under review

64 சிவவடிவங்கள்: 11-ரிஷபாரூட மூர்த்தி

From Tamil Wiki
ரிஷபாரூட மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். உருவ நிலையில், சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாகப் புராண நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று ரிஷபாரூட மூர்த்தி.

வடிவம்

64 சிவ வடிவங்களில் பதினொன்றாவது மூர்த்தம் ரிஷபாரூட மூர்த்தி. ரிஷபாரூடம் என்பது, சிவபெருமான், உமையுடன் ரிஷப வாகனத்தில் (காளை) அமர்ந்த திருக்கோலத்தைக் குறிக்கும். சிவபெருமான், பின் இரு கரங்களில் மான் மழு ஏந்தி இடப்புறம் உமாதேவியுடனும், வலக்கரத்தில் ஜபமாலையுடன் ரிஷபத்தின் மீது காட்சியளிக்கும் தோற்றமே ரிஷபாரூடர்.

தொன்மம்

அசுரர்களால் துன்புற்ற தேவர்களும், மால், பிரம்மன் முதலியவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமானும் அவர்களிடம் தேர் ஒன்றைத் தயார் செய்யும்படியும், தான் அதில் ஏறிப் போரிட்டு முப்புர அசுரர்களை வெல்வதாகவும் வாக்களித்தார். அவ்வாறே தேவர்கள் தேர் ஒன்றினை உருவாக்கி அளிக்க சிவபெருமான் போர்கோலம் கொண்டு அந்த ரதத்தில் ஏறினார். தேரின் அச்சு முறிந்தது. உடனே திருமால் ரிஷபத்தின் வடிவேற்றுச் சிவபெருமானைத் தாங்கினார். ”என்னைத் தவிர வேறு யாரால் சிவபெருமானைத் தாங்க இயலும்” என்று திருமால் மமதை கொண்டார்.

அது அறிந்த சிவபெருமான் மாலின் ஆணவத்தை அழிக்க எண்ணினார். உடன் சிவபெருமானின் எடை அதிகரிக்க, அதனைத் தாள மாட்டாத மாலாகிய ரிஷபத்தின் வாய், செவி, மூக்கு இவற்றிலிருந்து ரத்தம் வழிந்தது. கண்கள் பிதுங்க கால்களை மடித்து ரிஷபம் தரையில் விழுந்தது. தேவர்கள் பயந்து சிவனை வேண்டித் தொழுதனர். சிவனும் மனமிரங்கினார். மாலும் முன்பு போல் வலிமை பெற்று, ஆணவம் அழிந்து சிவனைத் தொழுதார்.

சிவபெருமான், திருமாலிடம், வேண்டும் வரங்களைக் கேட்டார். அதற்கு விஷ்ணுவாகிய திருமால், “தங்களுக்கு வாகனமாக தருமதேவதை விடையாக இருப்பது போல் மாலாகிய நானும் மால் விடையென உங்களைச் சுமக்க வேண்டும். அதற்கான வலிவை எனக்குத் தர வேண்டும்” என்று வேண்டினார். சிவபெருமானும் அதற்கு உகந்து அவ்வாறே வரமளித்தார். இவ்வாறாக திருமாலாகிய ரிஷபத்தை வாகனமாக ஏற்றுச் சிவபெருமான் காட்சி அளித்ததால் சிவபெருமானுக்கு ‘ரிஷபாரூட மூர்த்தி’ என்ற பெயர் ஏற்பட்டது.

வழிபாடு

தமிழகத்தின் பெரும்பாலான ஆலயங்களில் ரிஷபாரூடர் காட்சி அளிக்கிறார். தஞ்சாவூர்-கும்பகோணம் அருகே உள்ள திருவாவடுதுறையிலும், மதுரை அருகே உள்ள விராதனூரிலும் ரிஷபாரூடர் காட்சி தருகிறார். இவரை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து பிரதோஷ காலங்களில் வழிபட எண்ணியது ஈடேறும் என்றும் சிவனை வில்வ நீரால் அபிஷேகம் செய்து பிறவிதோறும் சிவனருள் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 18:49:28 IST