under review

64 சிவவடிவங்கள்: 38-பைரவ மூர்த்தி

From Tamil Wiki
பைரவ மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று பைரவ மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் முப்பத்தி எட்டாவது மூர்த்தம் பைரவ மூர்த்தி. ஆடையின்றி, திகம்பரராக, நாய் வாகனத்துடனும் உக்கிரமான பார்வையுடனும் காட்சி அளிப்பவர் பைரவர். இவர், நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடனும் ஒவ்வொரு கைகளிலும் டமருகம், பாசம், சூலம், கபாலத்துடனும் காட்சி தருபவர்.

சிவபெருமானின் வீர செயல்கள் எட்டு. அந்த வீரச் செயல்களின் வெளிப்பாடாக பைரவருக்கு எட்டுத் திருவுருவங்ள் உண்டு. அஷ்ட பைரவர்கள் என்று அவை அழைக்கப்படுகின்றன.

  • அசிதாங்க பைரவர்
  • ருரு பைரவர்
  • சண்ட பைரவர்
  • குரோத பைரவர்
  • உன்மத்த பைரவர்
  • கபால பைரவர்
  • பீஷண பைரவர்
  • சம்ஹார பைரவர்

பைரவர் 64 திருக்கோலங்களை உடையவர் என்று சிவாகமங்கள் கூறுகின்றன. அந்தகன் என்னும் அசுரனின் அகங்காரத்தை அழிக்கச் சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவ மூர்த்தி.

தொன்மம்

கருமையான மலை போன்ற உடலையும், விகாரமான முகத்தையும், கோரமான பற்களையும், யானையின் துதிக்கையைப் போன்ற கைகளையும் உடைய கொடிய அசுரன் அந்தகன். இவன் சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து அதன் மத்தியில் அமர்ந்து தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் தோன்றி, என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். பிரம்மா, விஷ்ணு இவர்களை விடப் பலமும், யாராலும் அழிக்க முடியாத ஆற்றலும் வேண்டும் என்று கேட்டான். அவன் செய்த தவத்தின் பலனால் அவன் கேட்டதைக் கொடுத்தார் சிவபெருமான்.

தான் பெற்ற வரத்தினால், இந்த உலகில் தானே வலிமையுள்ளவன் என்ற அகங்காரம் அசுரனுக்கு அதிகமானது. அதனால் இந்திரன், விஷ்ணு, பிரம்மா என அனைவரிடமும் சண்டையிட்டான். அவனிடம் அனைவரும் தோல்வியடைந்தனர். இறுதியில் விஷ்ணு முன்செல்ல தேவகணங்ளும் உடன் சென்ரு அந்தகனைச் சரணடைந்தனர். சரணடைந்த பின்பும் அவனது கொடுமை தொடர்ந்தது. அந்தகன் அனைவரையும் பெண்களைப்போல் உடை, நடை, பாவனைகளில் இருக்கும்படிக் கட்டளையிட்டான். அதன்படியே அனைவரும் பெண்களாயினர். ஆனால், அவர்கள் பெண்களான பின்னும் அவனது கொடுமை தொடர்ந்தது. அனைவரும் அக்கோலத்துடனேயே சிவபெருமானை வழிபட்டனர். சிவபெருமான் உடன் தோன்றி அவர்களை பார்வதியின் அந்தப்புரத்துப் பெண்களுடன் இருக்கச் செய்தார். அப்போதும் விடாமல் தொல்லைக் கொடுத்தான் அசுரன். பொறுத்துப் பார்த்த தேவகணத்தினர் திருக்கயிலையை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமான் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பைரவரிடம் அந்தகனை வெற்றி பெற உத்தரவிட்டார். பைரவருக்கும் அந்தகனுக்கும் இடையே அதிபயங்கரப் போர் நடந்தது. பல அசுர சேனைகளை பைரவர் அழித்தார். அழிந்த அனைவரையும் அசுரனின் தலைவர் சுக்கிராச்சாரியார் உயிர்ப்பித்தார். உடனே சிவபெருமான் சுக்கிராச்சாரியாரை விழுங்கினார். அடுத்த நொடி அசுர சேனைகள் அனைத்தும் அழிந்தன. பைரவர் தனது சூலத்தால் அந்தகனைக் குத்திவிட்டு சிவபெருமானைச் சரணடைந்தார். பைரவரின் சூலத்தால் குத்தப்பட்டு அதன் அருளால் மனம் மாறிய அந்தகன், தனது அகங்காரமெல்லாம் அழிந்து போக வேண்டும் என்றும், தன்னை பூத கணங்களுக்குத் தலைவனாக ஆக்க வேண்டும் என்றும் சிவபெருமானிடம் வேண்டினான்.

