under review

ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
பள்ளிச் சின்னம்

தேசிய வகை ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளி.

வரலாறு

1927-ம் ஆண்டு ஹோப்புள் தோட்ட மேலாளரான பென்சனால் ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நலனைக் கருதி இப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. தொடக்கக் காலத்தில், இப்பள்ளி பலகைகளாலும் தகரக் கூரைகளாலும் கட்டப்பட்டது. தொடக்கத்தில் ஓர் ஆசிரியரைக் கொண்டு ஏழு மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட்டது. பின்னர், 1950-ல் ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப்பள்ளி என அங்கீகாரத்தைப் பெற்றது.

ஆசிரியர்கள்

பள்ளியின் பழையக் கட்டிடம் (1927)

ஏப்ரல் 19, 1950-ல் திரு. கந்தன் ஆசிரியராகப் பணியேற்று பள்ளியின் தலைமையாசிரியராகவும் பொறுப்பேற்றார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஊதியம் தோட்ட நிர்வாகம் மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை உயர்வுக்கேற்ப பள்ளியில் ஆசிரியர் எண்ணிக்கையும் உயர்வு கண்டது.

கட்டிடம்

1950-ம் ஆண்டு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பதை எட்டியது. 1950 முதல் 1964 வரை தோட்ட மேலாளர் ஜே.ப். ட்ரெய்ல்(TRAIL J.P) பள்ளியின் வாரியத் தலைவராகப் பொறுப்பேற்று, பள்ளியின் வளர்ச்சிக்கு பங்காற்றினார். 1964-ல் பொதுப்பணி இலாக்கா மூலம் இப்பள்ளி அரசாங்கப் பதிவினைப் பெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி வாரியமும் அவ்வப்போது பள்ளிக் கட்டிடத்தில் ஏற்படும் சேதங்களைச் சீர்படுத்தின.

2 வகுப்பறைகள் கொண்ட இணைக்கட்டிடம்

1983-ல் கல்வி இலாகா ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குச் சொந்தக் கணக்கு வழக்குப் பதிவை அங்கீகரித்தது. இதற்கு முன், இப்பள்ளியின் கணக்கு வழக்குகளை சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி நிர்வகித்தது. இக்காலக்கட்டத்தில் பள்ளியில் நான்கு வகுப்புகள் இருந்தன.

1984-ல் மாணவர்களின் எண்ணிக்கையில் உயர்வு கண்டதால் பள்ளியில் நிலவிய இடப்பற்றாக்குறையைக் குறைக்கும் வகையில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பள்ளியின் ஒரு பகுதியை இழுத்துக் கட்டிக் கொடுத்தது.

பள்ளியின் இணைக்கட்டிடம்

பள்ளியில் தொடர்ந்து கட்டிட அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. 1988-ல் சுங்கை திங்கி சட்டமன்ற உறுப்பினர் யூசுப் ஹசான் வழங்கிய மானியத்தின் மூலம் பள்ளியில் கருவூல மையம் கட்டப்பட்டது. 1989-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டு அறைகள் கொண்ட ஓர் இணைக்கட்டிடத்தைக் கட்டுவதற்கான உதவித் தொகை யூசுப் ஹசான் அவர்களால் கல்வி அமைச்சின் மூலம் பெறப்பட்டது. 1990-ல் யூசுப் ஹசான் அவர்களின் ஆலோசனையிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் ஆகியவற்றின் ஒத்துழைப்பிலும் இரண்டு வகுப்பறைகள், ஒரு தலைமை ஆசிரியர் அறை, ஓர் அலுவலக அறை, மூன்று கழிவறைகள் இணைக்கட்டிடத்தில் கட்டப்பட்டன. அக்டோபர் 25, 1991-ல் பள்ளியின் இணைக்கட்டிடம் திறப்பு விழா கண்டது. இப்பள்ளிக்கு அரசாங்கத்தின் ஆதரவோடு, ஒரு பாலர் பள்ளியும் அமைந்தது.

இன்றைய நிலை

தொடக்கக்காலத்தைக் காட்டிலும் குறைவான மாணவர்கள் ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயின்று வந்தாலும், இப்பள்ளி இன்றும் இயங்கி வருகின்றது.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).


✅Finalised Page