64 சிவவடிவங்கள்: 23-கஜயுக்த மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கஜயுக்த மூர்த்தி.
வடிவம்
64 சிவ வடிவங்களில் இருபத்தி மூன்றாவது மூர்த்தம் கஜயுக்த மூர்த்தி. கஜாசுரனுடன் போரிட்டு வென்று, அவனது தோலைத் தனது ஆடையாகப் போர்த்திக் கொண்ட சிவபெருமானின் திருக்கோலமே கஜயுக்த மூர்த்தி.
தொன்மம்
யானை உருவத்தில் இருந்த கஜாசுரன் எனும் அசுரன், மேருமலையில் பிரம்மனை நினைத்துக் கடுந்தவம் செய்து யாராலும் தன்னை அழிக்க முடியாத வரமும் எதிலும் வெற்றி கிடைக்கவேண்டும் என்ற வரமும் கேட்டான். சிவபெருமானை தவிர வேறு யாராலும் அவனுக்கு அழிவு இல்லை என்றும், எதிலும் அவனுக்கு வெற்றி கிடைக்கும் என்று கூறி பிரம்மா வரம் கொடுத்தார்.
வரம் கிடைத்ததும் அவன் சிவபெருமானைத் தவிர பிற தேவர்கள் அனைவருக்கும் தொல்லை கொடுத்தான். பல கொடுமைகளைச் செய்தான். தேவர்களின் தலைவனான இந்திரனும் கஜாசுரனிடம் போரிட முடியாமல் தோற்றான். உடன் இந்திரனின் வாகனமான ஐராவதத்தின் வாலைப் பிடித்து இழுத்துத் தூர எறிந்தான் கஜாசுரன். அமராவதி நகரை அழித்தான். தேவர்களையும் உலக மக்கள் அனைவரையும் கொடுமைப்படுத்தி விரட்டினான்.
தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டு, அவரைச் சரணடைந்தார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து கஜாசுரனும் அங்கு வந்தான். சிவபெருமானைத் தான் எதிர்க்கக் கூடாது என்பதை மறந்து ஆணவத்தில் சிவபெருமானின் ஆலய வாசலின் முன் நின்று கஜாசுரன் கர்ஜனை செய்தான்.
தன்னைச் சரணடைந்தவர்களைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமான் மிகப்பெரிய வடிவம் எடுத்தார். பார்க்கும் அனைவரும் அஞ்சும்படி கண்களின் வழியே தீச்சுவாலைகள் தெறிக்க, சிவபெருமான் கஜாசுரனைத் தனது திருவடியால் உதைத்தார். அவன் கீழே விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது தலையை மிதித்துத் தொடையில் ஊன்றியவாறே தனது நகங்களால் அவனது தோலை உரித்தார். கஜாசுரனின் தோலைத் தன் மீது போர்த்தியபின் சிவபெருமான் சாந்தமடைந்தார். கஜாசுரன் என்னும் அசுரனின் தோலைப் போர்த்திய சிவபெருமானின் இந்த வடிவத்திற்கு கஜயுத்த மூர்த்தி என்று பெயர். யானை உரித்த பெருமான் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
வழிபாடு
சிவாலயங்கள் பலவற்றிலும் கோபுரத்திலும், தூண்களிலும், சுதை சிற்பமாகவும் கஜயுக்த மூர்த்தியின் சிற்பம் உள்ளது. திருவழுவூரில் சிவபெருமான் கஜயுக்த மூர்த்தி வடிவில் கோவில் கொண்டுள்ளார். தாருகாவனத்து முனிவர்கள், தாங்கள் செய்த யாகத்தில் தோன்றிய யானையைச் சிவபெருமானை அழிக்கும்படி ஏவினர். சிவபெருமான் அணிமாசித்தி மூலம் தன்னை அணுவிற்கும் சிறிய அளவாக உருமாற்றிக் கொண்டு யானையின் உடலுக்குள் சென்று, பின் யானையின் உடலைக் கிழித்தபடி வெளி வந்தார். அதனால் கஜசம்ஹார மூர்த்தி என்று அழைக்கப்பட்டார்.
திருவழுவூரில் உள்ள கஜசம்ஹார மூர்த்திக்கு அபிஷேகம் ஆராதனை செய்து வணங்கச் சனி தோஷம் விலகும் என்றும் ஏழரைச் சனியின் பாதிப்பு குறையும் என்றும் நம்பப்படுகிறது. 12 அமாவாசைகள் காலையில் விஸ்வரூப தரிசனம் கண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. திங்கள் கிழமைகளில் அருகம்புல் அர்ச்சனையும், பாயச நைவேத்தியமும் பகையை அழிக்கும் என்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் செய்தால் மரண பயம் நீங்கும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 20:59:58 IST