சிவபெருமான் அவனது தவத்தின் பலனாலும் வேண்டுதலாலும் அவனது எண்ணத்தை நிறைவேற்றினார். தன் வயிற்றிலிருந்த சுக்கிராச்சாரியாரை வெளியேற்றினார். பின்னர் தேவர்கள் தொல்லையின்றி நிம்மதியுடன் வாழ்ந்தனர். அந்தகனின் அகங்காரத்தை அழிக்கச் சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவ மூர்த்தி.

புராண வரலாறு

பைரவர் தோற்றம் பற்றிப் பின்வருமாறு புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமானைப் போல் ஐந்து தலையுடன் இருந்த நான்முகன் மிகுந்த அகங்காரம் கொண்டிருந்தார். பிரம்மனின் அகங்காரத்தை அடக்கச் சிவபெருமான் பைரவரைத் தோற்றுவித்தார். பைரவர் நான்முகனின் ஐந்தாவது தலையை கிள்ளியெடுத்தார். நானே பெரியவன் என்ற அகங்காரம் தோன்றும் இடத்தில் எல்லாம் அகங்காரத்தை அழிக்க சிவபெருமான் எடுக்கும் ரூபமே பைரவர் வடிவமாக அறியப்படுகிறது.

வழிபாடு

அனைத்து சிவாலயங்களிலும் வடகிழக்கு மூலையில் பைரவரது சன்னதி இருக்கும். அவரே அத்திருக்கோவிலின் பாதுகாப்பாளராக அறியப்படுகிறார் .

சீர்காழியில் உள்ள பிரம்மேஸ்வரர் சன்னதியில் அட்ட பைரவர் சன்னதிகள் உள்ளன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் முக மண்டலத்தில் எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. காசியிலும் எட்டு பைரவர்களின் சன்னதி உள்ளது. குற்றாலத்தில் உள்ள சித்திர சபையில் அட்ட பைரவர்களின் ஓவியங்கள் உள்ளன. சூரியனது கோயிலில் உள்ள பைரவர் மார்த்தாண்ட பைரவர் என்றும், முருகன் ஆலயத்தில் உள்ள பைரவர் குமார பைரவர் என்றும், விநாயகர் ஆலயத்தில் உள்ள பைரவர் பிரமோத பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றனர். திருமாலின் திருக்கோயிலிலும் பைரவர் திருவுருவங்கள் உண்டு. அந்த உருவத்திற்கு முகுந்த பைரவர் என்று பெயர். திருவண்ணாலையில் மூலவர் சன்னதி அருகே சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி உண்டு. காசியில் ஆதிசங்கரருக்கு பிரம்மஞானம் அருளிய கோலம் பைரவத் திருக்கோலம்.

பைரவரை தேய்பிறை அஷ்டமியில், செவ்வரளிப் பூவால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து ஆறு தேய்பிறைகள் வழிபட புத்திரபாக்கியம் கிடைக்கும். பன்னிரெண்டு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவ சகஸ்ரநாமம் கூறி ஜென்ம நட்சத்திரம் அன்று அர்ச்சித்து பூந்தியை நைவேத்தியமாக அளித்து வழிபட சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு வரும். தேனாபிஷேகம் செய்து நெய் விளக்கிட்டு, உளுந்தவடை சாற்றி ஜென்ம நட்சத்திரத்தில் வழிபட வியாபாரம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது, நாயுருவி இலையைக் கொண்டு அர்ச்சனை செய்து, சுத்த அன்னம் மற்றும் வெண்ணிறப் பசுவின் பால் கொண்டு சனிதோறும் நைவேத்தியம் செய்து வழிபட யமபயம் நீங்கி சுகம் உண்டாகும் என்பது ஐதீகமாக உள்ளது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:07:23 IST