64 சிவவடிவங்கள்: 25-சார்த்தூலஹர மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சார்த்தூலஹர மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் இருபத்தி ஐந்தாவது மூர்த்தம் சார்த்தூலஹர மூர்த்தி. தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய புலித்தோலை ஆடையாகக் கொண்ட சிவபெருமானின் கோலமே சார்த்தூலஹர மூர்த்தி
தொன்மம்
தங்கள் மந்திர சாதனை மற்றும் வேள்விகளால் ஆணவம் கொண்ட தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை அகற்ற, மோகினி அவதாரமெடுத்து திருமால் அவர்களைச் சோதித்தார். ரிஷிபத்தினிகளை பிக்ஷாடனர் அவதாரமெடுத்து சிவபெருமான் சோதித்தார். இதனால் முனிவர்கள் அளவற்ற சினம் கொண்டனர். தாங்கள் உயர்வாகப் போற்றும் வேள்வியின் மூலம் சிவபெருமானை அழிக்க முடிவு செய்து பிறருக்குத் தீங்கு செய்யக்கூடிய அபிசார ஹோமத்தை மேற்கொண்டனர்.
யாகத்திலிருந்து இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன், கூர்மையான பற்கள், அகண்ட வாய், தீச்சுடர் பொங்கும் விழிகளுடன் ஒரு புலி தோன்றியது. அதனைச் சிவபெருமானிடம் ஏவினர். அதனை அடக்கிய சிவபெருமான் அதனைக் கொன்று அதன் தோலினை ஆடையாக அணிந்தார். முனிவர்கள் மழு எனும் ஆயுதத்தை ஏவினர். அதனைச் சிவபெருமான் தனது படைக்கலனாக மாற்றிக் கொண்டார். பின் வான் மார்க்கமாக உலகத்தையே அச்சுறுத்தும்படி மான் ஒன்று வந்தது. சிவபெருமான் அதனை அடக்கித் தனது இடக்கரத்தில் ஏந்தினார். பின் நாகம் வந்தது. அதனை ஆபரணமாக்கி அணிந்து கொண்டார். பின் அடக்கமுடியாத பூத கணங்களை முனிவர்கள் ஏவினர். அவையும் சிவபெருமானிடம் தோற்று, அவரது படைப் பரிவாரமாக ஆகின. பின்னர் வெண்ணிற மண்டை ஓடு உலகமே அதிரும்படி வந்தது. அதனை அடக்கித் தன் தலையில் அணிந்துகொண்டார் சிவபெருமான்.
பின்னர் கர்ண கடூர ஓசையுடன் உடுக்கையை முனிவர்கள் அனுப்பினர். அதனைத் தனதாக்கினார். முயலகனை ஏவினர். சிவபெருமான் நெருப்பைக் கையில் ஏந்தியபடி முயலகனைத் தன் காலினால் நிலத்தில் தள்ளி அவன் முதுகில் ஏறி நின்றார். முயலகன் அசைந்ததால் சிவபெருமான் நடனம் ஆட ஆரம்பித்தார். இதனைக் கண்ட முனிவர்கள் தங்கள் ஆணவம் ஒழிந்து அவரைச் சரணடைந்தனர். சிவபெருமான் அவர்களுக்கு மன்னிப்பை வழங்கி ஆசிர்வதித்தார்.
முனிவர்கள் ஏவிய புலித்தோலை ஆடையாகக் கொண்ட சிவபெருமானின் திருக்கோலமே சார்த்தூலஹர மூர்த்தி.
வழிபாடு
மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூரில் தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய புலியை அடக்கச் சிவபெருமான் தோன்றினார் என்பது ஐதீகம். இங்கு சிவபெருமான் சார்த்தூலஹர மூர்த்தி வடிவத்தில் கோவில் கொண்டுள்ளார். இங்குள்ள மூலவரின் பின்னால் அபிசார இயந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. அபிசார யந்திரத்துக்கு சந்தனக் காப்பிடுதலும், இறைவனுக்கு ருத்ராபிஷேகமும் செய்வினைகளை முறியும் என்ற நம்பிக்கை உள்ளது. இழந்த சொத்துக்கள் கிடைக்க வேண்டி ஏழு பிரதோஷ காலங்களில் இங்குள்ள இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்படுகின்றன. திங்கள், வியாழக் கிழமைகளில் தும்பை, வில்வ, அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் மோட்சத்தை அளிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 21:01:27 IST