64 சிவவடிவங்கள்: 37-இலகுளேஸ்வர மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று இலகுளேஸ்வர மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் முப்பத்தி ஏழாவது மூர்த்தம் இலகுளேஸ்வர மூர்த்தி. அண்டத்தின் நடுநாயகமாக நான்கு கரங்களில் மழுவும், சூலமும், கலசமும் ஏந்தியபடி அண்டத்தை ஆளும் வடிவாகக் காட்சியளிக்கிறார்.
தொன்மம்
நம்முடைய உலகம் இருக்கும் அண்டத்தைப் போலவே கோடிக்கணக்கான அண்டங்கள் அளவிட முடியாதபடி பரந்து விரிந்துள்ள ஆகாயத்தில் உள்ளன. அதில் நடுநாயகமாகச் சிவபெருமான் வீற்றிருக்கிறார். ஒளிவெள்ளத்தின் நடுவே அவர் வீற்றிருக்கும் இடத்தின் விரிவு அநேக கோடி யோசனை தூரம். சிவபெருமானின் வலப்புறம் மழுவும், இடப்புறம் சூலமும், கலசமும் உள்ளன. இவ்வுலகிலுள்ள உயிரினங்களின் மும்மலங்களைப் போக்கி நல்கதியை அருளும் நல் ஞானாசிரியனாக சிவபெருமான் வீற்றிருக்கிறார். இத்தகைய பெருமையுடன் ஒவ்வொரு அண்டத்திலும் ஒருவராக எழுந்தருளி அங்குள்ள உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கொடுத்து அருளாட்சி செய்யக் கூடிய மூர்த்தியே இலகுளேஸ்வர மூர்த்தி என்பது தொன்மம்.
வழிபாடு
தாராசுரம் அருகேயுள்ள சத்திமுற்றம் என்ற ஊரில் இலகுளேஸ்வர மூர்த்தியாகச் சிவபெருமான் வழிபடப்படுகிறார். இங்கு இறைவன் பெயர் சிவக்கொழுந்தீசர்; அம்பாள், பெரிய நாயகி. இங்குள்ள சூல தீர்த்தத்தில் நீராடி இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணத்தடைகள் விலகும் என்றும் மகா வில்வ அர்ச்சனையும், முக்கனிப் படையல் நைவேத்தியமும் புதன்கிழமைகளில் செய்ய மும்மலம் மறைந்தோடும், பதவியைத் தக்க வைக்க முடியும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Oct-2024, 18:08:03 IST