under review

64 சிவவடிவங்கள்: 1-லிங்க மூர்த்தி

From Tamil Wiki
1-லிங்க மூர்த்தி

சிவபெருமான், அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் வணங்கத்தக்கவராக உள்ளார். சிவபெருமானுக்கு 64 திருவுருவங்கள் உள்ளதாக புராண நூல்கள் கூறுகின்றன. 64 சிவ வடிவங்களில் ஒன்று லிங்க மூர்த்தி.

லிங்க மூர்த்தி

ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைகின்ற செயலைக் குறிக்கும் தத்துவ வடிவமே லிங்கம். குணங்குறிகளற்ற சிவபரம்பொருள், ஆன்மாக்கள் மீது கொண்ட பெருங்கருணையால் தாங்கி நின்ற வடிவமே சிவலிங்கமாகக் கருதப்படுகிறது. ’உருவம் உண்டு; உறுப்புகள் இல்லை’ என்னும் தன்மை பெற்றதால் சிவலிங்கம் அருவுருவத் திருமேனியாகக் கருதப்படுகிறது ‘சகள நிட்களத் திருமேனி' என்றும் அழைக்கப்படுகிறது.

சிவலிங்கத்தின் வகைகள்

சிவலிங்கம் மூன்று வகைப்படும். அவை,

  • அவ்வியக்தம்
  • வியக்தம்
  • வியக்தாவியக்தம்
அவ்வியக்தம்

சிவலிங்கத் திருமேனியில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம் என அழைக்கப்படுகிறது.

வியக்தம்

சிவலிங்கத் திருமேனியில் கை, முகம் வெளிப்படுவது வியக்தம்.

வியக்தாவியக்தம்

உருவம் உண்டு; உறுப்புகள் இல்லை என்னும் தன்மை பெற்ற அருவுருவத் திருமேனிகள் வியக்தாவியக்தம் என அழைக்கப்படுகின்றன.

லிங்கத் திருமேனி விளக்கம்

சிவலிங்கத்தின் மேல் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்று அழைக்கப்படுகிறது. பீடத்தின் அடியில் உள்ள நான்கு மூலைகள் பிரம்ம பாகம் என்றும், பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலைகள் விஷ்ணு பாகம் என்றும் அழைக்கப்படுகின்றன. ருத்ர பாகம் ஆணாகவும், விஷ்ணு பாகம் பெண்ணாகவும், பிரம்ம பாகம் பேடு என்றும் அழைக்கப்படும்.

லிங்கத்தின் நடுவே சதாசிவனும், மேற்கே ஈசனும், வடக்கே பிரம்மனும், தெற்கே திருமாலும், கிழக்கே ஈசனும் உள்ளனர்.

சுயம்புலிங்கம்

தானே தோன்றிய லிங்க வகைகள், ‘சுயம்புலிங்கம்’ என அழைக்கப்படுகின்றன. மயிலாடுதுறை அருகே உள்ள இடைமருதூரில் சிவபெருமான் சுயம்புலிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். இங்கு சிவபெருமான் தானே லிங்கம் அமைத்து, தானே பூஜித்து, தானே பூஜைக்குரிய வழிமுறைகளை வகுத்தும் தந்துள்ளதாகத் தலபுராணம் கூறுகிறது.

தலச் சிறப்பு

இங்கு சிவபெருமான், மகாலிங்கேஸ்வரர் என்றும் அம்பாள், பெருநலமுலையம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்குள்ள சிவன், மும்மலங்களை அகற்றும் வல்லமை கொண்டவராகவும், பிரம்மஹத்தி முதலிய தோஷங்களை நீக்குபவராகவும் அறியப்படுகிறார். இத்தலம் பிரம்மஹத்தி தோஷப் பரிகார தலம்.

உசாத்துணை


✅Finalised Page