under review

64 சிவவடிவங்கள்: 22-அர்த்தநாரீஸ்வர மூர்த்தி

From Tamil Wiki
அர்த்தநாரீஸ்வர மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று அர்த்தநாரீஸ்வர மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் இருபத்தியிரண்டாவது மூர்த்தம் அர்த்தநாரீஸ்வர மூர்த்தி. சிவபெருமான், உமைக்கு இடப்பாகம் தந்து, வலப்பக்கம் சிவனும், இடப்பக்கம் பார்வதியுமாக உள்ள திருக்கோலமே அர்த்தநாரீஸ்வர மூர்த்தி. மாதொருபாகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

தொன்மம்

திருக்கயிலாயத்தில் சிவபெருமானைத் தரிசிக்க முனிவர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், ரிஷிகள், இந்திரன் என அனைவரும் குழுமியிருந்தனர். அவர்களை வரிசைப்படி நந்தி தேவர் அனுப்பிக் கொண்டிருந்தார். அனைவரும் பார்வதி தேவியையும், சிவபெருமானையும் தனித்தனியாக வணங்கி, வேண்டும் வரங்களைப் பெற்றுச் சென்றனர். ஆனால், சிவனைத் தவிர வேறு யாரையுமே வணங்க விரும்பாத பிருங்கி முனிவர், பார்வதி தேவியைத் தரிசனம் செய்யாமல் சிவபெருமானை மட்டும் வணங்கிச் சென்றார். இதனால் பார்வதிதேவி, சினம் கொண்டு பிருங்கி முனிவரின் உடலிலுள்ள சக்தியைத் தனது ஆற்றலால் ஆகர்ஷித்துக் கொண்டார். தனது உடலியக்க ஆற்றலை இழந்தபோதும், எலும்பும் தோலுமாகக் காட்சி அளித்த போதும், பிருங்கி முனிவர் அதனைச் சட்டை செய்யாது, அதே எலும்பும் தோலுமான உருவத்துடன் சிவபெருமானை வலம் வந்து வணங்கித் துதித்தார்.

சிவபெருமான், நடக்க முடியாமல் நடந்து வந்த பிருங்கி முனிக்கு ஊன்றுகோல் ஒன்றை வழங்கினார். முனிவர் அகன்றவுடன் பார்வதி தேவி , முருகன், சப்த மாதர்கள் படைசூழ ஒரு மலைச்சாரலில் உறுதியான தூண் ஒன்றின் மீது நின்றவாறு தவம் செய்தார். கடுமையான தவத்தால் மகிழ்ந்த சிவபெருமானிடம் “இறைவா, நான் தனியாகவும் நீங்கள் தனியாகவும் இல்லாமல் தங்களது இடப்பாகமாக நானிருக்கும்படியான வரத்தைத் தரவேண்டும்” என்று கேட்டார்.

சிவபெருமானும் அவ்வாறே தந்து தனது இடப்பாகத்தில் தேவிக்கு இடமளித்தார். வலப்பக்கம் சிவனும், இடப்பக்கம் பார்வதியுமாக உள்ள திருக்கோலமே அர்த்தநாரீஸ்வர மூர்த்தி. ‘அர்த்தம்’ என்றால் பாதி; ’நாரி’ என்றால் பெண் என்பது பொருள்.

வழிபாடு

ஈரோடு அருகே உள்ள திருச்செங்கோட்டில் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வர மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். இங்குள்ள இறைவன் பெயர் அர்த்தநாரீஸ்வரர், இறைவி பாகம்பிரியாள். அர்த்தநாரீஸ்வரரை வணங்கினால் கணவன் - மனைவி அன்புடன் வாழ, குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும் என்பது ஐதீகம். வில்வ, தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும், திங்கள், பிரதோஷ, பௌர்ணமி தினங்களில் அளிக்க பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்றும் பசும்பால் அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 20:59:15 IST