under review

64 சிவவடிவங்கள்: 19-கங்கா விசர்ஜன மூர்த்தி

From Tamil Wiki
கங்கா விசர்ஜன மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று கங்கா விசர்ஜன மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் பத்தொன்பதாவது மூர்த்தம் கங்கா விசர்ஜன மூர்த்தி. பொங்கிப் பாய்ந்து வந்த ஆகாயக் கங்கையைத் தன் தலையில் தாங்கிப் பின் மெல்ல விடுவித்த சிவனின் திருக்கோலமே கங்கா விசர்ஜன மூர்த்தி .என அழைக்கப்படுகிறது.

தொன்மம்

அயோத்தியை ஆண்ட இக்ஷ்வாகு குலத்தில் மன்னர் சகரருக்கு முதல் மனைவி சுமதிக்கு மூலம் அறுபதாயிரம் குழந்தைகளும் 2-வது மனைவி கேசினி மூலம் ஒரு குழந்தையும் பிறந்தனர். சகரர் அஸ்வமேத யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். இந்த யாகத்தைச் சகர மன்னன் செய்து முடித்தால் அவன் இந்திர பதவிக்குத் தகுதி பெற்று விடுவான் என்று அஞ்சிய இந்திரன் யாகத்தைத் தடுத்து நிறுத்த எண்ணி, அஸ்வமேத யாகத்துக்கான குதிரையைத் திருடி பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டி வைத்தான்.

குதிரையைத் தேடி கொண்டுவரச் சென்ற சரகரின் அறுபதாயிரம் மகன்களும் பாதாளத்தில் கபில முனிவர் ஆசிரமம் அருகே குதிரையைக் கண்டனர். முனிவர் குதிரையைத் திருடியதாக எண்ணி அவரைக் இகழ்ந்தனர். தியானம் கலைந்து கண் விழித்த கபில முனிவர், அறுபதாயிரம் பேரை பார்த்ததும் கண்களால் எரித்து சாம்பலாக்கினார்.

சகரர், கபில முனிவரை வணங்கி, நடந்தவற்றைகூறி, தன் புதல்வர்களை மன்னிக்குமாறும், சாம்பலான பிள்ளைகள் நற்கதி அடைய வழிகாட்டுமாறும் வேண்டினார். கபில முனிவர் குதிரையை எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்து, சிவனின் ஒற்றைத் திருமுடியில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து கங்கை நீரால் மகன்கள் எரிந்த சாம்பலைப் புனிதப்படுத்தினால் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார்.

சகரர், குதிரையை எடுத்துச் சென்று அஸ்வமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் அஞ்சுமான் நாட்டின் அரச பதவியை ஏற்றுக் கொண்டார்.

அஞ்சுமானின் வம்சாவளியில் வந்தவர் பகீரதன். தமது முன்னோர்கள் நற்கதி பெறாமல் பாதாள லோகத்தில் இருப்பதை அறிந்து நாட்டைத் துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வருவதற்காக பிரம்ம தேவரை நினைத்துக் காட்டில் கடும் தவம் இயற்றினார். அவரது தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்தார். பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடைய வேண்டி பூமிக்கு வந்து பின் பாதளத்துத்தில் பாய்ந்து தன் முன்னோருக்கு நற்கதி அளிக்க வேண்டினார். கங்கை சம்மதித்து , “பகீரதா நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி மாதா தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன்” என்றாள்.

பகீரதனும் தேவர்களிடம் கங்கையைத் தாங்கிப் பிடிக்குமாறு வேண்டினார். கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்து விட்டனர். மகாவிஷ்ணு சிவபெருமான் மட்டுமே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர் என்றும் அவரை வேண்டவும் அறிவுறுத்தினார். சிவனை நோக்கி தவமிருந்தார் பகீரதன். மனம் மகிழ்ந்த சிவன் பகீரதனின் மன உறுதியைப் பாராட்டி, கங்கை பூமிக்கு வரும் போது தன் சடையால் கங்கையைப் பிடித்து மெல்ல பூமியில் விழச் செய்வதாக உறுதியளித்தார்.

கங்கை பூமியை நோக்கிப் பாய்ந்து வர சிவன் தன் சடையை விரித்துப் பிடித்தார். கங்கை ஆணவத்தால் சிவனால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது என எண்ணினாள்.சிவபெருமான் நதியாக வந்த கங்கையினுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி கங்கையின் ஆணவத்தை அடக்கினாள்.

பகீரதனோ கங்கையைக் காணாமல் சிவனை நோக்கி ஒற்றைக் காலில் மீண்டும் தவம் செய்தார். பகீரதன் முன் தோன்றிய சிவன், கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறி, கங்கையை மெல்ல மெல்லத் தன் திருமுடியிலிருந்து வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கி நந்திதேவர் இமயத்தில் விட, கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தார். வழியில் ஜாஹ்னவ முனிவரின் ஆசிரமம் கங்கை நீரால் அழியவே கோபம் கொண்ட ஜான்ஹவ முனிவர் கங்கையை தன் கைகளால் எடுத்து அள்ளிக் குடித்து விட, கங்கை மீண்டும் சிறைப்பட்டாள்.

பகீரதன் கலங்கி, முனிவரிடம் கங்கையை விடுமாறு வேண்டினார். மனமிரங்கிய ஜாஹ்னவ முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மெதுவாக வெளியே விட்டார். அதனால் கங்கைக்கு ஜாஹ்னவி என்ற பெயர் ஏற்பட்டது. த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றார் பகீரதன். அங்கே கபில முனிவரைச் சந்தித்து ஆசிகள் பெற்று, தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினார். சகரரின் மகன்களும், பகீரதனின் முன்னோர்களுமான அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது.

பகீரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பாகீரதி என்ற பெயர் ஏற்பட்டது. தனது ஒற்றைத் திருமுடியில் இருந்த கங்கையை தனது சடையில் ஏற்று உலகத்திற்கு அளித்து வழி காட்டியதால் சிவபெருமானுக்கு கங்கா விசர்ஜன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.

வழிபாடும் பலன்களும்

இமயமலையின் கேதார்நாத்தில் சிவன் கங்கா விசர்ஜன மூர்த்தியாக அருள் புரிகிறார். ஆறு மாத காலம் மட்டுமே அங்கு கோயிலில் வழிபாடுகள் நடைபெறும். பனி மழையால் ஆறுமாதம் மூடப்பட்டிருக்கும். உமை, சிவனிடம் இடபாகம் பெற்ற தலமாகவும் கேதார்நாத் அறியப்படுகிறது. கேதாரேஸ்வரரை வணங்கி அங்குள்ள புனித நீரை வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களுக்குப் பயன்படுத்தும் வழக்கம் உண்டு. வெண்தாமரை அர்ச்சனையும், எள் சாத நைவேத்தியமும் அமாவாசை, திங்கள் கிழமைகளில் செய்யப் பித்ரு தோஷம் நீங்கும் எனவும், கேதார்நாத்திலிருந்து கொண்டு வரும் நீரை வெள்ளிக்கலசத்தில் வைத்துப் பூஜிக்க செல்வம் வளரும் என்றும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 19:04:11 IST