ஆபத்தோத்தாரண மூர்த்தி.

வழிபாடு

சீர்காழியில் சிவெபெருமான் ஆபத்தோத்தாரண மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். மூலவர் பிரம்மபுரீஸ்வரர். இறைவி திருநீலைநாயகி. ஆபத்து சமயங்களில் இவரை வேண்ட, இவர் உதவுவார் என்பது ஐதீகம். இவருக்கு எருக்கு, தும்பைப்பூ, முல்லைப்பூ அர்ச்சனையும், புனுகு அபிஷேகமும் வெள்ளி இரவு 12 மணியளவில் செய்து வழிபட வேண்டிய பலன் உடனே கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:06:17 IST