under review

64 சிவவடிவங்கள்: 27-கங்காள முர்த்தி

From Tamil Wiki
கங்காள முர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கங்காள முர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் இருபத்தி ஏழாவது மூர்த்தம் கங்காள முர்த்தி. வாமனரின் முதுகெலும்பைக் கையில் தண்டாக மாற்றிக் கொண்ட சிவபெருமானின் திருக்கோலமே கங்காள முர்த்தி. கங்காளம் என்றால் எலும்பு என்பது பொருள்.

தொன்மம்

ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப் பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஓர் எலி. அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அந்த எலிக்கு திரிலோகமும் ஆட்சி செய்யும் வரத்தை வழங்கினார். அந்த எலி அடுத்த பிறவியில், அசுர குலத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. அசுரனாக இருந்தாலும் தானதர்மங்களிலும், யாகங்கள் இயற்றுவதிலும் மகாபலி சிறந்தவனாக விளங்கினான். அதனால் அவன் புகழ் பெருகியது. அதனால் அஞ்சிய தேவர்கள் மகாபலியுடன் போரிட்டனர். போரில் தோற்ற அவர்கள் மகாபலிக்கு அஞ்சி திருமாலிடம் முறையிட்டனர்.

இக்காலகட்டத்தில் திருமாலை மகனாக அடைய காசியப முனிவரின் மனைவியான திதி வரம் கேட்டாள். அதன்படி அவர்களுடைய மகனாகத் திருமால் பிறந்தார். அதுவே வாமன அவதாரம்.

இந்நிலையில், மகாபலிச் சக்கரவர்த்தி மிகப் பெரிய யாகம் ஒன்றைச் செய்தான். யாகத்தின் போது அளிக்கப்படும் தான, தர்மங்களைப் பெற, வாமனராகிய திருமால் யாகம் நடக்குமிடம் சென்று தன் காலால் மூன்றடி மண் வேண்டுமெனக் கேட்டார். அசுர குருவான சுக்கிராச்சாரியார், வந்திருப்பது திருமால் என்பதை அறிந்து, தானம் தர வேண்டாமென மன்னன் மகாபலியைத் தடுத்தார்.

”யார் என்ன கேட்டாலும் கொடுப்பதே என் தர்மம். அதுவும் யாகத்தின் போது தானமாகக் கேட்பதைக் கொடுக்காமல் இருப்பது அறமல்ல; நான் வாக்குத் தவற மாட்டேன்” என்று கூறிய மகாபலிச் சக்கரவர்த்தி, வாமனருக்கு மூன்றடி மண் தர இசைந்தான்.

உடனே குறுகிய வாமன அவதாரத்திலிருந்து நீண்ட, நெடிய திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்தார். பின், ”மூன்றாவது அடிக்கு இடமெங்கே?” என்று மகாபலியிடம் கேட்டார்.

மகாபலி, “இடம் இங்கே இருக்கிறது” என்று கூறித் தன் தலையைக் காட்டினான். அதன்படி திரிவிக்கிரமர் மகாபலியின் தலை மீது கால்வைத்து அழுத்த, அவன் பாதாள லோகத்தில் அமிழ்ந்தான்.

மகாபலியை அழித்த திருமால், தான் திருமாலின் அவதாரம் என்பதை மறந்தார். மிகுந்த ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால் அஞ்சிய தேவர்கள், சிவபெருமானைச் சரணடைந்தனர். சிவபெருமான் வாமனரைச் சந்தித்து அவரை அமைதி கொள்ள வேண்டினார். ஆனால், கர்வமடங்காத அவர் மேலும் ஆர்ப்பாட்டம் செய்தார். திருமாலுக்குப் பாடம்புகட்ட எண்ணிய சிவபெருமான் வச்சிரதண்டம் எடுத்து வாமனனின் மார்பில் அடித்தார். வாமனர் விழுந்தவுடன் அவரது தோலை உறித்துத் தன் மேல் ஆடையாக்கி, முதுகெலும்பினைப் பிடுங்கி தண்டாகத் தன் கையில் தரித்துக் கொண்டார். கர்வம் அடங்கியதும் திருமால் தான் அவதாரம் என்பதை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வைகுண்டம் சென்றடைந்தார். மகாபலி மன்னனுக்கும் மோட்சம் கிட்டியது.

சிவபெருமான் வாமனரின் முதுகெலும்பைக் கையில் தண்டமாக மாற்றிக் கொண்டு காட்சி அளிக்கும் திருக்கோலமே கங்காள மூர்த்தி.

வழிபாடு

கங்காளமூர்த்தி, சீர்காழியில் சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இறைவி: பெரியநாயகி, திருநிலைநாயகி. இங்குள்ள சுகாசனமூர்த்தியை குரு பகவான் தொடர்புடைய தோஷங்களத் தீர்ப்பவராகவும், அறியப்படுகிறார். தொழில் வளர்ச்சி பெருகும். கேது தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தொழில் வளரவும் இவருக்கு நந்தியாவட்டை மலரால் அர்ச்சனையும், சித்திரான்ன நைவேத்தியமும், பௌர்ணமி, சோம வாரங்களில் அளித்து வழிபடப்படுகிறது. கங்காளமூர்த்திக்கு தர்ப்பை நீரால் அபிஷேகம் செய்தால் யோக சித்தி கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Sep-2024, 17:09:29 IST