64 சிவவடிவங்கள்: 15-சந்த்யாந்ருத்த மூர்த்தி
சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று சந்த்யாந்ருத்த மூர்த்தி
வடிவம்
64 சிவ வடிவங்களில் பதினைந்தாவது மூர்த்தம் சந்த்யாந்ருத்த மூர்த்தி. சிவபெருமான், சந்தியா காலத்தில், பிரதோஷ நேரத்தில், சூலம், உடுக்கை சகிதம் சந்தியா தாண்டவம் ஆடினார். சிவனின் இவ்வடிவமே சந்த்யாந்ருத்த மூர்த்தி எனப்படுகிறது.
தொன்மம்
பாற்கடலிலிருந்து அமிர்தம் பெறுவதற்காக, தேவர்களும் அசுரர்களும் இணைந்து, மந்திர மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தனர். அதனால் மந்திர மலையானது பாற்கடலினுள் மூழ்கத் தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து மந்திர மலையைத் தாங்கினார். சிவபெருமானின் உதவியில்லாமல் தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகிப் பாம்பு வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தைக் கக்கியது. அவ்விஷம் தேவர்களையும் அசுரர்களையும் துரத்தியது. எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். விஷத்தைக் கண்டு அஞ்சிய அனைவரும் தஞ்சம் வேண்டி சிவபெருமான் இருக்கும் கைலாயம் சென்றனர். கைலாயத்தினை வலம் வருகையில் எதிராக வந்து அந்த விஷம் விரட்டியது. மறு திசையில் சென்றார்கள். அங்கும் அவ்விஷம் வந்து விரட்டியது இவ்வாறாக அவர்கள் இங்கும் அங்குமாக வலமும் இடமுமாகச் சென்றார்கள்.
ஆலகால விஷத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டினர். சிவபெருமானும் மனமிரங்கி அந்த ஆலகால விஷத்தைத் தான் உண்டார். அவருடைய கழுத்துக்குக் கீழே விஷம் இறங்காமல் இருக்க பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தைப் பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விஷம் தங்கி நீலகண்டமாக ஆனது. சிவபெருமான் அப்போது ஆடல் ஒன்றை நிகழ்த்தினார். ஆலகால விஷத்தினால் தாக்குண்டவர் போல் மயங்கி, உமாதேவியின் மடியில் சாய்ந்தார். இதனைக் கண்ட தேவர்கள் அன்று முழுவதும் உணவு, உறக்கமின்றி அவரை அர்ச்சித்திருந்தனர். அன்று ஏகாதசித் திதி. மறுநாள் துவாதசியில் தேவர்கள் சிவபெருமானைத் துதித்துப் பாராயணம் செய்தனர். அதற்கு அடுத்த திதியான திரயோதசியில் சிவபெருமான் சூலம், உடுக்கை சகிதம் ஒரு ஜாமத்திற்கு சந்தியா தாண்டவம் நடனமாடினார்.
அது கண்ட தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். தாங்களும் ஆடினர், பாடினர். தேவர்கள் சிவனின் நடனத்திற்கு ஏற்றவாறு வாத்தியங்கள் இசைத்தனர். விஷ்ணு மிருதங்கம் வாசித்தார். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதால் அவரது பெயர் சந்த்யாந்ருத்த மூர்த்தி என்று அழைக்கப்பட்டது.
சிவபெருமானின் கைலாயத்தை இங்கும் அங்கும் தேவர்கள் வலம் வந்த முறை சோம சூக்தப் பிரதட்சிணம் என அழைக்கப்படுகிறது. சிவபெருமான் திருநடனம் ஆடிய காலமே பிரதோஷமாக அறியப்படுகிறது. பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை வரும் திரயோதசித் திதியின் மாலை நேரமே பிரதோஷ காலம். வருடத்திற்கொருமுறை வரும் மகா சிவராத்திரி, வருடப் பிரதோஷமாகிறது.
வழிபாடும் பலன்களும்
சதாசிவமூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான முகத்திலிருந்து தோன்றிய வடிவமே நடராஜ மூர்த்தி. மதுரை வெள்ளியம்பலத்தில் காட்சி தரும் இவரை வணங்க, தொழில் தடைகள் அகலும். கலைகளில் சிறப்புப் பெற உதவுவார். இவருக்குச் செந்தாமரையால் அர்ச்சனையும், தேங்காய் சாத நைவேத்தியமும் திங்கள், புதன்கிழமை மாலை நேரங்களில் செய்ய, தடங்கல் அகலும். விரோதிகள் அழிவர். மதுரை நடராஜ பெருமானுக்குப் பன்னீரால் அபிஷேகம் செய்ய, கல்வியறிவு மேம்படும் என்பது நம்பிக்கை.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 19:00:22 IST